Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆரூடம் அறிவோம்:16

ஜோதிட புராணம்

- சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ஞ்சாங்கத்தின் அங்கங்கள் குறித்தும், பஞ்சாங்கத்தின் மூலம் நாள், நட்சத்திரம், திதி ஆகியவற்றை அறிவது குறித்தும், அதன் மூலம் நல்ல நாள் எது எனக் கண்டுகொள்வது குறித்தும், பல்வேறு காலண்டர்களைப் பற்றியும் முந்தைய அத்தியாயங்களில் தெரிந்து கொண்டோம்.

அதேபோன்று, ஜோதிட சாஸ்திரத்தில் வகுக்கப்பட்டுள்ள 60 ஆண்டு களின் பெயர்களையும் அறிவது அவசியம். ஆங்கில ஆண்டுகள் 2011, 2012, 2013... என எண்களால்தான் குறிப்பிடப்படுகின்றன. நம் நாட்டு ஜோதிட முறையில் வருடங்களுக்குப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இப்படி மொத்தம் 60 ஆண்டுகளின் பெயர்கள் உள்ளன. 60 ஆண்டுகள் முடிந்த பின்பு மீண்டும் முதலாவது ஆண்டு தொடங்கும். அதாவது, அக்ஷய வருடம் முடிந்ததும், மீண்டும் பிரபவ வருடம் துவங்கும்.

ஆண்டுகள் 60 என்பதால்தான், 60-வது வயதில் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடுகிறார்கள். ஒருவர் பிரபவ வருஷத்தில் பிறந்திருந்தால், அவருடைய 60-வது வயதில் அக்ஷய வருடம் நடக்கும். அது முடிந்து 61-வது வயதில் பிரபவ வருஷம் ஆரம்பமாகும்.

அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 60 வருடங்களுக்கும் பொதுவான பலன்கள் உண்டு என்பதை இடைக்காடர் எனும் சித்தர் தூய தமிழில் வெண்பாக்களாக எழுதி வைத்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் வெளிவரும் பஞ்சாங்கங்களில் இந்த வெண்பாவைப் பதிப்பித்து, அதன் பொருளையும் குறிப்பிட்டிருப்பார்கள். இதை வைத்தே அந்த ஆண்டில் நிகழும் நல்லது கெட்டதை அறியலாம். அனுபவத்தில் பார்த்தால், இந்த வெண்பாக்களில் புதைந்துள்ள கருத்துக்கள் அனைத்தும் உண்மை என்பது தெரிய வரும். உதாரணமாக, இடைக்காடரின் ஒரு வெண்பாவைக் குறிப்பிடுகிறேன்.

தற்போது நடந்துகொண்டிருப்பது விஜய வருஷம். இதற்கான இடைக்காடரின் வெண்பா...

மண்ணில் விசய வருட மழை மிகுதி
எண்ணு சிறு தானியங்களெங்குமே - நண்ணும்
பயம் பெருகி நொந்து பரிவாரமெல்லாம்
நயங்களின்றி வாடுமென நாட்டு

பொருள்: விஜய வருஷத்தில் நல்ல மழை பெய்யும். சிறு தானியங்களின் விளைச்சல் அமோகமாக இருக்கும். எங்கும் பயத்தோடு கூடிய சூழ்நிலையும், அதனால் வேதனையும் ஏற்பட்டு, மக்களும் கால்நடைகளும் வாடுவார்கள்.

இந்தப் பாடலில் எத்தனை உண்மை பொதிந்திருக்கிறது என்று பாருங்கள். பருவ மழைகள் பொய்க்கவில்லை. இந்த ஆண்டு கோடைகால வெப்பம் தெரியாமல், அவ்வப்போது மழையும், குளிரும் உள்ள சீதோஷ்ண நிலை நாடு முழுவதும் காணப்படுகிறது. இருப்பினும், கங்கையின் சீற்றத்தால் இமயமலைச் சாரலில் ஏற்பட்ட அழிவை நாம் அறிவோம். விலைவாசி உயர்வால் எல்லாத் தர மக்களும் வரவு- செலவுகளைச் சரிக்கட்ட முடியாமல் தவிப்பதையும் நாம் அறிவோம். சித்தர்கள் வாக்கு சிவ வாக்கு என்பர். ஜோதிட சாஸ்திரத்தில் அவர்கள் சொல்லிவைத்த உண்மைகள் இன்றுவரை மாறாமல் நமக்கு வழிகாட்டி வருகின்றன.

சரி! இனி மாதங்களைப் பார்க்கலாம்.

மாதங்கள் 12 என்பதை முந்தைய அத்தியாயங்களில் தெரிந்து கொண்டோம். ஆங்கில மாதங்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை. 365 1/4 நாட்களைக் கொண்ட ஒரு வருடத்தை, 12 ஆகப் பிரித்து, சில மாதங்களுக்கு 30 நாட்கள் என்றும், சில மாதங்களுக்கு 31 நாட்கள் என்றும், பிப்ரவரி மாதத்துக்கு 28 நாட்கள் என்றும் கணக்கிட்டுள்ளனர். லீப் வருடங்களில் (அதாவது, நான்கால் வகுபடும் ஆங்கில ஆண்டுகளில்) பிப்ரவரிக்கு 29 நாட்கள் என்று வழக்கத்தில் வைத்துக்கொண்டிருக்கிறோம்.

தமிழ் அல்லது இந்திய ஜோதிட முறைப்படி, மாதங்கள் சித்திரை முதல் பங்குனி வரை பன்னிரண்டாகும். வடமொழியில் இந்த மாதங்களை, பன்னிரண்டு ராசிகளின் பெயர்கொண்டே குறிப்பிடுகிறார்கள். மற்ற மாநிலங்களில், இந்த மாதங்களுக்குச் சற்று வித்தியாசமான பெயர்கள் உள்ளன.

ஆங்கில மாதங்களைப் போன்று இவற்றின் நாட்கள் 30 அல்லது 31 என்று வருவதில்லை. சில மாதங்களுக்கு 29 நாட்களும், சில மாதங்களுக்கு 32 நாட்களும்கூட இருக்கும். தமிழ் மாதம் ஒவ்வொன்றும் அநேகமாக ஆங்கில மாதத்தின் 14 முதல் 18 தேதிகளுக்குள்தான் பிறக்கும்.

இப்போதைய விஜய வருஷத்தில் ஒவ்வொரு மாதமும் எத்தனை நாட்கள் என்பதை இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

சித்திரை 31

வைகாசி 32

ஆனி 31

ஆடி 32

ஆவணி 31

புரட்டாசி 30

ஐப்பசி 30

கார்த்திகை 30

மார்கழி 29

தை 29

மாசி 30

பங்குனி 30

ஆக, மொத்தம் 365 நாட்கள்!

மாதங்களின் பெயர்கள் வட மொழியிலும், மாநில மொழிகளிலும் மாறுபட்டிருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதைப்பற்றியும் அறிவது, ஜோதிடம் பயில்பவர்களுக்கு அவசியம்.

தமிழ் மாதம் வடமொழி பிறமொழிகளில்

இந்திந்த மாதங்களில் இன்னின்ன சுபகாரியங்களைச் செய்யலாம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், இது ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள கலாசாரம், சம்பிரதாயம் ஆகியவற்றை ஒட்டி மாறுபடும்.

உதாரணமாக, தமிழ்நாட்டில் ஆடி மாதத்தை அம்பாளுக்கு உகந்த மாதமாகக் கொண்டாடுவார்கள். ஆனாலும், அந்த மாதத்தில் புதுவீடு புகுவது இல்லை. புதிதாகத் திருமணமாகும் தம்பதிகளை இந்த மாதத்தில் பிரித்து வைக்கும் பழக்கமும் உண்டு. ஆனால், வேறு சில மாநிலங்களில், ஆடி மாதத்துக்கு இணையான ஆஷாட மாதத்தில், இந்து மதத்திலேயே சில பிரிவினர் திருமணம் முதலான சடங்குகளை நடத்துகிறார்கள். இவையெல்லாம் கலாசாரத்தின் அடிப்படையில் வந்த சம்பிரதாயங்கள்.

சாஸ்திரம் வேறு; சம்பிரதாயம் வேறு. இரண்டும் ஒன்றுக்கொன்று சிறு சிறு முரண்பாடுகளைக் கொண்டவையே! ஆயினும் சாஸ்திரம், சம்பிரதாயம் இரண்டையும் அனுசரித்தே நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் கூறியுள்ளனர்.

சாஸ்திரம் என்பது சட்டப் புத்தகம் போல; அதை மீறக்கூடாது! சம்பிரதாயம் என்பது வக்கீலின் வாதம் போன்றது. சட்ட திட்டத்துக்கு உட்பட்டு உணர்வுபூர்வமான காரியங்களைச் செய்து, சுபகாரியங்களை மகிழ்ச்சியோடு கொண்டாட வழிசெய்வது சம்பிரதாயம். ஆக, இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவைதான். ஆனால், நியாயங்களுக்கு உட்படாத, அதர்ம மான சில சம்பிரதாயங்களும் வழக்கத்தில் உள்ளன. இவை கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

- தொடரும்...