Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு கதை... ஒரு தீர்வு! - விடை சொல்லும் வேதங்கள்! - 2

 

##~##

னக்கு நன்கு அறிமுகமான ஒருவரிடமிருந்து ஒருநாள் தொலைபேசி அழைப்பு வந்தது. பதற்றமும் பரபரப்புமாகப் பேசினார். ''என் தம்பி தற்கொலைக்கு முயற்சி செய்கிறான். ஏற்கெனவே இரண்டு முறை முயன்று, நல்லவேளையாகக் காப்பாற்றி விட்டோம். நீங்கள்தான் அவனிடம் பேசி, நல்ல வார்த்தைகள் சொல்லி, தற்கொலை எண்ணத்திலிருந்து அவன் மனசை மாற்றவேண்டும்'' என்றார்.

''அவனை முதலில் ஒரு மனவியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்'' என்றேன்.

''இரண்டு வாரங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றேன். அவர் மருந்துகளும் கொடுத்தார், ஆலோசனையும் தந்தார். ஆனாலும், என் தம்பி மனம் மாறியதாகத் தெரியவில்லை. இப்போதுகூட சோக மயமாகத்தான் இருக்கிறான். அடிக்கடி அறைக்குள் சென்று, கதவைத் தாளிட்டுக் கொள்கிறான். பயமாக இருக்கிறது'' என்றார்.

மறுநாள், நண்பரைப் பார்க்கப் போவது போல் அவரது வீட்டுக்குப் போய், அவரின் தம்பியையும் தற்செயலாகப் பார்ப்பது போல் பார்த்துப் பேச்சுக் கொடுத்தேன்.

20 வயது ஆகிறதாம். சரி, இளம் வயது; எனவே, காதல் தோல்வி போன்ற பிரச்னையாக இருக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், காரணம் முற்றிலும் வேறாக இருந்தது.  

அவனுக்கு 7 வயதிருக்கும்போது, கர்னாடக சங்கீதம் கற்றுக் கொள்ள அவனை ஒரு குருவிடம் சேர்த்துவிட்டிருக்கிறார்கள். சுமார் 12 வருடங்கள் பயிற்சி தொடர்ந்திருக்கிறது. மிகச் சிறப்பான குரல். கூடிய விரைவில் மேடைகளில் தனியே பாடும் வாய்ப்பு கிடைத்துவிடும் என்கிற ஒரு கட்டத்தில், சோதனையாக ஒருவித வைரஸ் காய்ச்சலால் அவன் தொண்டை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அவன் குரல் கரகரப்பாகி, ரொம்பவே சீர்கெட்டுவிட்டது. ''என் குரலைக் கேட்க எனக்கே சகிக்கவில்லை'' என்று அவன் கூறியபோது பரிதாபமாக இருந்தது. நகரின் தலைசிறந்த காது மூக்கு தொண்டை நிபுணரே, 'ஸாரி! இதற்குமேல் எந்தச் சிகிச்சையும் இல்லை’ என்று கைவிரித்துவிட்டதாகவும் சொன்னான்.

அவனோடு தன்மையாகப் பேசி, ஆறுதல் சொன்னேன். ஆனால், என் ஆறுதல் மொழிகள் எதுவும் அவனிடம் எந்த மாறுதலையும் உண்டாக்கவில்லை. தன் வாழ்க்கையே அஸ்தமித்துப் போனதாகச் கருதி, மருகினான்.

அப்போதுதான் சத்யகாமனின் கதையை அவனுக்குக் கூறினேன்.

த்யகாமன் என்ற சிறுவனுக்குக் குருகுல வாசம் செய்து, கல்வி கற்க வேண்டும் என்ற ஆசை வந்தது. கௌதமர் என்கிற ரிஷியிடம் சென்றான். ''ஐயா! என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொண்டு, குருகுல வாசம் செய்ய அனுமதிக்க வேண்டும்'' என்று பணிவுடன் வேண்டினான்.

''குலப் பின்னணி தெரியாமல் யாரையும் நான் மாணவனாக ஏற்றுக்கொள்ள மாட்டேன். அந்தணர்களை மட்டும்தான் நான் குருகுலவாசம் செய்ய அனுமதிப்பேன். உன் குலம் என்ன? கோத்திரம் என்ன?'' என்றார் கௌதமர்.

சத்யகாமனுக்கு அவை இரண்டுமே தெரியவில்லை. தன் தாய் ஜபாலாவை அணுகினான். ''அம்மா, என் குலம், கோத்திரம் என்ன?'' என்று கேட்டான்.  

ஜாபாலா சங்கடம் அடைந்தாள். அவள், தன் கணவரிடம் குலம், கோத்திரம் குறித்து எதுவும் கேட்டறிந்தது கிடையாது. இப்போது அவர் இருக்கும் இடமோ, அவரைக் குறித்த வேறு விவரங்களோ அவளுக்குத் தெரியாது (இந்தத் தகவல் வேறு விதமாகவும் சொல்லப்படுவது உண்டு).

மகனிடம் மறைக்காமல் இந்த உண்மையைக் கூறினாள். இதனால், மகன் விரும்பிய குருகுல வாசம் கிடைக்காது என்பது அவளுக்குத் தெரியும். என்றாலும், பொய்யின்மீது தன் மகனின் குருகுல வாழ்க்கை எழுப்பப்படுவதை அவள் விரும்பவில்லை.

சத்யகாமன் மறுநாளே கௌதமரிடம் சென்று, தன்னுடைய குலம், கோத்திரம் குறித்த விவரங்களை அறியமுடியாத நிலையை கூறினான். அவர் ஒரு கணம் திகைத்தாலும், 'இந்த அளவுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கும் இவன் நிச்சயம் ஒரு நல்ல வித்துதான்’ என்று முடிவு செய்து, அவனைத் தமது சீடனாக ஏற்றுக்கொண்டார்.  

மிகச் சிறப்பாகக் குருகுலம் பயின்றான் சத்யகாமன். அவன் செயல்களில் மட்டுமின்றி, எண்ணங்களில்கூட அப்படியரு தூய்மை! கௌதமரின் பசுக்களை தினமும் மேய்க்கும் வேலையும் அவனுக்குதான். அவனது நல்லொழுக்கத்தையும், ஆன்ம தாகத்தையும் தேவர்களும் கண்டனர்.

ஒருமுறை, அவன் பசுக்களை​ மேய்த்துக்கொண்டிருந்தபோது, சூரிய தேவனும் வாயு பகவானும் அவனுக்கு ஞானோபதேசம் செய்தனர். குருகுலம் திரும்பிய சத்யகாமனின்  முகத்தில் ஞான ஒளி வீசுவதைக் கண்ட கௌதமர் சற்றே திகைத்து, ''யார் உனக்கு ஞானோபதேசம் செய்தது?'' என்று கேட்க, சத்யகாமன் நடந்ததைக் கூறினான். அதன் பின்னர், சத்யகாமனுக்குப் பூரணமான உபதேசங் களை கௌதமர் வழங்கினார்.

ஜபாலன் என்று அழைக்கப்பட்ட அந்தச் சத்யகாமன்தான் பின்னாளில் மிகச் சிறந்த மகரிஷியாக மாறினார்.

ந்தப் புராணக் கதையைச் சொன்ன நான், மேலும் சில ஆலோசனைகளையும் அந்த இளைஞனுக்குச் சொன்னேன்.

''சத்யகாமனும் அவன் தாயும் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டனர். அவன் தாயும் தன் கடந்த காலத் தவறுகளை மறைக்கவில்லை. சத்யகாமனும் தன் கோத்திரம் குறித்து கௌதமரிடம் பொய் சொல்லவில்லை. நமது எதிர்காலம் பாழாகிவிடுமோ என்ற அச்சத்தில் உண்மையை எதிர்கொள்ள அவன் தயங்கவில்லை. ஆனது ஆகட்டும், வருவது வரட்டும் என்று தைரியமாக நின்றான். அதனாலேயே பின்னாளில் மகரிஷியாக ஆனான்.

நம் வாழ்விலும் நம்மை மீறிச் சில கசப்புகள் நேரும்போது, அவற்றைத் துணிச்சலோடு ஏற்க வேண்டும். 'எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?’ என்று புலம்புவதிலோ, தப்பித்து ஓடுவதாக நினைத்து, கோழைத்தனமாக ஒரு முடிவெடுப்பதிலோ எந்த அர்த்தமும் இல்லை. 'சரி, இது இப்படி நடந்துவிட்டது. இதை எப்படிச் சரிசெய்யலாம்? இதிலிருந்து எப்படி மீண்டு வரலாம்?’ என்று யோசிக்கவேண்டும்!'' என்றேன்.

''என் தொண்டை இனி சரியாக வாய்ப்பே இல்லை என்கிற நிலையில், எப்படி மீள்வது? இதெல்லாம் வெறும் ஆறுதல் வார்த்தைகள்!'' என்றான் அந்த இளைஞன்.  

நான் புன்னகைத்தேன். அவன் தோளில் கை வைத்து, ''லதா மங்கேஷ்கரைத் தெரியும்தானே?'' என்றேன்.

''அவரைத் தெரியாதவர் இருக்க முடியுமா? மிகச் சிறந்த இந்திப் பாடகியாயிற்றே!  எனக்கு ரொம்பவும் பிடித்த இசைக்குயில் அவர். ஹூம்... நானும் அப்படி ஒரு மனக்கோட்டை கட்டியிருந்தேன். எல்லாம்தான் பாழாய்ப் போச்சே!'' என்றான்.

''கர்னாடக இசை உலகில்தான் என் வாழ்க்கை என்கிற என் ஆசை ஒரேயடியாகப் பொசுங்கிவிட்டதே!'' என்று அவன் சொன்ன போது, அவன் கண்கள் கலங்கியிருந்தன.

''உன் ஆசை பொசுங்கவில்லை. உயிர்ப்புடன்தான் இருக்கிறது'' என்றேன் நான். எரிச்சலும் குழப்பமுமாக என்னைப் பார்த்தான்.

''உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? லதா மங்கேஷ்கர் ஒரு நடிகையாக ஆசைப்பட்டுத்தான் திரைத் துறைக்கு வந்தார்.  சில படங்களிலும் நடித்தார். ஆனாலும், ஒரு நடிகையாக அவரால் சோபிக்க முடியவில்லை. அதனால் அவர் சோர்ந்து போய்விட்டாரா என்ன? தனது ஆசை திரைத்துறையில்; அது நடிகையாக இருந்தால் என்ன, பாடகியாக இருந்தால் என்ன என்று பின்னணிப் பாடகியாக தன் திறமையை வளர்த்துக்கொண்டார். இன்றளவும் அவரது சாதனையை முறியடிக்க இன்னொருவர் பிறக்கவில்லை. உனது தொண்டைதானே பாதிக்கப்பட்டது? அதனால் என்ன? உனக்குத்தான் கர்னாடக சங்கீத ஞானம் இருக்கிறதே! முயற்சி செய்தால், நீ சுலபமாக வயலின் வித்வானாகவோ மிருதங்க வித்வானாகவோ ஆகலாமே!'' என்றேன் நான்.

இப்படிச் சொன்னதும், அந்த இளைஞனின் முகம் மலர்ந்தது; கண்களில் நம்பிக்கை ஒளி பளிச்சிட்டது. 'இனி அவனது அறைக் கதவின் உள்தாழ்ப்பாள் போடப்படாது’ என்று அவனது அண்ணனுக்கு தைரியம் சொன்னேன்.

- தீர்வுகள் தொடரும்...