Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆரூடம் அறிவோம்:12

ஜோதிட புராணம்

- சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

டல் மற்றும் மன நலம், பொருளாதாரம், நல்லொழுக்கம் ஆகியன மனித வாழ்வில் மிக முக்கியமான அம்சங்கள். ஆதிபராசக்தியின் அம்சமாகத் திகழும் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந் தேவியரும் ஆரோக்கியம், பொருட்செல்வம், கல்வியறிவு ஆகியவற்றை நல்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.  

ஜோதிடரைச் சந்திக்கும் அன்பர்கள் பொதுவாக அறிய விரும்புவதும் தங்களின் ஆரோக்கியம்- ஆயுள், தொழில்- பொருளாதாரம், மன அமைதி ஆகியவை பற்றியதாகவே இருக்கும்.

இந்த அடிப்படை அம்சங்கள் நன்கு அமைவதற்குக் காரணமான கிரக மூர்த்திகள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் என்பார்கள்.

சூரியன் - ஜீவராசிகளின் ஜீவாதாரமாகத் திகழ்பவன் சூரியன். அனைத்து ஜீவன்களிலும் ஆத்மாவாகத் திகழ்பவன் அவன்.

ஜோதிடத்தில் காரகத்துவம் என்பது பற்றி அறிவது அவசியம். நவக்கிரகங்கள் நம் வாழ்க்கையில் எந்தெந்த சௌபாக்கியங்களை வழங்குகிறார்கள், வாழ்க்கையின் எந்த அம்ஸத்துக்கு அதிபதியாக இருந்து அருள்பாலிக் கிறார்கள் என்பதைக் குறிப்பதே காரகத்துவம்.  

சூரியனை ஆன்மகாரகன் என்றும் பித்ருகாரகன் என்றும் சிறப்பிக்கிறது ஜோதிடம். உடல்நலம் பற்றிய விபரங்களில்... தலையின் ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்துகிறவன் அல்லது அதைத் தருபவன் சூரியன். மூளை, கண் பார்வை, மனநிலை, அறிவாற்றல் ஆகியவை ஆரோக்கியமாக இருப்பதற்கு சூரியன் காரணமாகிறான்.

பிதா, ஆத்மா இரண்டுக்கும் சூரியனே அதிபதி. ஒருவருக்கு மனோபலம், தைரியம், வீரம், செல்வாக்கு, பிரதாபம், சரீரசுகம் ஆகியவற்றை அருள்பவன் சூரியன். தானம், தவ வலிமை, ஞானம் ஆகியவற்றுக்கும் சூரியனே காரகன்.

'சக்ஷே£, சூர்யோ அஜாயத’ என்ற புருஷஸ¨க்த வாக்கியத்தில் இருந்து சூரியனே நமது புத்தியின் அதிபதி என அறியலாம்.

சந்திரன்- சந்திரன் ஜோதிட சாஸ்திரத்தில் மாத்ருகாரகன் எனக் குறிப்பிடப்படுகிறான். அதாவது, தாயாரால் ஏற்படுகின்ற சௌபாக்யத்தைத் தருபவன் எனப் பொருள். 'சந்திரமா மனஸோஜாத்’ என்று புருஷ ஸ¨க்தத்தில் போற்றப்படும் சந்திரன் மனத்துக்கு அதிபதி.  உடல் வலிமை, மனோ வலிமை இரண்டையும் அருள்பவன்.

அதேபோன்று உணவு, உடை, வீடு, வாகன வசதிகளைத் தருபவன்

சந்திரன். சரீர அழகு, ஆரோக்கியம் ஆகியவற்றுக்குக் காரகன் சந்திரன். புகழ், கடல் கடந்த பயணங்கள், மன உறுதி, மனித உணர்வுகள் ஆகியவற்றை நிர்ணயிப்பவனும் சந்திரனே. ''செல்வத்தையும் மன உறுதியையும் தருபவன் சந்திரன்’ என்கிறது யஜுர் வேதம். 'விதி கெட்டில் மதியைப் பார்’, 'விதியை மதியால் வெல்லலாம்’ என்று பழமொழிகள் உண்டு. இதில் 'மதி’ என்பதற்கு சந்திரன் என்றும் பொருள்கொள்ளலாம். ராசிச் சக்கரத்தில் அமையும் கிரகங்கள் வலிமை இல்லாமல் இருந்தால், சந்திரனை லக்னமாகக் கொண்டு ஜாதக பலன்களை நிர்ணயிக்க வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு முகூர்த்தம் நிர்ணயிக்க சந்திரனை ஆதாரமாக வைத்தே கணக்கிடுகின்றனர்.

செவ்வாய்- அங்காரகன், மங்களன், பௌமன், குஜன், உக்கிரன் என்றெல்லாம் போற்றப்படும் கிரகமூர்த்தி. செவ்வாயை, 'பிரார்த்ருகாரகன்’ எனச் சொல்லும் ஜோதிடம். ஒருவருடைய சகோதர- சகோதரி உறவுகளை பலப்படுத்துபவன் செவ்வாய்.

மனித உடலில் இதயம், ரத்த ஓட்டத்தை பலப்படுத்துபவன் செவ்வாய். உடல்- மன உறுதியை அளிப்பவன். பூமி, வீடு, நில புலன்கள் ஆகியவற்றுக்கும் செவ்வாய் அதிபதி. நீண்ட மண வாழ்க்கை அருள்பவன் செவ்வாய். உடல் வலிமைக்கும், வீரத்துக்கும் இவனே காரகன். செவ்வாய் பலமாக இருக்கும் ஜாதகன், ராணுவம், காவல்துறை போன்றவற்றில் பணியாற்றி புகழ் பெறும் வாய்ப்பு உண்டு. விளையாட்டுத்துறையில் புகழ்பெற செவ்வாய் பலம் உதவும்.

செவ்வாய் தோஷம்: ஒருவர்  ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனக் குறிப்பிடப்படுகிறது. 'இந்த தோஷம் இருப்பவர்களுக்கு திருமணம் எளிதில் ஆகாது. செவ்வாய் தோஷம் உள்ள ஒருவருக்கு அதே தோஷம் உள்ளவரையே திருமணம் செய்விக்க வேண்டும்; இல்லையெனில் வீண் அபவாதங்கள் நிகழ வாய்ப்பு உண்டு’ என்பார்கள். ஆனால், செவ்வாய் தோஷத்தை நிர்ணயிக்க... செவ்வாயின் ஸ்தான பலனை வைத்து, 16 விதி விலக்குத் தரப்பட்டுள்ளது. அதன்படி அமைந்தால் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்று அறியலாம்.

* கடக லக்னம் - சிம்மலக்னம் ஆகிய இரண்டு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த வீட்டிலிருந்தாலும் செவ்வாய் தோஷமில்லை.

* செவ்வாய் இருக்கும் 2-ஆம் இடம் மிதுனம் அல்லது கன்னியாகில் தோஷமில்லை

* செவ்வாய் இருக்கும் 4 - ஆம் இடம் மேஷம், விருச்சிகமானால் தோஷமில்லை.

* செவ்வாய் இருக்கும் 7-ஆம் இடம் கடகம், மகரமானால் தோஷமில்லை.

* செவ்வாய் இருக்கும் 8-ஆம் இடம் தனுசு, மீனமாகில் தோஷமில்லை.

* செவ்வாய் இருக்கும் 12-ஆம் இடம் ரிஷபம், துலாம் ஆனால் தோஷமில்லை.

* சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.

* குருவுடன் சேர்ந்து செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது.

* சந்திரனுடன் சேர்ந்திருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

* புதனுடன் சேர்ந்தாலும், புதன் பார்த்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

* சூரியனுடன் சேர்ந்தாலும் சூரியன் பார்த்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

* செவ்வாய் அமைந்துள்ள ராசியின் அதிபதி லக்னத்துக்கு 1, 4, 5, 7, 9, 10 ஆகிய வீடுகளிலிருந்தால் தோஷம் கிடையாது. உதாரணமாக ஒரு கும்ப லக்ன ஜாதகருக்கு கும்பராசியில் செவ்வாய் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவரது ஜாதகத்தில் சனி துலா ராசியில் இருப்பதாகக் கொள்வோம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் செவ்வாய் தோஷம் என்று தோன்றும். ஆனால் கும்ப ராசி அதிபதியான சனி லக்னத்திற்கு 9வது வீடான துலாத்தில் இருப்பதால் செவ்வாய் தோஷம் இல்லை என்பதை அறியலாம்.

* 8, 12-ல் அமைந்த செவ்வாய் இருக்கும் ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம் என்றால் செவ்வாய் தோஷம் இல்லை.

* செவ்வாயின் ஆட்சி வீடு மேஷம், விருச்சிகம் ஆகியவை. உச்ச வீடு மகரம். எனவே மேஷம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகன் அல்லது ஜாதகிக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்பதை அறியலாம்.

* சனி, குரு, கேது ஆகிய கிரஹங்களோடு சேர்ந்திருந்தாலோ அந்த கிரஹங்கள் பார்த்தாலோ செவ்வாய் தோஷம் கிடையாது.

* செவ்வாயின் நட்பு கிரஹங்கள் சூரியன், சந்திரன், குரு. இவர்களது வீடான சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.

இவை தவிர, ஒரு ஜாதகன் அல்லது ஜாதகிக்குத் திருமணம் நிகழும் முன்பே செவ்வாய் தசை நடந்து முடிந்துவிட்டால் செவ்வாய் தோஷம் பாதிக்காது என்பார்கள். உதாரணமாக மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜனன கால தசை, செவ்வாயாக அமையும். அவர்களது 6-7 வயதுக்குள் செவ்வாய் தசை நடந்து முடிந்துவிடும். இவர்களுக்கு திருமண காலத்தில் செவ்வாய் தோஷ பாதிப்பு இருக்காது என்பார்கள்.

ரோஹிணி, அஸ்தம், திருவோண நட்சத்திரத்தில் பிறக்கிறவர்களுக்கு ஜனன கால தசை, சந்திரதசை. இது 10 வருஷம். அடுத்து செவ்வாய் 7 வருடங்கள். எனவே, இவர்களுக்கு, 17 வயதுக்குள் செவ்வாய் தசை முடிந்து விடுவதால் திருமண காலத்தில் செவ்வாய் தசை பாதிப்பு இராது.

செவ்வாய் தோஷ விதிவிலக்கு காரணங்களை மொத்தமாகக் கருத்தில் வைத்துப் பார்த்தால் செவ்வாய் தோஷம் பற்றிய பயம் நீங்கும். 12 ராசிகளில் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய 6 ராசிகளில் செவ்வாய் இருந்தால் அது, லக்னம் 2, 4, 7, 8, 12 ஆக இருந்தாலும் செவ்வாய் தோஷம் கிடையாது. இதை ஜாதகத்தைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்ளலாம்.

இதேபோன்று மற்ற விதிவிலக்குக் காரணங்களையும் வைத்துப் பார்த்தால் நூறு ஜாதகத்தில் 5 ஜாதகர்களுக்குத்தான் செவ்வாய் தோஷம் இருக்கும். எனவே ஜாதகத்தைப் பார்த்து 7, 8ல் செவ்வாய் இருப்பதால் செவ்வாய் தோஷம்; திருமணம் அமைவது கடினம் என பயம் கொள்ள வேண்டாம்.

புதன் - வித்யாகாரகன் எனும் சிறப்புக்கு உரியவன். கணிதம், மருத்துவம், ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றுக்கு அதிபதி புதன். இயல், இசை, நாடகம், ஓவியம் ஆகிய கலைகளின் அதிபதியும் புதனே. கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், துறவிகள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் ஜாதகத்தில் புதன் ஆட்சியாக இருப்பதைக் காணலாம். கவிக்கும் கலைக்கும் நாயகன் புதன்.

மனித உடலில் நரம்பு மண்டலத்தின் ஆரோக்யத்துக்கு காரணமாகிறவன் புதன்தான். புதனுக்கு மாதுல காரகன் என்று பெயருண்டு. தாய் மாமனுடன் உள்ள நல்லுறவு பற்றிய உண்மைகள் புதனின் பலம் கொண்டு அறியலாம். குரு, சுக்கிரன், சனி, குரு, கேது ஆகிய கிரஹங்களின் காரகத்வம் பற்றி அடுத்த அத்தியாயத்தில் தெரிந்துகொள்வோம்.

- தொடரும்...