Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காசியில் பாதி ‘கல்பாத்தி’!

கேரளக் கோயில் தரிசனம்!

- ஜே.வி.நாதன்

கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது கல்பாத்தி. இங்கு கேரளாவின் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது.

தமிழகத்தில், மயிலாடுதுறையைச் சேர்ந்த பிராமண விதவையான லட்சுமிப் பாட்டி, தன் தள்ளாத வயதில் காசிக்குப் போனார். அங்கிருந்து திரும்பி வரும்போது அவர் ஒரு 'ஜ்யோதிர்’ லிங்கத்தைக் கொண்டு வந்தார். வழியில்... நதிக் கரைகளில் தங்கி, சிவலிங்கத்தை வைத்து பூஜிப்பதுமாக இருந்தார். இப்படியாக, பாலக்காடு - கல்பாத்திக்கு வந்தவர், அங்கிருந்த நிலா பாகீரதி ஆற்றங்கரையில் ஜ்யோதிர் லிங்கத்தை வைத்து வழிபட்டார். அங்கு வந்த பொதுமக்களும் வணங்கி வழிபட்டனர். சிலநாட்கள் கழித்து அங்கிருந்து கிளம்பும் வேளையில், அந்த சிவலிங்கம் அசையவே இல்லை.

'இந்த சிவலிங்கம் இருக்கவேண்டிய இடத்தை, அந்த சிவபெருமான் தேர்வு செய்துவிட்டார்’ என உணர்ந்து கொண்டார் லட்சுமிப் பாட்டி. அப்போது பாலக்காடு பகுதியை ஆட்சி செய்த மன்னன் இட்டி கோம்பி அச்சன் என்பவனைச் சந்தித்து, முழு விவரமும் சொல்லி, அந்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த இடத்தில் கோயில் எழுப்ப வலியுறுத்தினார். அத்துடன் தன்னிடம் இருந்த 1320 தங்கக் காசுகளையும் அவனிடம் தானமாகத் தந்தார். இதைக் கேட்டு உடனே சம்மதித்த மன்னன், கல்பாத்தியைச் சுற்றியுள்ள ஏராளமான நிலங்களையும் கோயிலுக்குத் தானமாக வழங்கினான். அதுவே, இன்றைக்கும் நாம் தரிசிக்கும் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயில்.

கோயிலையும் கோயில் சொத்துக்களையும் பாதுகாக்கவும் பராமரிக்கவும் அரசவையில் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த சேகரிவர்மாவை நியமித்தான் மன்னன். அதன்படி கோயிலைச் செவ்வனே பராமரித்து வந்தார் சேகரிவர்மா. இதையடுத்து, சேகரிவர்மாவின் சந்ததிகள் தலைமுறை தலைமுறையாக, கோயில் நிர்வாகத்தை ஏற்றுச் செயல்பட்டு வருகின்றனர்.

இட்டி கோம்பி அச்சன் என்னும் அரசனுக்குப் பிறகு, அவனுக்குப் பின்னால் வந்த அரசர்கள் மற்றும் திப்பு சுல்தான், அவனுக்குப் பின்னால் வந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எனப் பலரும் கோயில் பராமரிப்பில் உறுதுணையாக இருந்தனர் என்கிறது ஸ்தல வரலாறு.

மூலவர் சந்நிதியைச் சுற்றி ஸ்ரீமகா கணபதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீகங்காதரன், ஸ்ரீவள்ளி\தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீசூரியனார், ஸ்ரீநவக்கிரக சந்நிதி, மற்றும் நாக தேவதைகள் உள்ளிட்ட ராகு\கேது சந்நிதிகள் அழகாக அமைந்துள்ளன. நவக்கிரகங்கள் தம்பதி சமேதராகக் காட்சி தருவது இங்கு சிறப்பு என்கின்றனர்.

''நாக மற்றும் ராகு\கேது தோஷங்கள் அகலவும் சந்தான பாக்கியம் ஏற்படவும் ராகு - கேது சந்நிதியில் பால் மற்றும் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்வது விசேஷம்! சர்ப்ப பயம் கொண்டோர், புத்திர பாக்கியம் வேண்டுவோர், வெள்ளியில் சிறிய பாம்பு, வெள்ளியிலேயே சிறிய (பொம்மை) முட்டைகள், புற்று ஆகியவை செய்து  (இங்கு விற்கப்படுகின்றன) இந்தச் சந்நிதியில் வைத்துப் பிரார்த்தித்தால், பலன் நிச்சயம்!'' என்றார் குணசேகர ஆச்சார்யர்.

நவம்பர் மாதம் பத்து நாள் ரத உற்ஸவம் இங்கு மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. கேரள மாநிலத்தின் புகழ் பெற்ற,  திருவிழாக்களில் இதுவும் ஒன்று. விழாவின் முதல் நான்கு நாட்கள், வேத பாராயணம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கடைசி மூன்று நாட்களில் அலங்கரிக்கப்பட்ட அழகிய தேர்களில் ஸ்வாமிகள் திருவீதியுலா வருவர். இதனைத் தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிப் பரவசமாவார்கள்!

உற்ஸவ நிறைவு நாளில், நள்ளிரவுக்குப் பின் ஸ்வாமிகளின் திருவிக்கிரகங்களை ரதங்களிலிருந்து இறக்கி, மலர்களால் அற்புதமாக அலங்கரித்த பல்லக்குகளில் ஆலயத்துக்கு  பவனியாகக் கொண்டு செல்வது வழக்கம்! கார்த்திகை மாத முதல் தேதியில் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும்.

தவிர, 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமக நாளில், ஸ்வாமி புறப்பாடு, ஊர்வலம், தீர்த்தவாரி என தமிழகத்தில் நடப்பது போலவே இங்கேயும் சிறப்புற நடைபெறும், மகாமக திருவிழா!

நிலா பாகீரதி ஆற்றின் கரையில் அமைந்த இந்தத் தலத்தை,  'காசியில் பாதி கல்பாத்தி!’ என்பார்கள். அதாவது, காசியில் உள்ள ஸ்ரீவிஸ்வநாதரை வணங்கினால் கிடைக்கிற புண்ணியத்தில் பாதி புண்ணியம், கல்பாத்தி ஸ்ரீவிஸ்வநாதரைத் தரிசித்தால் கிடைக்கும் என்பது ஐதீகம்!

ஆலயத்தின் தலைமை குருக்களான ராஜலிங்க சிவாச்சார்யரைச் சந்தித்தோம். அவர் சொன்னார்:

''சேகரிவர்மாவின் வம்சாவளியினரான குமாரவர்மா என்பவர் தற்போது ஆலய டிரஸ்டியாக இருக்கிறார். சற்றுத் தொலைவில் உள்ள 'அகத்தே தரை’ என்ற ஊரில் அவர்கள் குடும்பம் வசிக்கிறது. இங்கேயுள்ள ஸ்ரீமகா கணபதிக்கு, மரத்தால் ஆன புதிய தேர் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அதிகாலை 5 மணிக்குக் கோயில் நடை திறந்து, காலை 10 மணிக்கு நடை மூடப்படும். மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சார்த்தப்படும். கேரளாவில் பள்ளியறை பூஜை நடைபெறும் ஆலயம் இது'' என்கிறார் கோயிலின் தலைமை குருக்கள் ராஜலிங்க சிவாச்சார்யர்.

நவக்கிரகங்கள் ஈசான மூலையில்தான் ஆலயங்களில் இருப்பது வழக்கம். இங்கு இந்திரன் - கிழக்கு, அக்னி  - தென் கிழக்கு திசைகளில் இருப்பதும் இவற்றின் மத்தியில் நவக்கிரகங்கள். 'சக்தி’ சமேதராக காட்சி தருவதும் விசேஷம். கோயிலின் ஸ்தல விருட்சம் - அரச மரம்.

ஸ்வாமி இங்கு 'மிருத்யுஞ்சய மூர்த்தி’யாகத் திகழ்கிறார்.  அதாவது, பக்தர்களுக்கு நோய் நொடிகள் இல்லாதபடிக்கு அனுக்கிரகம் செய்து, குறைவாக உள்ள ஆயுளை நீட்டித்துத் தருபவர். எமதர்மனை சிறிது காலம் அருகில் வராதபடிக்குச் செய்பவர். இவரை வணங்குவோரின் ஆயுள் கூடும்.

இங்கு ஸ்வாமிக்கு தினம் காலையில் 'மிருத்யுஞ்சய ஹோமம்’ நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு, ஸ்வாமியை தரிசித்தால், ஆரோக்கியம், ஆயுள் விருத்தி, சுக வாழ்க்கை அனைத்தும் கிட்டும்.

இங்கு உறைந்திருக்கும் அம்பாள்,  கல்யாண வரம் அருளும் கருணைத் தாய்! ஸ்வாமியையும் அம்பாளையும் மனதாரப் பிரார்த்தித்தால், சகல நோய் நொடிகளும் அகன்று வாழ்க்கையில் எல்லா சௌபாக்கியங்களும் கிடைக்கும்!

படங்கள்: வி.ராஜேஷ்