Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆரூடம் அறிவோம்:15

ஜோதிட புராணம்

- சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

##~##

ஞ்சாங்கம் என்ற தலைப்பின் கீழ் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகியவை பற்றியும் ராசி, கோள்கள் பற்றிய விவரங்களையும், நவக்கிரகங்களின் பரிமாணம் மற்றும் காரகத்துவம் பற்றியும் முந்தைய அத்தியாயங்களில் தெரிந்துகொண்டோம். இந்த அத்தியாயத்தில் வருஷம், மாதம், கணக்கிடும் பஞ்சாங்க முறைகள் பற்றியும், பஞ்சாங்கங்களின் வகைகள் பற்றியும், அவற்றை உபயோகிக்கும் விதம் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

வருடம்- மாதம் கணக்கிடும் பஞ்சாங்க முறைகள்...

பஞ்சாங்கங்களில் வருடம் மற்றும் மாதங்கள், முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான முறைகளின்படி கணக்கிடப்படுகின்றன.

சௌரமான முறை:

சௌரம் என்பது சூரியனைக் குறிக்கும். சூரியனின் சுழற்சியை ஆதாரமாகக் கொண்டு கணக்கிடப்படும் இந்த முறையில், சௌர வருஷ முறை, சாயன வருஷ முறை என இரண்டு பிரிவுகள் உண்டு.

சௌர வருஷ முறை: சூரியனின் இயக்கம் தொடங்குவது,  மேஷ ராசியில் முதல் நட்சத்திரமான அசுவினி என்று கணக்கிட்டு, சுழற்சி முடிவது மீன ராசியில் கடைசி நட்சத்திரமான ரேவதியில் என்று கணித்து, இதன் இடைப்பட்ட காலத்தை ஒரு வருடம் எனக் கொள்வது சௌர வருஷ முறை. இதன்படி, சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் காலம், ஒரு சௌர மாதமாகும்.

மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் சித்திரை மாதம் எனப்படுகிறது. அதுபோல், ரிஷபத்தில் சஞ்சரிக்கும் காலம் வைகாசி மாதம் ஆகும்.

இவ்வாறு மேஷம் முதல் மீனம் வரை சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை... சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என 12 மாதங்களாக தமிழ் பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த சௌர வருஷத்தின் காலம் 365 நாள், 15 நாழிகை, 25 விநாடிகள் ஆகும். தமிழகம், பஞ்சாப், ஹரியானா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இந்த சௌர வருஷ-மாத முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

சாயன வருஷம்: சூரியன் மேஷாயன விஷ§வத்தில் பிரவேசித்து மீண்டும் மேஷாயன விஷ§வத்தை வந்தடையும் காலம் சாயன வருஷம் எனப்படுகிறது.

சாயன வருஷம் என்பது 365 நாள், 14 நாழிகை, 32 விநாடிகளாகும்.

கேரளத்தில் பழக்கத்தில் உள்ள கொல்லம் ஆண்டு என்பது இதனை அடிப்படையாகக் கொண்டது. சௌர முறைக்கும் சாயன முறைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் ஏப்ரல் 13, 14 தேதிகளுக்கும் கொல்லம் ஆண்டு துவங்கும் சித்திரை விஷ§வுக்கும் சுமார் 1 நாள் வித்தியாசம் இருக்கும்.

சாந்திர வருஷம்:

இது சந்திரமான முறை. சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

சௌரமான வருஷம் பிறப்பதற்கு முன்பு வரும் பூர்வபக்ஷ பிரதமை முதல் அடுத்த சௌரமான வருஷப் பிறப்புக்கு முன்பு வரும் அமாவாசை வரையுள்ள, சுமார் 354 நாட்களைக் கொண்ட வருஷம் சாந்திர வருஷம் அல்லது சாந்த்ரமான வருஷம் எனப்படுகிறது.

இதில் சைத்ரம் முதல் பாற்குணம் வரை பன்னிரண்டு மாதங்களாக அமையும்.

இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதனை கார்திக சுக்லாதி பஞ்சாங்க முறை என்றும் சொல்கிறார்கள்.

பிற வகை வருடங்கள்...

திருவள்ளுவர் ஆண்டு: திருவள்ளுவர் பிறந்த காலத்தை ஒட்டி தமிழ்நாட்டில் வழக்கப்படுத்தப்பட்ட முறை இது.

சக வருஷம்: இந்திய அரசாங்கம் சாலிவாகன வருஷம் அல்லது சக வருஷம் என்ற பெயர்களில் வெளியிடும் பஞ்சாங்க முறை இது. இது ஒரு வருடம்... மார்ச் - 22 முதல் அடுத்த ஆண்டு மார்ச் - 22 வரையிலான நாட்களைக் கொண்ட ஆண்டாகும்.

பசலி வருடம்: இது வட இந்தியாவில் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ளது. முகலாயர்கள் காலத்தில் அரசாங்க வரவு-செலவுகளைக் கணக்கிடத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டை இது குறிக்கும்.

கலியுக சகாப்தம்: கலியுகம் தோன்றியது முதலான வருடம், மாதம் நாட்களைக் குறிப்பது. இது விக்கிரம வருஷம், மகாவீரர் வருஷம் என்று 2 வகையாகக் காணப்படுகிறது.

பொதுவாக ஒரு பஞ்சாங்கத்தை அடுத்து அதன் முதல் பக்கத்தைப் பார்த்தால் இத்தனை வகையான வருடங்களும் அவற்றின் ஆண்டு எண்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், வழக்கத்தில் சௌரமான முறை, சாயன முறை, சாந்த்ரமான முறை ஆகியவை மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.

ஆங்கில, தமிழ் மாதங்கள்...

பொதுவாக ஆங்கில மாதங்களுக்கு இணையான தமிழ் மாதங்களை ஒரு எளிமையான வழியால் தோராயமாகக் கணக்கிடலாம். ஒவ்வொரு ஆண்டும் அநேகமாக சித்திரை மாதப் பிறப்பு ஏப்ரல் 13 அல்லது 14 தேதிகளில்தான் வரும். எனவே, வைகாசி மாதம் என்பது மே மாதத்தில் 14 அல்லது 15 தேதிகளில் வரலாம். அநேகமாக எல்லா ஆங்கில மாதங்களின் நடுவில் அதாவது 14, 15, 16 தேதிகளில் புதிய தமிழ் மாதம் பிறக்கும். அதாவது ஒவ்வொரு ஆங்கில மாதத்திலும் இரண்டு தமிழ் மாதங்களின் 14 அல்லது 15 நாட்கள் அமையும். எனவே, ஒரு ஆங்கிலத் தேதிக்கு சமமான தமிழ் மாத தேதிகளை தோராயமாகத் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் மாதங்களும் அவற்றுக்கு இணையான ஆங்கில மாதங்களும்...

சித்திரை : ஏப்ரல் - மே

வைகாசி : மே - ஜூன்

ஆனி : ஜூன் - ஜூலை

ஆடி : ஜூலை - ஆகஸ்ட்

ஆவணி: ஆகஸ்ட் - செப்டம்பர்

புரட்டாசி: செப்டம்பர் - அக்டோபர்

ஐப்பசி : அக்டோபர் - நவம்பர்

கார்த்திகை : நவம்பர் - டிசம்பர்

மார்கழி: டிசம்பர் - ஜனவரி

தை : ஜனவரி - பிப்ரவரி

மாசி : பிப்ரவரி - மார்ச்

பங்குனி: மார்ச் -  ஏப்ரல்

பஞ்சாங்க வகைகள்...

வாக்கிய பஞ்சாங்கம்: பன்னெடுங்காலம் முன்பு ரிஷிகள் அருளிச் செய்த சுலோகங்கள் அல்லது வாக்கியங்களை திருத்தாமல் அப்படியே அமைந்த வருடம், மாதம், நாள், நட்சத்திரம், திதி முறைகள் வாக்கியப் பஞ்சாங்கம் எனப்படும்.

திருக்கணித பஞ்சாங்கம்: சந்திரனது சுழற்சியால் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களைக் கணக்கில் கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கம் திருக்கணிதப் பஞ்சாங்கம் ஆகும். வாக்கிய பஞ்சாங்கத்துக்கும் திருக்கணித பஞ்சாங்கத்துக்கும் அதிகபட்சம் 17 நாழிகைகள் வேறுபாடு உண்டு. 17 நாழிகை என்பது 6 மணி, 48 நிமிஷம் ஆகும். இதனால், சிலநேரங்களில் பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தைக் கணிக்கும்போது வாக்கியப் பஞ்சாங்கத்தில் கணக்கிடப் படும் நட்சத்திரப் பாதங்கள், நட்சத்திரம் மற்றும் லக்னமேகூட மாறிவிடலாம்.

இதனால் பலருக்கு, தங்களது ஜாதகக் குறிப்பு சரிதானா, நட்சத்திரம் சரிதானா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. திருமணத்துக்கான ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது பெண் ஜாதகம், வாக்கியப் பஞ்சாங்கப்படியும், மாப்பிள்ளையின் ஜாதகம் திருக்கணித பஞ்சாங்கப்படியும் இருந்தால் பொருத்தம் பார்ப்பது எப்படி? இரண்டையும் ஒரே முறையிலான பஞ்சாங்கக் குறிப்புகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துப் பார்க்க வேண்டுமா அல்லது அப்படியே பொருத்தம் பார்க்கலாமா? இதனால் பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டா? இதுபோன்ற சந்தேகங்கள் ஜாதகர்களுக்கு மட்டுமின்றி சில ஜோதிடர்களுக்கே ஏற்படுவது உண்டு.

அத்தகைய சூழ்நிலையில் இரண்டு ஜாதகங்களையும் வாக்கிய பஞ்சாங்கக் கணிப்பின்படி மாற்றி பொருத்தம் பார்ப்பது நலம் என அனுபவம் மிகுந்த ஜோதிடர்கள் கூறுகிறார்கள். தமிழகத்தில் அநேகமாக வாக்கியப் பஞ்சாங்க கணிதமே அதிகம் பின்பற்றப் படுகிறது. கணினி மூலமும் ஜாதகங்களைக் கணிக்கும் இந்த காலத்தில் எந்த முறையில் வேண்டுமானாலும் ஜாதகக் குறிப்புகளை எளிதாக எடுக்க முடிகிறது. வட இந்தியாவில் லஹரி என்ற கணித முறை பின்பற்றப்படுகிறது. இது, வாக்கியப் பஞ்சாங்க கணக்கீடு முறையை ஒட்டி அமைவதால், அதிக வித்தியாசம் ஏற்படுவதில்லை.

மருத்துவமும் ஜோதிடமும் ஒரே மாதிரியானவை. எக்ஸ்-ரே படத்தால் மட்டும் பயன் ஏற்பட்டுவிடாது. அதைப் பார்த்து ஆராய்ந்து, உடற்கூறில் உள்ள குறைகளைக் கண்டறிந்து பயன்தரும் மருந்தை எழுதித் தருவது மருத்துவரின் திறமைதானே! அதுபோல், ஒரு  ஜாதகத்தை ஆராய்ந்து பலன் சொல்வதில் ஜோதிடரின் அறிவாற்றல், சாஸ்திர அறிவு, தவ பலன் ஆகியவை முக்கியம்.

- தொடரும்...