Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருமண வரம் அருளும் கல்யாணவேங்கடேஸ்வரர்!

 
ஆலய தரிசனம்!
திருப்பதி ஸ்ரீநிவாசமங்காபுரம்

திருப்பதிக்கு வரும் பலருக்கு, பத்மாவதி தாயார் அருளும் அலமேலு மங்காபுரம் பற்றித் தெரிந்த அளவுக்கு, ஸ்ரீநிவாசமங்காபுரம் குறித்து சரியாகத் தெரியவில்லை. இந்தக் கோயிலின் மகத்துவம் அறிந்த வெகு சிலரே, மாறாத இளமைக் கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீகல்யாண வேங்கடேஸ்வரரை தரிசிக்கும் பாக்கியம் பெறுகின்றனர். திருமலையில் கிடைக்காத பெருமாளின் பாத தரிசனம், இங்கே கிடைக்கிறது!

 

திருப்பதி- மதனப்பள்ளி சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீநிவாசமங்காபுரம். பிரம்மோற்ஸவம், பக்தர்கள் பிரார்த்தித்துக் கொண்டு நடத்தி வைக்கும் கல்யாண உற்ஸவம் தவிர, இன்னொரு விழாவும் இந்தக் கோயிலில் பிரஸித்தம்! 'சாக்ஷ£த்காரம்' என்று கொண்டாடப்படும் அந்த விழா ஏற்பட்ட கதை சுவாரஸ்யமானது.

ஆதியில் இங்கே ஆஸ்ரமம் அமைத்து தங்கி இருந்தார் அகத்தியர். பத்மாவதி தாயாரை மணம் முடித்த பெருமாள், புதுமணத் தம்பதி மலையேறக் கூடாது என்ற சம்பிரதாயத்துக்கு இணங்க, அகத்தியரின் வேண்டுகோளை ஏற்று, ஆறு மாத காலம் இந்தத் தலத்தில் தங்கி இருந்தாராம். பிறகு பெருமாள், 'ஸ்ரீவாரி மெட்டு' என்ற பாதை வழியாக திருமலைக்குச் சென்றார். ஸ்வாமி நடந்து சென்ற பாதையே, பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையாக இருந்தது. இந்தப் பாதைக்கு எதிர்ப்புறம்தான்... தற்போது பக்தர்கள் பாதயாத்திரையாகச் செல்லும் பாதை உள்ளது. இதன் முதல் படியை 'அலிபிரி' என்கிறார்கள். கடைசிப் படியாக அதாவது அடிப் படியாக இருந்ததே, பெயர் மருவி, 'அலிபிரி' என்றானதாம்!

ஸ்ரீநிவாசமங்காபுரத்தில்தான்... ஸ்ரீபத்மாவதி தாயாரை மணம் முடிக்க, தன்னைச் சுற்றிலும் புற்று வளரும் அளவுக்கு கடுந்தவம் புரிந்தாராம் பெருமாள்! கோயில் வளாகத்தில் இன்றும் புற்றுகள் பல உள்ளன. பெருமாள், புற்றின் அடியில் தோன்றியதால், கோபுரத்தில் விமான ஸ்ரீநிவாசர் இல்லை.

இந்தக் கோயிலைக் கட்டியது யார் என்பது குறித்த விவரங்கள் இல்லை. ஆனால், தாளப் பாக்கம் அன்னமாச்சார்யரின் பேரனான சின்னதிருமலாச் சார்யுலு என்பவர் இந்தக் கோயிலை புதுப்பித்ததாகக் கல்வெட்டு(S-1463) தகவல்கள் கூறுகின்றன. 1940வரை... பலநூறு ஆண்டுகளாக பாழடைந்து கிடந்ததாம் இந்த ஆலயம். 1940-ல் ஒரு சம்பவம் நிகழ்ந்தது!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நடுத்தர மாத்வா குடும்பத்தில் பிறந்தவர் சுந்தரராஜ சுவாமி. விவசாயம்தான் தொழில். ஒரு நாள் அதிகாலை சுந்தரராஜ சுவாமிக்கு ஒரு கனவு. புற்றுகளும் முட்புதர்களும் சூழ்ந்த பாழடைந்த மண்டபம்... பெருமான் சங்கு- சக்ராயுதத்துடன் தோன்றி, ''இங்கு, நீண்ட நாட்களாக பசியோடு காத்திருக் கிறேன், வருகிற ஆஷாட மாதம் (ஆடி) உத்தர பல்குனி நட்சத்திரம், சுத்தசப்தமி நாளில் நீ இந்த இடத்துக்கு வந்து பூஜை செய்'' என்றார்.

வயலில் வேலை செய்து பிழைக்கும் தான், கனவில் கண்ட இடத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்று கவலை அடைந்த சுந்தரராஜ சுவாமி, தன் தந்தை ராகவேந்திரராவிடம் ஆலோசித்தார். அவரோ, ''கனவு காண்பதை விட்டுவிட்டு வேலையைப் பார்'' என்றார்.

அடுத்த இரு நாட்களும், மீண்டும் அதே காட்சி. அதே இடம்! இந்த முறை சுந்தரராஜனின் முதுகில் ஒரு அடி வேறு! துடித்து எழுந்தவர் இந்த முறை அதிகம் கலங்கினார். பஞ்சாங்கத்தை எடுத்து கனவில் இறைவன் குறிப்பிட்ட திதி- நட்சத்திர நாளை கணக்கிட்டார். அந்த நாள் 11-7-1940; இன்னும் 16 நாட்களே இருந்தன! உடனடியாக, அந்த இடத்தைத் தேடி தந்தையுடன் புறப்பட்டார் சுந்தரராஜ சுவாமி. வழியில் காண்பவரிடம், மண்டபம் குறித்து விசாரித்தார். புதர் மண்டிய மண்டபங்கள் ஏதேனும் தென்பட்டால் அருகில் சென்று பார்த்து பரிதவித்தார்.

நாட்கள் உருண்டன. ஸ்ரீசுந்தரராஜ சுவாமியின் தேடலும் ஓயவில்லை. 13 நாட்கள் தொடர்ந்த இடையறாத தேடல்... ஏறத்தாழ 110 கி.மீ. தூரம்... ஆயினும் எதுவும் தென்படவில்லை. 14-ஆம் நாள். தாகத்துக்கு தண்ணீர் தேடி அலைந்தவர்கள் முன், ஆட்டிடையன் உருவில் வந்த பெருமாள், தண்ணீர் இருக்கும் இடம் கூறினார். அவரிடமும் பாழடைந்த மண்டபம் குறித்து விசாரித்தார் சுந்தரராஜ சுவாமி.

புன்னகைத்த ஆட்டிடையன், அருகில் பாழடைந்த கோயில் ஒன்று உள்ளதாகத் தெரிவித்தான். அவன் காட்டிய திசை நோக்கி நடந்தனர். அந்த இடம், தான் கனவில் கண்டது போலவே இருப்பதைக் கண்டு சுந்தரராஜ சுவாமி மகிழ்ந்தார். புதர்களை விலக்கி, பாழடைந்து கிடக்கும் கோயிலுக்குள் நுழைந்தவர் அதிர்ந்து போனார்! விஷ நாகங்களும் பூரான், ஆந்தை, கருந்தேள் போன்ற ஜந்துக்களும் குடியிருந்தன. பயப்படாமல், 'என் இறைவன் பசியோடு இருக்கிறான்' என்று கத்தியபடி உள்ளே நுழைந்தார். கோயிலுக்குள், உடைந்து போன சில சிலைகளைத் தவிர, வேறு எதுவும் இல்லை. மனம் தளர்ந்த சுந்தரராஜ சுவாமி, ஸ்ரீநிவாசமங்காபுரம் கிராமத்தினரிடம் உதவி கேட்க, அவர்களும் சேர்ந்து தேடினர்; இறைவனின் சிலா ரூபங்கள் எதுவும் காணப்படவில்லை!

''கருவறை சுவர் மட்டுமே பாக்கி... அதையும் இடித்துப் பார்ப் போம்'' என்றார் சுந்தரராஜன். சுவர் இடிக்கப்பட்டது. உள்ளே- தூசி படிந்த நிலையில் ஆனால் ஆஜானுபாகுவாக, திருநாமமும் வெள்ளை வஸ்திரமும் தரித்து, திருமலை ஸ்ரீவேங்கடாசலபதி திருவுருவைவிட சற்றே உயரமாக, அந்த விக்ரஹத்தை அச்சில் வார்த்தது போல் காட்சி தந்தார் ஸ்ரீகல்யாண வேங்கடேஸ்வர சுவாமி. ஊரார் வியந்தனர். கனவில் இறைவன் குறிப்பிட்ட அதே நாளில் (11-7-1940), ஸ்வாமிக்கு பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் சுந்தரராஜருக்கு அளவற்ற மகிழ்ச்சி. எம்பெருமான், தனது இருப்பிடத்தை ஸ்ரீசுந்தரராஜ சுவாமிக்கு காண்பித்த (ஸாக்ஷ£த்காரம் செய்வித்த) நாளையே சாக்ஷ£த்காரம் எனும் உற்ஸவமாக மூன்று தினங்கள் கொண்டாடுகின்றனர்.

16-ஆம் நூற்றாண்டில்- விஜயநகர சாம்ராஜ் ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, பிஜாப்பூர் கோல்கொண்டா சுல்தான்களின் படையெடுப் புகள் தொடர்ந்தன. அவர்களால் சுவாமி விக்கிர கங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்ப தற்காக, கருவறை இருப்பதே தெரியாதபடி சுவர் எழுப்பி மறைத்தார்களாம் வைணவர்கள். அந்நிய படையெடுப்புகளால் இந்தக் கோயிலும் பாதிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்களாக... பின்னம் அடைந்த நிலையில் இருக்கும் கருடாழ்வார் மற்றும் விஷ்வக்சேனர் சிலைகளை, சந்திரகிரி கோட்டை மியூசியத்தில் பாதுகாத்து வைத்துள்ளனர். இந்தக் கோயிலின் உற்ஸவர் சிலை, திருப்பதி- ஸ்ரீகோதண்டராமர் கோயில் கோபுர விமானத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆய்வுகளுக்குப் பிறகு, விக்கிரகம் ஸ்ரீநிவாஸமங்காபுரம் ஆலயத்துக்கே வழங்கப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பிறகு, கோயிலை தொல்பொருள் ஆய்வுத் துறை கையகப்படுத்தும் நிலை வந்தது. சுந்தரராஜ சுவாமி, பெருமாளிடம் மனம் உருகப் பிரார்த்தித்தார். கோயிலின் அவல நிலையையும், சுந்தரராஜ சுவாமியின் தீவிர பக்தியையும் கண்ட தொல்பொருள்துறை இயக்குநர், பெருமாளை தரிசித்து பிரமித்தார். சுந்தரராஜ சுவாமி, தொடர்ந்து பூஜை செய்ய அனுமதி வழங்கி, சீரமைப்புக்காக உதவித்தொகையும் அளித்தார்.

ஸ்ரீசுந்தரராஜ சுவாமி இன்னும் பல சோதனை களை சந்திக்க வேண்டியிருந்தது. பக்கத்தில் உள்ள கிராமங்களான பீமாவரம், கொடாலா, நரசிங்காபுரம், மிட்டபாளையம், பெருமாள்பள்ளி, கொப்பரவாளப்பள்ளி, புதுபட்லா ஊர்களுக்கு பிரபல பஜனை கோஷ்டியுடன் செல்வார். மக்கள் அரிசியை உலையில் போடும்போது, ஒரு பிடி அரிசியை எடுத்து வைத்து, இந்தக் குழுவினரிடம் கொடுப்பர். அதைக் கொண்டு பெருமாளுக்கு கைங்கர்யம் செய்தார் சுவாமிகள்.

சுந்தரராஜ சுவாமி பூஜையை ஆரம்பித்து 27 வருடங்களுக்குப் பிறகு (1967-ல்), கோயிலின் பூஜை பொறுப்பை, திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க முடிவுசெய்த தொல்பொருள் ஆய்வுத் துறை, சுந்தரராஜ சுவாமியின் அனுமதியைக் கோரியது. தனது காலம் வரையிலும் பூஜை செய்ய தன்னை அனுமதிக்கும்படி சொன்னார் சுவாமி. 1979-ல் இவரது மறைவுக்குப் பின், இவரின் வளர்ப்பு மகன் ராகவந்திராசார்யுலுவை கோயில் கைங்கர்யத்துக்கு தேவஸ்தானம் நியமித்தது.

இன்று புதுப்பொலிவுடன் திகழ்கிறது கோயில்; திருமணத் தடை நீங்க, இங்கே ஸ்ரீகல்யாண வேங்கடேஸ்வர ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்ஸவ பிரார்த்தனை செய்யப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள், அருகிலேயே இருக்கும்... ஸ்ரீசுந்தரராஜ சுவாமி வாழ்ந்த ராமர் பஜனை மடத்தையும் வீட்டையும்கூட தரிசித்து வரலாம்.

- ஜெ. சங்கர் கணேஷ், திருப்பதி