Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிள்ளையார் சுழி!

மகா சுவாமிகளுடன்...

- பரணீதரன்

தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் ஒரு மாலை நேரம். ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகளுக்கு வந்தனம் செய்துவிட்டு எழுந்து நின்று, கருணைமுகில் அருள்மழை பொழியக் காத்திருந்தேன்.

##~~##

''ரமண மகரிஷியைப் பத்தி உலகம் பூராவும் தெரிஞ்சுண்டது. பால் பிரண்டன் அவரைப் பத்தி விவரமா எழுதுனதுக்கு அப்புறம்தான்... தெரியுமோ?''

''மகரிஷியைத் தரிசனம் பண்ணிட்டுத்தான் கப்பல் ஏறணும்னு பால் பிராண்டனைக் கட்டாயப்படுத்தினது பெரியவாதானே...''

''அது இருக்கட்டும்... என்ன சொல்ல வந்தேன்னா, பால் பிரண்டன் ரமணரைப் பார்த்துப் பேசின அனுபவங்களை எல்லாம் இங்கிலீஷ்லே எழுதுனதுக்கு அப்புறம்தானே உலகம் தெரிஞ்சுண்டது. அதுக்கப்புறம்தானே அங்கேயிருந்து நிறையப் பேர் ரமணாச்ரமத்துக்கு வந்து தங்க ஆரம்பிச்சா. அவாளும் நிறைய எழுதினா. அதுமாதிரி நம்ம சேஷாத்ரி சுவாமிகளைப் பத்தியும் இங்கிலீஷிலே எழுதினா அங்கே இருக்கிறவாளெல்லாம்கூட தெரிஞ்சுப்பாளேனு எனக்குத் தோண்றது''.

''பெரியவா அனுக்கிரகம் பண்ணினா நான் முயற்சி பண்றேனே''.

''நீ இங்கிலீஷ் என்ன படிச்சிருக்கே?''

''அதிகமா ஒண்ணும் படிச்சதில்லே. ஆனா, இங்கிலீஷ் மேலே எனக்கு ரொம்ப ஆசை. காலேஜ்லே இருந்தப்ப நிறையப் படிப்பேன்..''

''காலேஜ்லே என்ன படிச்சே?''

''பி.காம்''

''மெயின் சப்ஜெக்ட் இல்லை. Non-detail ஸ்டடிதான். ஆனா, லைப்ரரிலேருந்து நிறையப் புத்தகங்கள் எடுத்துண்டு போய்ப் படிப்பேன். அப்போலேருந்தே இங்கிலீஷ்ல எழுதணும்... பேசணும்னு எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு!''

சற்று நேரம் எதையோ யோசிப்பதுபோல் மகா சுவாமிகள் மௌனமாயிருந்தார். நான் காத்திருந்தேன்.

பெரியவா பேசத் தொடங்கினார்: ''ஒரு கதை சொல்றேன். கேளு. போஜராஜானு கேள்விpபட்டிருக்கியோ?''

''கேள்விப்பட்டிருக்கேன்''

''அவனோட ராஜசபையில் பெரிய பெரிய கவிகள்லாம் இருந்தா. அந்த ராஜ்யத்தில் கவிதா ரசனை இல்லாதவாளே கிடையாதுனு சொல்லுவா... ஒரு நாள் ராஜா, மந்திரியைக் கூப்பிட்டு, 'நம்ம ராஜ்யத்தில் கவிதை பண்ணத் தெரியாதவன் யாராவது இருக்காளானு விசாரிச்சுப்பாரு.. அப்படி ஒருத்தன் இருந்தான்னா அவனை அழைச்சிண்டு வா!’னு சொன்னார். 'சரி’னு மந்திரியும் ஊர் ஊரா போய்த் தேடிப் பார்த்துட்டு, 'கவிதை பாடத் தெரியாதவனே இல்லை. ஒரே ஒரு ஏழை நெசவாளி மட்டும், 'கவிதை எழுத எனக்குத் தெரியாது. ஆனால் எழுதணுங்கற ஆசை இருக்கு!’னு சொன்னான். 'இதுவரைக்கும் நீ கவிதை ஒண்ணும் எழுதினது இல்லியே?’னு நிச்சயம் பண்ணிண்டு இதோ அழைச்சுண்டு வந்திருக்கேன்’னான்.

போஜராஜா நெசவாளியைப் பார்த்து, 'நம்ம ராஜ்யத்தில் எல்லாரும் கவி பாடுவாளே.. உனக்குப் பாடத் தெரியாதுன்னு சொன்னியாமே?’ என்று கேட்டார். ஒண்ணும் தெரியாதவன்கூட போஜராஜாவைப் பார்த்தான்னா அவன் மனசுலே கவி பொங்குமாம். ராஜா இப்படிக் கேட்டதும் அந்த நெசவாளி, 'கவிதை பண்றேன். ஆனா அர்த்தத்தோட அழகாப் பாடத் தெரியாது!’னு முதல் வரிலே சொன்னான். ரெண்டாவது அடியிலே, 'கொஞ்சம் முயற்சி பண்ணினா நன்னாவே பாடிடுவேன்’னு சொல்லிட்டு, மூணாவது அடிலே மளமளனு அமர்க்களமா ராஜாவைப் புகழ ஆரம்பிச்சுட்டான். என்ன சொன்னான் தெரியுமா, 'மத்த ராஜாக்களெல்லாம் உன் பாதங்கள்ல விழுந்து வணங்கறப்போ, அவர் கிரீடங்கள்ல இருக்கிற ரத்தினங்களோட சிவப்பு நிறம், உன் பாதங்கள்ல பட்டு அந்தப் பீடமே சிவந்து போற மாதிரி இருக்கு’னு அழகா வர்ணிச்சுட்டான்!

நாலாவது அடிலே, 'நான் கவி பண்றேன், நெசவு செய்யறேன், போயிட்டு வரேன்’னு கவிதை நயத்தோடு சொன்னபடியே புறப்பட்டுப் போயிட்டான்'' என்று சொன்ன பெரியவா, ''நீயும் போயிட்டு வா!'' என்று எனக்கு ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.

பெரியவா சொன்ன கவிதை இதுதான்...

காவ்யம் கரோமி நஹிசாருதரம் கரோமி
யத்னாது கரோமி யதி சாருதரம் கரோமி
பூபால மௌளி மணிமண்டித பாத பீட
ஹே சாகஸாங்கா கவயாமி வயாமி யாமி..!

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு குரு எனக்கு ஆசி வழங்கிவிட்டார். குருவருள் பரிணமிக்க, தெய்வத்துணை வேண்டுமல்லவா? அடுத்து விநாயகரிடம் விண்ணப்பித்துக் கொண்டேன்.

அதன் பின்னணியைக் கூற வேண்டுமல்லவா? சின்ன வயதிலிருந்தே என்னுள் ஒரு நெருடல், 'ஒளவைப் பாட்டி, விநாயகரிடம், பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன். நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்று கேட்டது என்ன கணக்கு? நான்கைக் கொடுத்துவிட்டு பதிலுக்கு மூன்றைக் கேட்பானேன்? நான்குக்கு ஈடாக நான்கைக் கேட்டிருக்கலாமே?’ என்று என் சின்ன புத்திக்குத் தோன்றியது.

அது போகட்டும்... வயது ஆக ஆக என்னுள் வேறொரு சந்தேகம் முளைக்கத் தொடங்கியது. 'சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்றால் என்ன? இயல், இசை, நாடகத் தமிழா அல்லது மூன்று தமிழ்ச் சங்கங்கள் வளர்த்த தமிழா?

இது ஒருபுறம் இருக்கட்டும், ''நான்கைக் கொடுத்து மூன்றைக் கேட்ட 'பழைய நெருடல் கணக்குக்கே வருகிறேன். ஆங்கிலத்தில் எழுத காஞ்சி மகானிடம் ஆசி பெற்ற பிறகும் நூல் எழுத என் ஆங்கில அறிவு போதும் என்ற நம்பிக்கை பிறக்கவில்லை. தும்பிக்கையானிடம் சரணடைந்தேன். ஒளவைப் பாட்டியைப் போலவே தா’ எனக் கேட்டுவிட முடிவு செய்தேன். கூடவே, அதை எப்படிக் கேட்பது என்ற பிரச்னை எழுந்தது.

ஒளவைப் பாட்டி நான்கைக் கொடுத்து மூன்றைக் கேட்ட கணக்கு சிறு வயதிலிருந்தே என் மனதை உறுத்தி வந்ததால் நான்குக்கு நான்கையே கேட்டு கணக்கைச் சீர் செய்துவிடுவது என்று நான் முடிவு செய்தேன். எனவே,

 'பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் ஆங்கிலமும் தா’

என்று செய்யுளை மாற்றியமைத்துக் கொண்டேன் (ஒளவைப் பாட்டி மன்னிப்பாராக).

இந்த அத்துமீறலுக்கு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆண்டவனைப் பொறுத்தவரை மொழித் தகராறு இருக்க முடியாது; அது நமக்குள்தான். உண்மையான பக்தன். எந்த மொழியில் வேண்டிக் கொண்டாலும் அவன் உள்ளம் பகவானுக்குப் புரியும். அளிக்க வேண்டியதை அளித்து ஆட்கொள்வார்.

ஒரு நாள் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு தைரியமாக எழுதத் தொடங்கினேன். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளைப் பற்றி எழுதுவதற்கு ஜகத்குருவிடம் ஆசி கோரினேன். அதற்கான ஆங்கில அறிவை அருளுமாறு ஆனைமுகத்தானிடம் பிரார்த்தித்துக் கொண்டேன்.

ஒரு மகானைப் பற்றி எழுதத் தொடங்கினேன். ஆறுமுகனுக்கு மூத்தவர் ஆறாக அருளிவிட்டார். பத்தாண்டுகளுக்கு முன் 'Six Mystics of India' என்ற எனது முதல் ஆங்கில நூல் வெளிவந்தது.