Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காரடையான் நோன்பு - இன்று மார்ச் 14, 2014

மாசி மாதமும், பங்குனியும் மாதமும் கூடும் வேளையில் காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நோன்பு, மாசி மாதத்தின் கடைசி நாளின் இரவு ஆரம்பித்து பங்குனி மாத முதல் நாள் காலையில் முடிக்கப்படுவதாகும்.

இந்த நோன்பு காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக இந்நோன்பை கடைப்பிடிக்கலாம்.

முற்காலத்தில் சாவித்திரி எனும் பதிவிரதை, எமதர்மனால் ஆட்கொள்ளப்பட்ட தன் கணவனின் உயிரை திரும்ப தரச்சொல்லி, எமதர்மனிடம் வாதாடி, சூசகமான வரங்கள் கேட்டு, தன் கணவனின் உயிரை மீட்டாள். அதனால், அந்த சமயத்தில் கடைப்பிடிக்கப்படுவது காரடையான் நோன்பு ஆகும்.

மாங்கல்ய பாக்கியத்துக்காக இந்த காரடையான் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரதத்தின்போது, பெண்கள் நீராடி, ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைத்து, கலசத்துக்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறு கட்டி, அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக, சாவித்திரியாக கருதி வழிபடவேண்டும்.

அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடை, உருகாத வெண்ணெய் போன்றவற்றை நிவேதனம் செய்யவேண்டும். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். மாசிக்கயிறு பாசி படியும் என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகும்.

காரடையான் நோன்பு இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள்.