Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காரைக்கால் கனித் திருவிழா!

##~##

காரைக்கால் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில், கோவில்பத்து எனும் இடத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு காரைக்கால் அம்மையார் திருக்கோயில். சிவபெருமானால் 'அம்மையே’ என்று அழைத்துச் சிறப்பிக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் புகழைச் சொல்லும் அற்புதமான க்ஷேத்திரம் இது.

ஒருகாலத்தில் பூமியில் பஞ்சம் தலைவிரித் தாடியது. சிவனாரின் ஆணைப்படி, உலகுக்கு வளம் கூட்ட சாகம்பரி தேவியாக பூமிக்கு வந்தாளாம் பார்வதியாள். அவள் பாதம் பட்டதும் பூமி செழித்தது. ஒருநாள் இந்தத் தலத்தில் ஸ்ரீபார்வதிதேவி சிவபூஜை முடித்து தியானத்தில் இருந்தாள். அப்போது அந்த வழியாக துர்வாச முனிவர் வந்தார். அவர் வருவதை பார்வதியாள் கவனிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட முனிவர், பூமியில் சாதாரணப் பெண்ணாகப் பிறக்கக்கடவது என்று சபித்துவிட்டார். 'தியானம்  தடைப்பட்டால் சிவநிந்தையாகிவிடும். எனவேதான், தியானம் கலைக்கவில்லை’ என்று துர்வாசரிடம் விளக்கிய பார்வதியாள், சாப விமோசனம் தரும்படி கேட்டுக் கொண்டாள்.

துர்வாசரும் சினம் தணிந்து, 'பூமியில் பெண்ணாகப் பிறந்தாலும், பெரும்புகழும் மாதர்குலத்துக்கு அழியா புகழையும் சேர்த்து, பிறகு சிவனடி சேர்வாயாக’ என்று அருளிச் சென்றார். அதன்படி, காரைக்காலில் வணிகர் தனதத்தரின் மகள் புனிதவதியாகப் பிறப்பெடுத்தாள் அம்பிகை என்றொரு தகவல் உண்டு.

அதன் பிறகு நடந்த கதை நமக்குத் தெரியும். பரமதத்தன் என்பவனை மணந்த புனிதவதியாள், கணவன் கொடுத்தனுப்பிய மாங்கனிகளை சிவனடியாராக வந்த இறைவர்க்குப் படைத்து விருந்தோம்பல் செய்ததையும், பிறகு மாங்கனிகள் எங்கே எனக் கேட்ட கணவனுக்கு இறையருளால் மாங்கனி பெற்றுக் கொடுத்ததையும் நாம் அறிவோம். அவள் தெய்வப் பெண் என்பதை அறிந்த பரமதத்தன் அவளை நீங்கிச் சென்று வேறோரு பெண்ணை மணந்து வாழ்க்கை நடத்தினான். புனிதவதியாரோ இறைவனை வேண்டி பேயுருவம் கொண்டு, திருக்கயிலை மலை மீது தலையால் நடந்து சென்று சிவகதி பெற்றார். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகப் புகழ்பெற்றார் எனத் தலபுராணம் கூறுகிறது.

அம்மைக்கு இறைவன் மாங்கனி ஈந்த அருளாடலை நினைவில் கொள்ளும் விதம், காரைக்காலில் ஆனி மாதம் திரயோதசி, சதுர்த்தசி மற்றும் பௌர்ணமி ஆகிய மூன்று நாட்கள் மிக கோலாகலமாக நடைபெறுகிறது மாங்கனித் திருவிழா!

திரயோதசி தினத்தில் விநாயகர் பூஜை, மாப்பிள்ளை அழைப்பு நடைபெறும். சதுர்த்தசி அன்று திருமணம். வெண் அலங்காரத்தில் பிட்சாடனர் தரிசனம். பூக்கள், ஆடை என எல்லாமே வெண்மை நிறத்தில் திகழும் அலங்காரம் இது. பௌர்ணமி துவங்கும்போது, பஞ்ச மூர்த்திகள் மற்றும் பிட்சாடனர் அபிஷேகம் நிகழும். தொடர்ந்து பரமதத்தன் வியாபாரத்துக்காக கடைக்குச் செல்வது, மாங்கனி கொடுத்தனுப்புவது, பிட்சாடனர் சிவனடியாராக வந்து புனிதவதியாரிடம் பிட்சை கேட்பது, அவருக்கு புனிதவதியார் உணவு பரிமாறுவது எனத் துவங்கி, புனிதவதியார் பேயுருக் கொள்வது பிறகு ஜீவசமாதி ஆவது வரையிலான வைபவங்கள் தொடர்ந்து நிகழும். சுமார் 76 மணி நேரம் நிகழும் இந்த வைபவங்களில், அம்மை பேயுருக் கொள்ளும் வைபவம், ஒருமணி நேரம் நிகழும் (பௌர்ணமி இரவு 123க்குள்). காரைக்கால் அம்மையார் விக்கிரகத்துக்கே பேயுருவ அலங்காரம் நிகழும். ஆனால் ஊர்வலத்தின்போது எவராலும் அதை நம்பமுடியாது. அவ்வளவு கச்சிதமாக இருக்கும் அந்த அலங்காரம்!

இந்த வைபவங்களில் பிட்சாடனர் திருப்பவனி குறிப்பிடத்தக்கது. பவளக்கால் வாகனத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து பிச்சைக்குச் செல்வார் பிட்சாடனர். அப்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் (தங்களையோ, தங்களின் இல்லத்தையோ பிட்சாடனர் கடந்து செல்லும்போது) மாம் பழம் இறைப்பார்கள். இந்த ஊர்வலத்தின்போது பிட்சாடனருக்கோ, காரைக்கால் அம்மையாருக்கோ ஆராதனைகள் கிடையாது. பக்தர்கள் கொண்டு வரும் மாம்பழங் களையே நைவேத்தியமாக்கி, அதையே பிரசாதமாகவும் தருவார்கள்.

''இந்தத் திருவிழாவின்போது பக்தர்கள் இறைக்கும் மாம்பழங்களை உண்பதாகவோ அல்லது மாம்பழம் இறைப்பதாகவோ வேண்டிக்கொண்டு, அந்த வேண்டுதலை நிறைவேற்றினால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். பெரும்பாலும் குழந்தை வரம் வேண்டி வருபவர்களே அதிகம். மாங்கனி பிரார்த்தனையை நிறைவேற்றிய பிறகு, வெகு விரைவில் அவர்களுக்கு பிள்ளைக்கனி வாய்த்து விடுகிறது அதற்கு நன்றிக்கடனாக அடுத்த வருடமும் மாங்கனி இறைக்க வருகிறார்கள்'' என்கிறார் கோயிலின் குருக்கள் வைத்தியநாத சுவாமி.

நாமும் ஒருமுறை, இந்த மாங்கனி விழாவில் கலந்துகொண்டு அம்மையாரின் அருள் பெற்று வருவோம்; நம் வாழ்வும் மாங்கனியாய் இனிக்கும்.

- மு.சா.கௌதமன்

படங்கள்: செ.சிவபாலன்