Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆவுடையார்கோவில் அற்புதம்!

##~##

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து சுமார்  16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆவுடையார்கோவில். புராண- புராதனப் பெருமைகள் கொண்ட அற்புதமான ஆலயம் இது.

பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்த மாணிக்க வாசகரின் பெருமையை உலகுக்குத் தெரிவிக்க, நரிகளைப் பரிகளாக்கி சிவனார் நடத்திய திருவிளையாடல் உங்களுக்குத் தெரியும்தானே! வாதவூரார் எனப்படும் மாணிக்கவாசகருக்கு ஈசன் சிவஞானம் போதித்து தீட்சை அளித்து அருளிய தலம் இந்த ஆவுடையார்கோவில்.

இங்கே வீற்றிருக்கும் இறைவனின் திருநாமம் ஸ்ரீஆத்மநாதர். அம்பாள்- ஸ்ரீயோகாம்பாள். இந்தத் தலத்தின் சிறப்பு... இங்கே சிவனாரும் சரி, அம்பாளும் சரி, ரூபமின்றி அரூபமாக கருவறை யில் காட்சி தருகின்றனர்.

சிவனார் வழக்கமான லிங்க வடிவமாக இல்லாமல் பாணம், ஆவுடையார் எனத் திருக்காட்சி தருகிறார். ஆத்மநாதர் சந்நிதிக்கு முன்னே மனம் ஒருமித்து தியானத்தில் ஆழ்ந்து வேண்டிக்கொண்டால், வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம்.

அம்பாளின் திருப்பாதங்களை மட்டுமே சந்நிதியில் காணலாம். ஸ்ரீயோகாம்பாளின் திருவடி தரிசனத்தை எவர் ஒருவர் தரிசித்து அவளிடம் சரண் அடைகிறார்களோ, அவர் சகல யோகங்களும் கிடைக்கப்பெறுவார் என்பது நம்பிக்கை.

இங்கே வருடம் முழுவதும் விழாக்களும் வைபவங்களும் உண்டு என்றாலும், மாணிக்கவாசகருக்குத்தான் இங்கு விழா பிரமாண்டமாக நடைபெறுகிறது. அதேபோல், அப்போது மாணிக்கவாசகரே திருவீதியுலா வருகிறார். ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் மாணிக்கவாசகருக்குப் பத்து நாள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் மாணிக்கவாசகர் திருக்காட்சி தரும் அழகே அழகு!

சிவனாரைவிட சிவனடியாருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படும் ஆவுடையார்கோவில் திருத்தலம், சிற்ப நுட்பங்களை ஒருங்கே கொண்ட ஒப்பற்ற தலமும்கூட!

ஸ்ரீஆத்மநாதரையும் மாணிக்கவாசகரையும் வைத்து திருக்கோவையார் (400) பாடிய பாடல்கள் அற்புதமானவை. ஆனி மாத விழாவின் பத்து நாளும், உத்ஸவ வைபவத்தில் இதனைப் பாட்டாகப் பாடி வருவார்கள், பக்தர்கள். பாடலைக் கேட்கக் கேட்க... பரமனின் பாதத்தைப் பற்றுகிற சிந்தனையே மேலோங்கும்.

  - கே.அபிநயா

படங்கள்: செ.சிவபாலன்