Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சந்திரதோஷம் நீக்கும் பரிமள ரங்கநாதர்! - திருஇந்தளூர்

ஆலய தரிசனம்

காவிரிக் கரையில் அமைந்துள்ள வைணவத் தலங்களில் ஐந்து தலங்கள் முக்கியம் வாய்ந்தவை. அவை... திருவரங்கப்பட்டினம் (மைசூர்), திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), அப்பாலரங்கம் (கோயிலடி), மத்தியரங்கம் (கும்பகோணம்), பரிமளரங்கம் (திருஇந்தளூர்)! இவற்றுள், நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு சிறப்பு சேர்ப்பது... திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரங்கநாதர் ஆலயம்! திருவிழந்தூர் என்றும் சொல்வர்.

 108 திவ்ய தேசங்களில் ஒன்று! பாஞ்சராத்திர ஆகமப்படி பூஜை நடக்கும் இந்தத் தலத்தில், ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக பெரிய பள்ளிகொண்ட பெருமாளை தரிசிக்கலாம்.  

 தட்சனின் சாபத்தால், க்ஷயரோக நோய்க்கு ஆளான சந்திரன், இங்கே தவம் இருந்து பெருமாள் அருளால் விமோசனம் அடைந்தானாம். இதனால் இந்த ஊருக்கு, 'இந்துபுரி’ என்று பெயர். இதுவே இந்தளூர் என்று மருவியதாம். சந்திரன் நீராடிய திருக்குளம்- இந்து புஷ்கரணி. இதில் நீராடி ஸ்ரீபரிமள ரங்கநாதரை வழிபட, சந்திர தோஷம் நீங்கும்.

பிரம்மனின் வேண்டுதலை ஏற்று, மது- கைடப அரக்கர்களை அழித்து, அவர்கள் அபகரித்துச் சென்ற வேதங்களை மீட்டு அவற்றுக்கு பரிமளம் (புனிதம்) அளித்ததால், ஸ்ரீபரிமளரங்கநாதர் என்று பெருமாளுக்கு பெயர்.

 முற்காலத்தில் நறுமணம் வீசும் புஷ்பக்காடாக திகழ்ந்த இடத்தில் எழுந்தருளியதால் பெருமாளுக்கு ஸ்ரீசுகந்தவன நாதர் என்ற பெயரும் உண்டு.

 இந்த ஆலயத்தை எழுப்பியது அம்பரீஷன்.  கருவறை விமானம்- வேதாமோத விமானமாக அமைக்கப் பட்டுள்ளது.

 திருமங்கையாழ்வார், அருளிய 9-ஆம் திருமொழி திருஇந்தளூர் குறித்து போற்றுகிறது.

 பரிமளரங்கநாதர் நான்கு திருக்கரங்களுடன் வீரசயனக் கோலத்தில் பச்சைநிறத் திருமேனியுடன் காட்சி தருகிறார்.  

 ஸ்ரீபரிமளரங்கநாதரின் முகாரவிந்தத்தில் சூரியன், பாதாரவிந்தத்தில் சந்திரன், நாபிக் கமலத்தில் பிரம்மா ஆகியோர் பூஜிக்கின்றனர். தென்புறத்தில் காவிரித் தாயும், வடபுறம் கங்கைத் தாயும் ஆராதிக்கின்றனர். இமயன் மற்றும் அம்பரீஷன் ஆகியோர் எம்பெருமாளின் திருவடியை அர்ச்சிக்கின்றனர்.

 உத்ஸவ மூர்த்தி, உபய நாச்சிமாருடன் சிம்மாஸனத்தில் எழுந்தருளும் காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இவருக்கு அருகில் சந்தானகோபாலன், கொள்ளை அழகு!

 தவம் புரிந்து இறைவனை வழிபட்ட சந்திரன், பங்குனி மாதத்தில் பெருமாளுக்கு பிரம்மோத்ஸவம் செய்தாராம்! எனவே இன்றும் இந்த ஆலயத்தில், பங்குனியில் பிரம்மோத்ஸவம் சிறப்புற நடைபெறுகிறது.  

பிரம்மோத்ஸவம் நடைபெறும் பங்குனி மாதத்தில், காவிரியில் நீராடினால் கங்கையில் நீராடியதைவிட அதிக பலன்கள் கிடைக்கும் என்கிறது ஸ்தல வரலாறு.

தாயாரின் திருநாமம் - ஸ்ரீபரிமளரங்கநாயகி. மேலும் ஸ்ரீசுகந்த வனநாயகி, ஸ்ரீபுண்டரீகவல்லி, ஸ்ரீசந்திர சாபவிமோசனவல்லி என்றும் பெயர்கள் உண்டு. தாயார்- தனிச் சந்நிதியில் கோயில் கொண்டிருக்கிறாள்.

 குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், இந்த ஆலயத்தில் உள்ள சந்தானகோபாலனின் சிறிய விக்கிரகத்தை மடியில் வைத்து பிரார்த்திக்க... புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீஆஞ்சநேயர்- தனிச் சந்நிதியில் அருள் பாலிக்கின்றனர். இன்னொரு சிறப்பு... இந்தத் தலத்தில் உள்ள வரப்பிரசாதியான ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் நடைபெறாத நாளே இல்லை எனலாம்!

 ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் 1940; 68-ஆம் ஆண்டுகளில் விமரிசையாக நடைபெற்றது. அப்போது, ஏகாதசி முன்மண்டபம் மற்றும் கருட மண்டபம் முதலானவை கருங்கல் திருப்பணியாக எழுப்பப்பட்டதாம்! பிறகு, 6.2.1995 மற்றும் 9.4.2009 ஆகிய நாளில் மகாசம்ப்ரோக்ஷணம் விமரிசையாக நடைபெற்றது.  

 திருமங்கை ஆழ்வார் வந்த போது, சந்நிதியின் கதவுகள் திறக்கவில்லை. இதில் வேதனையுற்ற ஆழ்வார் 'அடியாருக்காகத்தானே நீ கோயில் கொண்டிருக்கிறாய். அப்படியிருக்க... காட்சி தராமல் இருப்பது தகுமா? நீயே உனது அழகைக் கண்டு வாழ்த்திக் கொள்’ என்று பாடினார் (இதனை நிந்தா ஸ்துதி என்பர்). இதன் பின்னரே பெருமாள் காட்சி கொடுத்தாராம்!

 பெருமாள், தாயார் மற்றும் ஸ்ரீஆண்டாள் ஆகியோருக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு வரும் சாம்பிராணித் தைலத்தை ஆண்டுதோறும் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தின்போது சாத்துவது வழக்கமாம்!

 சம்ப்ரோக்ஷணத்துக்கு முன்னதாக, திருப்பணிகள் நடைபெற்ற வேளையில், தைலக்காப்பு நீக்கும்போதுதான் மூலவரான பரிமளரங்கநாதர், பச்சை மரகதக்கல்லால் ஆனவர் என்பதே தெரியவந்ததாம்! அதன்பின் மாதந்தோறும் உத்திரத்தன்று மூலவரின் திருமேனிக்கு சந்தனாதி தைலமும், திருமுகத்துக்கு புனுகு ஜவ்வாதும் சாத்தப்பட்டு வருகிறது.

 சித்திரை மாதப் பிறப்பின் போது, பெருமாள் வீதியுலா வரும் அழகே அழகு! ஸ்ரீஆண்டாளுக்கு ஆடிப்பூர உத்ஸவம் 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

 ஸ்ரீகிருஷ்ணஜயந்தி விழா, உறியடி உத்ஸவம், பவித்ரோத்ஸவம் என ஐந்து நாள் விழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி நவராத்திரி மற்றும் விஜயதசமியன்று தாயாருக்கு சிறப்பு பூஜை மற்றும் பெருமாள் வெள்ளிக்குதிரையில் வீதியுலா என அமர்க்களப்படும்.

 ஐப்பசித் தேரோட்டம் மற்றும் காவிரியில் தீர்த்தவாரி ஆகிய திருவிழாக்களின் போது ஏராளமான பக்தர்கள் கூடுவர். திருக்கார்த்திகையில் சொக்கப்பனை உத்ஸவமும் நடைபெறுகிறது.

 மார்கழியில் அத்யயன உத்ஸவம், வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் (20 நாள் விழா), பெருமாளுக்கு மோகினி அலங்காரம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். மாசி மகத்தன்று உத்ஸவம் மற்றும் காவிரிப்பூம்பட்டினக் கடலில் பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.    

பங்குனி பிரம்மோத்ஸவமான 10 நாள் திருவிழாவின் போது இந்தத் தலத்தில் கூட்டம் களை கட்டும்!  

- க. அமிர்தகணேசன்

படங்கள்: ச. தமிழ்குமரன்