Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்யாண வரம் தரும் நல்லாத்தூர் வரதர்!

##~##

ன்னையே நினைத்துருகும் பக்தர்களுக்கு நல்லன யாவற்றையும் வாரி வழங்கும் ஸ்ரீவரதராஜராக, பெருமாள்  குடியிருக்கும் மிக அற்புதமான திருத்தலம்- நல்லாத்தூர்.  கடலூர் மாவட்டத்தில், புதுச்சேரி- கடலூர் மார்க்கத்தில் உள்ள தவளக்குப்பம் எனும் ஊரில் இருந்து, சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஊர்.

ஸ்ரீவரதனின் அருட்கடாட்சத்தால் நன்மைகள் பெருகும் ஊர், ஸ்ரீராமனின் பாதம் பதிந்ததால் பெருமை பெற்ற ஊர், இறையருள் பெருகிய காரணத்தால் நல்லோர்களும் பெருகி வாழ்ந்த ஊர் என்பதால் நல்லாத்தூர் என்னும் நல்லதொரு பெயர் கிடைத்தது போலும் இவ்வூருக்கு. புராணங்களில் சொர்ணபுரி எனச் சிறப்பிக் கப்படுகிறது இந்தத் தலம்.

ஆதிகாலத்தில் இங்கு வசித்த அன்பர்கள் பலரும் காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்கள். புராணங்கள் சொல்லும் வரதரின் கதை களைக் கேட்டும், படித்தும் மகிழ்ந்த அந்த அன்பர்கள், அடிக்கடி காஞ்சிக்குச் சென்று அவரைத் தரிசித்து வழிபட்டு வருவார்கள்.

'எப்பேர்ப்பட்டவர் வரதர்... எத்தனை பேரருளாளன் அவர்? வரம் கொடுக்கும் கருணைத் தன்மையையே திருப்பெயராகக் கொண்ட அந்தப் பெருமாளை நாமும் ஒரு முறையாவது தரிசிக்க மாட்டோமா?’ என்று ஏங்கித் தவித்த- காஞ்சிக்கு சென்று ஸ்ரீவரதரை தரிசிக்க இயலாத அன்பர்களும் நல்லாத்தூரில் இருந்தார்கள். அவர்கள், தங்களின் மனத்தில் ஏற்கெனவே குடிகொண்டு விட்ட ஸ்ரீவரதராஜ பெருமாளை, தங்கள் ஊரிலும் கோயில் கட்டி குடியிருத்த விரும்பினர். இதுவும் ஸ்ரீவரதரின் விளையாட்டு என்றே சொல்ல வேண்டும். அவரருளால் நல்லாத்தூரில் திருக் கோயில் எழுப்பப்பட்டது. ஸ்ரீகாஞ்சி வரதர், இந்த நல்ல ஊரில் அர்ச்சா மூர்த்தியாய் அழகு கோலத்தில் எழுந்தருளினார்.

'உரைக்க வல்லாருக்கும் நினைக்க வல்லாருக்கும் வைகுண்டம் ஆகும் தம்மூரெல்லாம்’ எனும் ஆன்றோர் வாக்குப்படி பெரும் சிறப்பு பெற்றது நல்லாத்தூர்.

எழிலுற அமைந்திருக்கிறது திருக்கோயில். உள்ளே நுழைந்து, கொடி மரத்தைத் தரிசித்து வணங்கிவிட்டு, அந்த இடத்தில் இருந்து பார்த்தால், கருவறையில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார் ஸ்ரீவரதராஜ பெருமாள். அவரின் முக அழகை இன்னும் நெருக்கத்தில் தரிசிக்கும் ஆவலில் அர்த்த மண்டபம் நோக்கி நகர்ந்தால்... அந்த பச்சைக் கற்பூர வாசனையும், துளசியின் நறுமணமும் நம் சுவாசத்தில் நிறைய... அக்கணத்தில், 'வரதனைத் தரிசிப்பதே வரதன் தந்த பெரும் வரம்’ என பரவசத்தில் துள்ளுகிறது இதயம்! அவருக்கு இணையாக நின்று அருள்பாலிக்கிறார்கள் ஸ்ரீதேவியும், பூதேவியும்!

மூலவருக்கு முன்புறம் ஸ்ரீலட்சுமி நாராயணரின் மிகப்பழைமையான விக்கிரகத்தையும் தரிசிக்கலாம்.

கடலூருக்கு அருகிலுள்ள திருவஹீந்திபுரம் எனும் தலத்துக்கு அபிமான தலமாகத் திகழ்கிறது இந்த நல்லாத்தூர். திருவஹீந்தி புரத்துக்கு வரும் அடியார்கள், இந்தத் தலத்துக்கும் விரும்பி வந்து தரிசித்துச் செல்வார்களாம். திருமங்கையாழ்வார் மற்றும் ஸ்வாமி தேசிகர் ஆகியோரும் இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்து சென்றதாகச் சொல்வர். 'இங்கிருக்கும் இவர்களின் விக்கிரகத் திருமேனிகளே அதற்கு சாட்சி’ என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

மேலும், முற்காலத்தில் இந்தக் கோயிலுக்கான உத்ஸவ மூர்த்தி விக்கிரகங்கள் திருவஹீந்திபுரம் கோயிலில் இருந்துதான் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அதாவது, மூல திவ்ய தேசத்தின் சாந்தித்தியத்தை அபிமான தலத்தின் உத்ஸவ மூர்த்திகள் பிரதிபலிக் கிறார்கள் என்பது அதன் உள்ளார்த்தம்.

கருவறையில் இருந்து அர்த்த மண்டபம் வந்து பிராகாரத்திலுள்ள தாயார் சந்நிதியை சேவிக்கிறோம். எல்லோரையும் காத்தருளும் ஆதிமாதாவாகவும், கருணை புரிவதில் நிகரில்லாதவளாகவும் விளங்கும் அன்னை, இங்கே ஸ்ரீபெருந்தேவி தாயார் என்ற திருப் பெயருடன் அருள்பாலிக்கிறார்.

இந்தத் தாயாருக்கு, தொடர்ந்து எட்டு வெள்ளிக் கிழமைகள் அல்லது நான்கு பஞ்சமி தினங்களில் அர்ச்சனை செய்து வேண்டிக்கொண்டால், விரை வில் திருமண பாக்கியம் கைகூடும் எனச் சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

தாயாரின் அருகிலேயே ஸ்ரீகஜலட்சுமியையும் தரிசிக்கலாம். அனைத்து செல்வங்களையும் தனது கடைக்கண் பார்வை வீச்சிலேயே அருளும் வல்லமை பெற்றவள் இந்த தேவி. ஸ்ரீகஜலட்சுமியை தினமும் தரிசிக்க, கடன்கள் தீரும் என்பது மூத்தோர் வாக்கு. தொடர்ந்து, பிராகார வலம் வந்தால் தனிச் சந்நிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீதுர்கையை தரிசிக்கலாம்.

ஸ்ரீகருடாழ்வாரும் இங்கே விசேஷம். இவர், தன்னுடைய திருமேனியில் எட்டு நாகங்களோடு காட்சி தருகிறார். இவருக்கு சுவாதி நட்சத்திர திருநாட்களில் திருமஞ்சனம் செய்விக்கின்றனர்.

குலோத்துங்க சோழன் காலத்தில் எழுப்பப்பட்ட கருவறையும் ஸ்ரீலட்சுமி நாராயணருக்குக் கொடுத்த சில நிவந்தங்கள் பற்றிய கல்வெட்டும் இந்தத் திருக்கோயிலில் உள்ளதாகச் சொல் கிறார்கள்.

அர்த்த மண்டபத்தில் திரிபங்கி கோலத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீராமன். முழங்கால், இடுப்பு, கழுத்து எனும் மூன்று இடங்களையும் சற்றே ஒயிலாக வளைத்து பேரழகராக ஜொலிக்கிறார் இவர்.

ராவணனை வீழ்த்தியபின், தன்னை தரிசிக்க வேண்டுமென்று தவித்து, ஏங்கியிருந்த பாரத தேசத்தின் அனைத்து மக்களையும் பார்க்கும் எண்ணத்தில், சிறு சிறு கிராமங்கள் முதல், பெரிய நகரங்கள்

தோறும் சீதாப்பிராட்டியுடன் திருவலம் வந்தாராம் ஸ்ரீராமன். அப்போது, அழகு மூர்த்தியாக திருக்கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீவரதராஜ பெருமாளைத் தரிசித்து ஆனந்தம் அடையலாம் என்று இந்தத் தலத்துக்கும் வந்தாராம்.

ஊரார் திரண்டு நின்று ராம நாமம் சொல்லி அவரை வரவேற்றனர். அத்துடன், ''தங்களின் திருப் பாதங்களைப் பதித்து விட்டுச் செல்லுங்கள். நாங்கள் அனுதினமும் அதை பூஜித்து மகிழ்வோம்'' என அன்புடன் கேட்டுக்கொண்டனர்.

ஸ்ரீராமனும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, தமது திருவடியை இங்கே பதித்தார். பிறகு, அவர் அருகிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் தமது தினசரி கடமைகளை மேற்கொண்டார் என்று இந்தத் தலம் பற்றி சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.

ஸ்ரீராமனுக்கு அருகில் அமர்ந்து, தம்முடைய இடது கையில் ஸ்ரீராமனின் சூரியவம்ச கொடியை ஏந்தியும், வலது கையால் வாய் மூடி பணிவாகவும் காட்சி தந்தருள்கிறார் ஸ்ரீவிநய ஆஞ்சநேயர்.

இந்தத் தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஸ்ரீஆண்டாள் கல்யாணம். ஒவ்வொரு வருடமும் போகிப்பண்டிகையன்று இந்தத் திருத்தலத்தில் ஆண்டாள் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடை பெறுகிறது. அற்புதமான அந்த வைபவத்தைத் தரிசிக்க, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மாலை களுடன் கூடிவிடுவர்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்து, பெருமாளுக்கு ஆசையோடு மாலை இட்ட கோதை ஆண்டாள், இந்தத் திருத்தலத்தில்... திருமணத்துக்காகக் காத்திருக்கும் பக்தர்களுக்கு, தனது ஆசியுடன் மணமாலையை அருளும் வரப்ரசாதியாக திகழ் கிறாள். மாலையைப் பெற்று செல்லும் பக்தர்கள், வெகுவிரைவில் பிரார்த்தனை நிறைவேறி திருமணம் இனிதே நடந்தேறியதும்,  மறுபடியும் இங்கு வந்து கண்களில் நீர் மல்க நன்றி தெரிவித்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

அதேபோன்று ஒவ்வொரு வருடமும் நிகழும் சீதா கல்யாணத்தின்போதும், இந்தக் கோயிலுக்கு வந்து ஸ்ரீராமர்-சீதை காப்பு கயிறு கட்டிச் செல்பவர்களுக்கும் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

நாமும் நல்லாத்தூர் சென்று, நல்வாழ்க்கை அமைய வரம் பெற்று வருவோம்.