Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஞ்சி தேவியின் சிலிர்ப்பூட்டும் கதை

அடியவரை ரட்சிக்கும் அம்பிகையே காமாட்சி!

அழியாத அற்புதக் கோயில்!

- பி.என்.பரசுராமன்

தூயவர்களின் உள்ளம் போலக் கயிலாய மலை ஜொலித்துக் கொண்டு இருந்தது. தேவர்கள் அனைவரும் கயிலை நாதரிடம் தங்கள் கவலையைச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

"ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியே! அசுரன் பந்தகனின் கொடுமை தாங்கவில்லை. பிரம்மாவிடம் இருந்து பெற்ற வரத்தால், மதம்பிடித்த யானை போல அலைகிறான். தன்னுடன் போரிடுபவர்களை மந்திர சக்தியால் செயலற்றுப் போகச் செய்கிறான். எங்களால் அவனை எதிர்த்து நிற்க முடியவில்லை. தாங்கள்தான் காப்பாற்ற வேண்டும்'' என்று வேண்டினார்கள் தேவர்கள்.

''தேவர்களே! உங்களைக் காக்கக்கூடியது அம்பிகையின் அருள்தான். அவளைத் துதியுங்கள். நான் அமரும் ஆசனத்தின் கீழே ஒரு துவாரம் இருக்கிறது. அதில் புகுந்து செல்லுங்கள். முடிவில் உள்ள குகையில் பந்தகனின் பார்வை படாது. அப்படிப் போகும் நீங்கள் அடைவது, பிரளய காலத்திலும் அழியாத 'பிரளயஜித்’ என்னும் தலம். 'ரக்ஷா தாண்டவ க்ஷேத்திரம்’ என்ற பெயரையும் கொண்டது அது. உலகையே தன் வடிவாகக் கொண்ட அம்பிகையின் நாபி ஸ்தானம் அது.

இடுப்பின் மீது அணியும் மேகலாபரணம், 'காஞ்சி’ என்றும் அழைக்கப்படும். அதனால் அந்தத் தலம் 'காஞ்சிபுரம்’ எனப்படும். அங்கே கல்வி தரும் சரஸ்வதியையும் செல்வம் தரும் லட்சுமியையும் தனக்குள்ளே கொண்டவளாக அம்பிகை இருப்பாள். அன்னையின் இருப்பிடமான அதற்கருகே ஓர் ஏகாம்ரம் (ஒற்றை மாமரம்) இருக்கும். அதில் கிளி வடிவத்தில் இருந்து, அம்பிகையைத் துதியுங்கள்.

அவளால் பந்தகனிடம் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். மனிதர்களுக்கும் அம்பிகையின் அழகுத் திருவடிவம் கிடைக்கும். செல்லுங்கள் காஞ்சிபுரத்துக்கு...'' என்றார்.

'பந்தகனிடமிருந்து விடுதலையே கிடைக்காதா என்று தவித்த நமக்கு, சிவபெருமான் வழிகாட்டிவிட்டார். அத்துடன், உலகுக்கெல்லாம் நலம் விளைவிப்பதற்காக திவ்யமான வடிவம் கொள்ளத் தீர்மானித்துவிட்டாள் அம்பிகை. ஆஹா... என்ன பாக்கியம்!’ என்று மெய்சிலிர்த்த தேவர்கள், சிவனை வணங்கி, அவர் சொன்ன வழியில் புகுந்தார்கள். காஞ்சியில் வெளிப்பட்டார்கள்.

இந்திரன் உட்பட அத்தனை தேவர்களும் கிளி வடிவில் ஏகாம்ரத்தில் இருந்து அம்பிகையைத் துதித்தார்கள். சுகாச்சார்யார் உபதேசம் செய்த அம்பிகை மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு இருந்தனர்.

தேவர்களின் தவமும் பக்தியும் உலகத்துக்கே தாயான அம்பிகையின் உள்ளத்தில் அருள் அலைகளை வீசச் செய்தன. 'தேவர்களுக்குப் பந்தகனிடம் இருந்து விடுதலை பெற்றுத் தர வேண்டும். அதற்கு முன், இவர்களுக்கு வேறோர் அனுக்கிரகம் செய்ய வேண்டும்’ என்று தீர்மானித்தாள் அம்பிகை.

அவ்வளவுதான்... பிரளயம் உண்டாகிவிட்டது. அண்டசராசரங்கள் அனைத்தும் அழிந்தன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள், ''அற்புதம்! காஞ்சியை ''பிரளயஜித் க்ஷேத்திரம்’ என்று சிவபெருமான் சொன்னது எத்தனை உண்மை! உலகத்தையே அழிக்கும் ஊழி வெள்ளம் கூட, இந்த இடத்தைத் தீண்டவில்லையே!

அம்பிகை மனது வைத்தால், அடியார்களை எந்த இடரும் தொடாது என்பதைப் புரிய வைத்துவிட்டாள். பந்தகனின் அழிவைக் காண வந்த நம்மை, உலக சம்ஹாரத்தையே காணும்படியாகச் செய்துவிட்டாளே!''  என்று வியந்தனர்.

பிரளயம் அடங்கியது. ஒலியும் ஒளியும் ஒன்றாகச் சேர்ந்த ஓர் ஒப்பற்ற வடிவில், இருபத்துநான்கு பிரகாசமான கதிர் வடிவத் தூண்கள் கொண்ட மண்டபத்தின் நடுவில் தேவர்களுக்கு தேவி தரிசனம் தந்தாள்.

இருபத்து நான்கு எழுத்துகளைக் கொண்ட காயத்ரி மகாமந்திரமே, அங்கு மண்டபமாக இருந்தது. அதன் நடுவிலேயே, தோன்றினாள் அன்னை. அவள் இடக்கண்ணில் மகாவிஷ்ணுவும் வலக்கண்ணில் பிரம்மதேவரும் நெற்றிக்கண்ணிலிருந்து ருத்ரரும் தோன்றினர்.

''பந்தகனிடமிருந்து எங்களைக் காப்பாற்றம்மா!'' என்று வேண்டினர் தேவர்கள்.

பிரளயத்தின் மூலம் அனைத்தையும் அழித்த அம்பிகை, மறுபடியும் சிருஷ்டியைத் தொடங்கியதும், உலக இயக்கத்தையும் விட்ட இடத்திலிருந்தே தொடங்கிவிட்டாள். அமரர்களை அல்லல்படுத்திய பந்தகனும் பழையபடியே உயிர் பெற்றுவிட்டான். உயிர் பெற்ற அவன், தேவர்களைத் தேடி அலைந்து கொண்டிருந்தான்.

 க - பிரம்மா; அ - சிவன்; ம - மகாவிஷ்ணு. இம்மூவரையும் தன் கண்ணிலிருந்து உண்டாக்கியதால், அம்பிகையைக் 'காமாட்சி’ என அழைத்தனர் தேவர்கள்.

தேவர்களுக்குத் தன் அருள் வடிவத்தைக் காட்டிய தேவி, குரல் இனிமையையும் உணர்த்துவதற்காக மலர்வாய் திறந்தாள். ''தேவர்களே! உங்களைப் பல இடங்களிலும் தேடி, அலுத்துப் போன பந்தகாசுரன், கயிலாயத்துக்குப் போய் அங்கும் உங்களைக் காணாததால், சலித்துப் போய்த் தூங்குகிறான். இதோ, அவன் தூக்கத்தைப் பாருங்கள்'' என்றாள்.

தேவர்கள், காஞ்சியில் இருந்து கயிலாயத்துக்குத் தங்கள் பார்வையைத் திருப்பினார்கள். அந்த விநாடியில், அன்னை அருகில் இருந்தும், அங்கமெல்லாம் நடுங்கியது தேவர்களுக்கு. கயிலாயத்தில் தூங்கும் பந்தகனின் வடிவம்தான், அவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கியது.

அம்பிகை தன் கால் சுண்டுவிரலைப் பூமியில் பதித்து, அழுத்தினாள். தூங்கிக் கொண்டிருந்த பந்தகாசுரன், காஞ்சிபுரத்தில் காமாட்சியின் திருவடிகளின் கீழ் வந்து விழுந்தான். அந்த வேகத்தில், அவனுடைய தூக்கம் கலைந்தது. கருணை வடிவான காமாட்சியின் மீது சட்டென்று பாய்ந்தான் பந்தகன். அமைதி வடிவமான அம்பிகை, ஆக்ரோஷமானாள்.

ஆயுதங்கள் தாங்கிய பதினெட்டு திருக்கரங்களுடன் பாய்ந்தாள் அம்பிகை. கீழே விழுந்தான் பந்தகன்.

அவன் உள்ளத்தால் செய்த பாவம் நீங்க அவன் இதயத்தில் ஒரு காலை வைத்தாள். வாக்கினால் செய்த பாவம் நீங்க, தன் மற்றொரு காலை அவன் தொண்டையில் வைத்து அழுத்தினாள் அம்பிகை.

பந்தகன் கதை முடிந்தது. தேவர்களின் பயம் தொலைந்தது. ''தேவர்களே! பந்தகனைப் புதைக்க வேண்டும். இங்கு குழி பறியுங்கள்...'' என்று சொல்லிக் காலால் பூமியைக் கீறிக் காட்டினாள் அன்னை.

தேவர்கள் பள்ளம் தோண்டத் தொடங்கினர். சற்று நேரத்தில் ஒரு ஹூங்கார ஒலி கேட்டது. அச்சப்பட்ட தேவர்கள் வெளியே ஓடி வந்தார்கள்.

மல்லகன் என்ற இன்னுமோர் அரக்கன், பூமிக்கு அடியில் கடுந்தவம் செய்து கொண்டு இருந்தான். தவம் முற்றுப்பெற்றால், அவன் பந்தகாசுரனைவிடப் பலம் பெற்றுவிடுவான். அவனை அழிப்பதற்காகவே அங்கே தோண்டச் சொல்லி இருக்கிறாள் அம்பிகை. மல்லகனை எண்ணி தேவர்கள் பயந்தபோது, அவனை மாய்க்கும் பொறுப்பை மேற்கொண்டார் விஷ்ணு. அவரது சக்ராயுதம் அவன் தலையை அறுத்தது.

மல்லகனின் உடலில் இருந்து ரத்தம் கொப்பளித்தது. அந்த ரத்தத்துளிகள் ஒவ்வொன்றில் இருந்தும் ஓர் அசுரன்  உண்டானான். அவர்களையும் எதிர்த்துப் போரிட்டார் திருமால். அந்த வேளையில் சிவன், ஆணும் பெண்ணுமாக இரு பூதங்களைச் சிருஷ்டித்தார். அவை மல்லகனின் ரத்தத்துளிகளை முழுவதுமாக உண்ண, மல்லகனும் அவனிடம் இருந்து உருவானவர்களும் அழிந்தனர்.

அரக்கர்களின் ரத்தத்தைக் குடித்த பூதங்கள், அரக்க குணம் கொண்டு, விஷ்ணுவின் மீதே பாய்ந்தன. அவற்றை பெருமாள் நிலத்தில் தள்ளி, தன் பாதங்களை அவற்றின் மேல் ஊன்றினார். அவற்றின் தொடை மேல் சப்பணம் போட்டு உட்கார்ந்தார்.

பூதங்கள் குதித்து எழுந்தன. பெருமாள் அவற்றைக் கீழே தள்ளி, அவற்றின் மேலே படுத்துவிட்டார். பூதங்கள் அடங்கின. தங்கள் தவறுக்கு மன்னிப்பு வேண்டின.

அங்கே தோன்றிய சிவபெருமான், தன் சடை முடியில் இருந்து ஐந்து அருவிகளைக் கொட்டச் செய்து, ஒரு குளத்தை உண்டாக்கினார். ''பஞ்சகங்கை என்னும் இந்தக் குளத்தில் நீராடுபவர்களின் சகல பாவங்களும் நீங்கும்'' என்றும் சொன்னார்.

இத்திருக்குளக்கரையில் இந்த இரு பூத வடிவங்களை இன்றும் காணலாம். பூதங்களை அடக்கிய பெருமாளின் நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலங்களை குளத்தின் கரையிலுள்ள மூன்று நிலை மண்டபத்தில் தரிசிக்கலாம்.

பந்தகனிடமே மீண்டும் போவோம். வாருங்கள்.

காமாட்சி காட்டிய இடத்திலேயே மேலும் தோண்டி பந்தகனைப் புதைத்தார்கள். அம்பிகையின் வெற்றிக்கு அறிகுறியாக அங்கே ஜய ஸ்தம்பம் நாட்டினார்கள். இந்த ஸ்தம்பத்தை காமாட்சி தேவி கர்ப்பகிரகத்தின் முன் இன்றும் காணலாம்.

வெற்றியை வழங்கிய விமலையான காமாட்சிக்குக் கோயில் கட்டத் தீர்மானித்தனர் தேவர்கள்.

மந்திரமயமாக, ஒலி-ஒளிக் கதிர்களாக காயத்ரி பரவிய இடத்தில், 24 அட்சரங்களுக்கும் 24 தூண்களை எழுப்பி, காயத்ரி மண்டபத்தை உருவாக்கினார்கள். வேதங்களை சுவர்களாகச் செய்தார்கள். அம்பிகையின் இருப்பிடம் ஸ்ரீசக்ரத்தின் மூல த்ரிகோணத்தில் இருப்பதால், கர்ப்பக்கிரகத்தை முக்கோண வடிவில் அமைத்தார்கள். ஓங்கார பீடத்தில் அமர்ந்தாள் காமாட்சி. ''இந்த மண்டபத்தில் நித்ய வாசம் செய்வேன்'' என்று வாக்கும் தந்தாள்.

தேவர்கள் எல்லாம் தலைவணங்கி நிற்க, ''வீதி உலா செல்ல ஏற்பாடு செய்யுங்கள்'' என்றாள் அம்பிகை. தேவதச்சன் கொண்டு வந்த முத்துப்பல்லக்கில், பிரம்மதேவர் தந்த முத்துக்குடையின் கீழ் அமர்ந்தாள் அம்பிகை.

மகாவிஷ்ணு மணிமகுடம் சூட்டினார். ஸ்ரீசக்ர வடிவமான பதக்கத்தை சிவபெருமான் சூட்டினார். தேவிக்கு மாலை நேரத்தில் மகோத்ஸவம் நடந்தது.

உலா முடிந்து கோயிலுக்குள் நுழைந்த அம்பிகை, விக்கிரக வடிவம் கொள்வதற்கு முன் சிவபெருமானிடம், ''தேவர்கள் இன்று செய்த பூஜையைப் போல் இங்கே என்றென்றும் பூஜை நடக்கட்டும். ஸ்ரீசக்ரப் பதக்கம் தந்த தாங்களே, இங்கு என் சந்நிதியில் ஸ்ரீசக்ரம் ஸ்தாபனம் செய்யுங்கள்.

கோடிக்கணக்கான விருப்பங்களை (காமங்களை) நிறைவேற்றுவதாலும், காமத்தின் கோடியில் இருக்கும் மோட்சத்தைத் தருவதாலும், இந்த ஸ்ரீசக்ரம் 'காமகோடிபீடம்’ எனப் பெயர் பெறட்டும். துர்வாச வடிவத்தில், இந்தக் கோயிலின் பூஜை முறைகளையும் தாங்களே அமைத்துக் கொடுங்கள்'' என்றாள். அதன்படியே செய்யப்பட்டது. அர்ச்சனை முதலானவற்றை மூல மூர்த்தியான தனக்குச் செய்யாமல், சிவபெருமானால் நிர்மாணிக்கப்பட்ட அந்த ஸ்ரீசக்ரத்துக்கே செய்யவேண்டும் என்று கட்டளையிட்டாள் காமாட்சி. அதன்படியே இன்றும், காஞ்சி காமாட்சி கோயிலில் ஸ்ரீசக்ரத்துக்கே அர்ச்சனை செய்யப்படுகிறது.

அன்னை காமாட்சிக்கு எதிரே உள்ள, தொட்டி போல் காணப்படும் இந்த ஸ்ரீசக்ரத்தின் அமைப்பில் வசினி, காமேசி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, ஸர்வேச்வரி, கௌலினி என்னும் எட்டு தேவிகளைத் தரிசிக்கலாம். இவர்கள்தான் லலிதா சஹஸ்ர நாமத்தை இயற்றியவர்கள்.

பரமேஸ்வரர் நிர்மாணித்த இந்த ஸ்ரீ சக்ரம், கிருத யுகத்தில் துர்வாசராலும், த்ரேதாயுகத்தில் பரசுராமராலும், துவாபர யுகத்தில் தௌம்ய மகரிஷியாலும், கலியுகத்தில் ஆதிசங்கரராலும் பொலிவூட்டப்பட்டதாக ஐதீகம்.

ஆதிசங்கரர், காஞ்சிபுரம் வந்து காமாட்சி தேவியைப் பூஜை செய்து ஸர்வக்ஞபீடம் ஏறி இங்கேயே ஸித்தி அடைந்தார்.

காமாட்சியைத் தரிசிப்போம். கவலைகள் பறந்தோடிப் போகும்!

- படங்கள்: பொன்.காசிராஜன், என்.விவேக்

அஞ்சன காமாட்சியா? அரூப லட்சுமியா?

ரு சமயம் வைகுந்தவாசனும் மகாலட்சுமியும் கிண்டலும் கேலியுமாக உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

''என்ன இருந்தாலும் நீங்கள் கறுப்புதானே? உங்கள்மீது யார் ஆசைப்படுவார்கள்?’ என்றாள் லட்சுமி. மகாவிஷ்ணு கோபப்படவில்லை. ''உண்மைதான். பிறகு ஏன் நீயாக வந்து, எனக்கு மணமாலை சூட்டினாய்?'' என்று கேட்டார்.

''வெள்ளை வெளேர் என்ற பாற்கடலின் ஒளி வெள்ளத்தில், என் பொன் வண்ணம் பட்டு, ஜோதிமயமாக ஆகிவிட்டது. அதில் உங்கள் உடம்பும் தங்கம் போல ஜொலித்தது. அதில் மதிமயங்கி, மாலை போட்டு விட்டேன்!'' என்றாள் லட்சுமி.

மகாவிஷ்ணுவுக்குக் கோபம் வந்தது. ''லட்சுமி! நீ மதிமயக்கம் கொண்டது அன்றில்லை. இன்றுதான். உன் அழகல்லவா உன்னை இப்படிப் பேசவைத்தது! நீ இப்போதே அழகை இழந்து பூவுலகில் திரியக்கடவாய்'' என்று சாபமிட்டார்.

சினம்கொண்ட மனவாளனிடம் மன்னிப்புக் கேட்டாள் மகாலட்சுமி. அவரோ, ''மக்களுக்கு எச்சரிக்கை ஆகவும் படிப்பினையாகவும் நடக்கும் இது, காஞ்சிபுரத்தில் முடிவுக்கு வரும். காமாட்சியின் பெருமையும் உலகெங்கும் தெரியும். நீ காஞ்சிக்குப் போய் காமாட்சியை பூஜை செய். உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்!'' என்றார்.

லட்சுமி காஞ்சிக்கு வந்தாள். காமாட்சியை எண்ணி, கடுந்தவத்தில் ஆழ்ந்தாள். காமாட்சியும் தரிசனம் தந்தாள். கறுத்த நிறத்துடன் களையிழந்திருந்த லட்சுமியை, ''அஞ்சன காமாட்சி!'' என்று அழைத்தாள்.

''லட்சுமி! அண்ணனின் வாக்கைக் காப்பாற்றவும் கட்டுப்பாட்டை மீறிக் கணவனிடம் மனைவி நடக்கக் கூடாது என்பதை உலகம் தெரிந்துகொள்ளவும் நான் சொல்வதைக் கேள். எனக்கு இடப்பக்கம் நீ, இந்த வடிவிலேயே இரு. பக்தர்கள், என் குங்குமப் பிரசாதத்தை உடனே இட்டுக்கொள்ளாமல் உன் திருமேனி முழுவதும் தடவிவிட்டு, பிறகு இட்டுக்கொள்வார்கள். பழையபடி நீ மிகுந்த அழகி ஆகிவிடுவாய்!

அந்த அழகு வடிவத்தில் நீ என் வலப்பக்கம் விக்கிரகமாக இரு. படிப்பினைக்காக உன் குரூப வடிவச் சிலை என் இடப்பக்கம் இருக்கட்டும். பக்தர்கள் உன் திருமேனியைத் தீண்டி, உன் பாதத்தைத் தொடும் பாக்கியத்தையும் அடையட்டும், அவர்களுக்கு நீ சகல செல்வங்களையும் வழங்கு...'' என்றாள் காமாட்சி. சாபவிமோசனம் ஆகி, தங்கநிறம் பெற்றாள் லட்சுமி.

''என்ன நடக்கிறது?'' என்றறிய திருமால் அங்கு வந்தார். லட்சுமி ''வாராய் கள்ளா!'' என்றாள். மாதவனும் லட்சுமியும் ஒன்று கூடினர். 'அஞ்சன காமாட்சி’யையும் 'ஸெளந்தர்ய லட்சுமி’யையும் இன்றும் விஷ்ணுவையும் இங்கே தரிசிக்கலாம்.