Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கயிலையான் நடத்தி வைத்த கல்யாணம்!

திருக்கல்யாணத் திருத்தலங்கள்!

##~##

திருமணஞ்சேரி என்றதும், கும்பகோணம் குத்தாலத்துக்கு அருகில் உள்ள தலம்தான் சட்டென்று நினைவுக்கு வரும். கல்யாண வரம் அருளும் இந்தத் தலத்தைப் போலவே, அதே பெயரில் இன்னொரு தலமும் இருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு?

 புதுக்கோட்டையில்  இருந்து கறம்பக்குடி செல்லும் வழியில், சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது திருமணஞ்சேரி வளைவு. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. பயணித்தால், திருமண வரம் தந்தருளும் ஆலயத்தை அடையலாம்.  ஒருகாலத்தில் கோவில்காடு என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், பிறகு திருமணஞ்சேரி என்றானதாகச் சொல்கின்றனர்.

இங்கே... சிவனாரின் திருநாமம் ஸ்ரீசுகந்தபரிமளேஸ்வரர். திருமணநாதர் என்றும் அழைக்கின்றனர், பக்தர்கள். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீபெரியநாயகி அம்பாள்.

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த வணிகர் ஒருவர் மிகுந்த சிவபக்தர். வீடு- வாசலுக்கும், தொழில் லாபத்துக்கும் எந்தக் குறைவும் இல்லாமல் அந்த வணிகர் வாழ்ந்து வந்தார். என்றாலும், அவருக்கு ஒரே ஒரு குறை இருந்து, அவர் மனத்தை வருத்தியெடுத்தது. ஆம்... 'கொஞ்சி விளையாட ஒரு பிள்ளை இல்லையே...’ என்கிற ஏக்கம்தான் அது. பிள்ளை வரம் கேட்டுக் கோயில் கோயிலாகச் சென்று வழிபட்டார்கள் அந்த வணிக தம்பதியர். தான தருமங்கள் செய்தனர். இதனால் அந்தத் தம்பதிக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

காலங்கள் ஓடின. அந்தப் பெண் வளர்ந்து பருவம் எய்திய நிலையில், மதுரையில் உள்ள தன் தங்கையின் மகனுக்குத் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த வணிகர் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தார். அவர் மனைவி அதிர்ந்து போனாள். கணவர் இறந்த துக்கம் தாளாமல் உடன்கட்டை ஏறி, தன்னை மாய்த்துக்கொண்டாள்.

அநாதரவாக நின்ற அந்த வணிகர் மகளிடம் அவரின் தங்கை மகன், ''கலங்காதே! நான் உன்னைத் திருமணம் செய்துகொள்வது உறுதி. உனக்கு நான் இருக்கிறேன்'' என்று ஆறுதல் கூறி, மதுரைக்கு அழைத்துச் சென்றான். வழியில் அடர்ந்த காட்டுப் பகுதி குறுக்கிட்டது. அங்கே நடந்து வந்துகொண்டிருந்தபோது, வன்னி மரமும் உறைகிணறு ஒன்றும் தென்பட்டன. வன்னி மரத்தடியில் அழகிய சிவலிங்கம் ஒன்றைக் கண்டார்கள். அன்றிரவு இருவரும் அங்கேயே தங்கினார்கள். அந்த உறைகிணற்றில் குளித்துவிட்டு, வன்னி மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, அங்கேயே படுத்துத் தூங்கினார்கள். சோதனையாக விஷநாகம் ஒன்று அவனைத் தீண்ட, அக்கணமே இறந்துபோனான் அவன். 'வாழ்க்கையில் இத்தனை சோதனையா? கடவுளே..! எனக்கு ஏன் இப்படியெல்லாம் கொடுமைகள்..?!’ என்று கதறித் துடித்தாள் அந்தப் பெண்.

அப்போது அங்கே முதியவர் போன்று வந்தார் சிவனார். இறைவனுக்கு அமுது படைக்கும் அடுப்பில் இருந்த சாம்பலையும், எதிரே கிணற்றில் இருந்த தண்ணீரையும் கலந்து, இறந்து கிடந்தவனின் மீது தெளித்தார். உடனே அவன் உயிர்பெற்று எழுந்து நிற்க, அதிசயித்துப் போனாள் அவள்.

அங்கே இருந்த சிவலிங்கம், வன்னி மரம், கிணறு ஆகியவற்றையே சாட்சியாகக் கொண்டு இருவரையும் திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த முதியவர் சொல்ல... அதன்படியே பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினான் அந்த இளைஞன். அவர்களுக்குச் சிவ- பார்வதியாகத் திருக்காட்சி தந்து ஆசீர்வதித்தார் இறைவன். அதுமட்டுமா? அவர்களின் திருமணத்துக்கு, மதுரையில் சாட்சி அளித்தார் என்றும் தெரிவிக்கிறது ஸ்தல வரலாறு. இறைவனே வந்து, திருமணத்தை நடத்தி வைத்ததால் அந்தத் தலம் திருமணஞ்சேரி என்றும், ஸ்ரீசுகந்த பரிமளேஸ்வரருக்குத் திருமணநாதர் எனும் திருநாமமும் அமைந்தது.

திருமணத் தடையால் அவதிப்படுவோர் இங்கு வந்து பரிகாரம் செய்து, இறைவனையும் இறைவியையும் தரிசனம் செய்து பிரார்த்தித்தால், விரைவில் திருமணத் தடை அகலும்; கல்யாண மாலை தோள் சேரும் என்று பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.        

கணவர் தீராத நோயால் அவதிப்பட்டாலோ, ஆரோக்கியக் குறைபாட்டுடன் இருந்தாலோ இங்கு வந்து, ஸ்ரீபெரியநாயகி அம்பாளின் திருவடியில் மாங்கல்யத்தை வைத்து வணங்கினால், மாங்கல்ய பலம் பெருகும்; நீண்ட ஆயுளுடன் கணவர் நோய் நொடியின்றி வாழ்வார் என்பது ஐதீகம்!

குழந்தைகளின் கிரக நிலை சரியில்லை; அடிக்கடி நோய் தாக்கி உணவு உட்கொள்ளாமலேயே இருக்கிறது என்றால், இங்கு வந்து 'அம்மா பெரியநாயகியே... உனக்குத் தத்துக் கொடுக்கிறோம். இனி, இது உன் குழந்தை. நீதான் காப்பாத்தணும்’ என்று தத்துக் கொடுக்கும் வழக்கமும் இங்கு உள்ளது. அப்படித் தத்துக் கொடுத்த பின்பு குழந்தை ஆரோக்கியத்துடன் வளரும் எனச் சந்தோஷத்துடன் சொல்கிறார்கள், பெண்கள்.

கல்யாண வரம் தரும் திருமணஞ்சேரிக்கு வாருங்கள்; உங்கள் திருமணத்தை இறைவனே முன்னின்று நடத்தி வைப்பான்.

  - அபிநயா

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்