Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாங்கல்யம் காப்பாள் ஸ்ரீபாலியம்மன்!

ஆலய தரிசனம்

- தி.தெய்வா

திகாலத்தில் வில்வ வனமாக திகழ்ந்ததால், 'வில்வாரண்யம்’ என்று அழைக்கப்பட்ட தலம்; அங்காரகனாகிய செவ்வாய் பகவான், தோஷம் நீங்கி இறையருள் பெற்ற இடம்; வாதாபி- வில்வலன் எனும் அசுர சகோதரர்களின் அட்டூழியத்தை அடக்கி, அவர்களுக்கு அகத்தியர் மோட்சகதி அருளிய பதி! அகத்தியரால் வழிபடப்பட்டு, ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் என்ற திருப்பெயருடன், ஈசன் அருளும் பெருமையும் இந்த ஊருக்கு உண்டு!

அடேங்கப்பா! இவ்வளவு மகிமைகளுடன் கூடிய அந்த ஊர் எது என்கிறீர்களா? நமக்கெல்லாம் பரிச்சயமான வில்லிவாக்கம்தான்; சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது!

இந்த ஊரின் இன்னொரு சிறப்பு... ஸ்ரீபாலியம்மன் திருக்கோயில்.

ஆம்! அருளும் பொருளும் அள்ளித் தரும் கற்பக விருட்சமாய், நமது துன்பங்களை எல்லாம் தீர்த்து வைக்கும் கருணை நாயகியாய் வில்லிவாக்கத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீபாலியம்மன்!

'பாலி’- வித்தியாசமான, விசேஷமான பெயருடன்  அம்மன் இங்கு கோயில் கொண்டது எப்படி? இதுகுறித்து பல்வேறு தகவல்கள் உண்டு!

திருக்கயிலைக்கு பயணமான சமயபுரத்தாள், வழியில் வில்வ மரங்கள் நிறைந்த இந்த இடத்தின் அழகிய சூழல் கண்டு, இங்கேயே ஸ்ரீபாலாவின் அம்சமாக கோயில் கொண்டாள் என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ, ''ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி, பார்வதியின் அம்சம். ஸ்ரீமாரியம்மன் எனும் திருநாமத்துடன் உலக சஞ்சாரம் செய்த இவள், வில்வாரண்யத்தில் 12 வயது சிறுமியாக எழுந்தருளினாளாம். அப்போது இங்கு வசித்த வில்லியர்கள் (வேடர்கள்), 'அம்மா நீ யார்? உன் பெயர் என்ன?’ என்று விசாரித்தபோது,  'அருகிலிருக்கும் புஷ்கரணியில் நீர் எடுத்து, அதில் மஞ்சள் கலந்து எனக்கு அபிஷேகம் செய்யுங்கள். பிறகு, நீங்கள் என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் ஏற்பேன்’ என்றாளாம்! அதன்படியே செய்த வில்லியர்கள், சிறுமியை 'ஸ்ரீபாலி’ என்று அழைத்தனராம். தொடர்ந்து, ஸ்ரீபாலி சொன்னபடி கேட்டை நட்சத்திரத்தன்று மண்ணால் உருவம் செய்து, அவளை வழிபட ஆரம்பித்தார்களாம்'' என்கிறார்கள் மெய்சிலிர்க்க!

வேறொரு கதையும் உண்டு.

பலநூறு ஆண்டுகளுக்கு முன், மேற்கு திசையில் வசித்த ஒரு பிரிவினர், பஞ்சம் பிழைப்பதற்காக இடம் பெயர்ந்தனர். கூடவே தாங்கள் வணங்கி வந்த அம்மன் விக்கிரகத்தையும் தூக்கி வந்தனர். இருட்டியதும் எந்த இடத்தை அடைகிறார்களோ, அங்கேயே இரவைக் கழித்து விட்டு, விடிந்ததும் பயணத்தைத் தொடர்வர்.

ஒருநாள், இந்தப் பகுதிக்கு (வில்லி வாக்கம்) வந்து சேர்ந்தனர். இரவில் பயணக் களைப்பில் அனைவரும் உறங்கிப் போக, அவர்களில் சிறுமி ஒருத்தியின் கனவில் தோன்றிய அம்மன், ''இந்த இடம் மிக அழகு. இங்கேயே தங்க விரும்புகிறேன்!'' என்றாள். அந்தச் சிறுமியோ, ''நீ இங்கேயே தங்கி விடுவாய். ஆனால், எங்களுக்கு என்ன வழி?'' என்று கேட்டாள். உடனே கிழக்கு நோக்கி கை காட்டிய அம்மன், ''அங்கேயே நீங்கள் குடியிருக்கலாம்!'' என்று அருள்புரிந்தாள்.

இந்த நிலையில் ஏதோ சத்தம் கேட்டு விழித்த பெரியவர் ஒருவர், சிறுமி தூக்கத்தில் தனியே பேசுவதைக் கண்டார். அவளை எழுப்பி, ''யாரிடம் பேசுகிறாய்?'' என்று கேட்டார். கனவில் அம்மன் சொன்னதை விவரித்தாள் சிறுமி. 'ஏதோ... தூக்கத்தில் உளறுகிறாள்’ என்றபடி, அவளை தூங்க வைத்துவிட்டு தானும் தூங்கிப் போனார் பெரியவர்.

விடிந்தது. அங்கிருந்து கிளம்ப எண்ணி, தாங்கள் கொண்டு வந்த அம்மன் விக்கிரகத்தைத் தூக்க முயன்றனர். ஆனால், விக்கிரகம் அசைந்து கொடுக்கவில்லை (அம்மன் விக்கிரகத்தை வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்ப யத்தனித்ததாகவும், அப்போது வண்டி நகர மறுத்ததாகவும் கூறுவர்). அனைவரும் திகைத்து நிற்க, அதே சிறுமியின் மீது அருளாக வந்து இறங்கிய அம்மன், 'நான் இங்கே குடியிருக்கப் போகிறேன்’ என்றவள், அவர்களுக்கான வசிப்பிடத்தையும் சொன்னாளாம்!

உடனே, கூட்டத்தில் இருந்த பெரியவர்கள், இங்கு இருந்த பூர்வீக மக்களிடம்,  வசிப்பதற்கு அனுமதி கேட்டனர். அம்மனின் அருளால் அவர்களும் சம்மதித்தனர். பிறகென்ன... மகிழ்ச்சியுடன் இங்கே குடிசை அமைத்துக் குடியேறினர்; முக்கியமாக  அம்மனுக்கும் தனியே குடில் அமைத்தனர்.

இந்த ஊரில் வசித்த சபாபதி சுவாமிகள் பற்றி அறிந்தவர்கள் சுவாரஸ்யமான ஒரு தகவலைத் தெரிவித்தனர்: ''தற்போது அம்மன் சந்நிதி இருக்கும் இடத்துக்குப் பின்னால், சாமியார் தோட்டம் என்ற இடம் இருந்ததாம். இங்கிருந்து, அம்மனை மெய்யுருக வழிபட்டு வந்தாராம் சபாபதி சுவாமிகள். இவருக்கு, அஷ்டமா ஸித்திகளை அருளினாளாம் அம்மன்! உடனே சுவாமிகள், 'இங்குள்ள மக்களுக்கும் நீ அருள வேண்டும். இங்கேயே நிரந்தரமாகக் குடியிருந்து, அவர்களைக் காக்க வேண்டும்’ என்று வேண்டினாராம். இதை ஏற்ற அம்மனும் பாம்பாக வடிவெடுத்து, தற்போது அரச மரத்தடியில் இருக்கும் புற்றுக்கு வந்து, தான் குடியிருப்பதற்கான இடத்தை தேர்வு செய்தாள்'' என்கிறார்கள்!

இப்படி... கேட்பவர் சிந்தை மகிழ, பல தெய்வீக அற்புதங்களுடன் ஸ்ரீபாலியம்மன் அருள் பாலிக்கும்  ஆலயத்தை நாமும் தரிசிப்போமா?

அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது ஆலயம். உள்ளே நுழைந்ததும் பின்னிப் பிணைந்து கம்பீரமாக நிற்கும் அரச மரமும் வேம்பும் நம்மை வரவேற்கின்றன. ஸ்தல விருட்சமும் இதுதான்! மரத்தடியில் அருள் புரிகிறார் ஸ்ரீகணபதி. அருகில் நாகர் சிலைகள். வணங்கி மண்டபத்துக்குள் செல்கிறோம். இங்கே அம்பிகை சந்நிதிக்கு எதிரில் சிம்ம வாகனம்; பலிபீடம்; சூலம். சந்நிதி வாயிலை துவார பாலகியர் அலங்கரிக்க, கருவறையில் அமர்ந்த நிலையில் அற்புதமாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீபாலியம்மன். ஆதியில், அத்தி மரத்தாலான விக்கிரகமாக... உக்கிரத்துடன் காட்சி தந்தாளாம் ஸ்ரீபாலியம்மன். பிற்காலத்தில், அம்மனை சாந்தப்படுத்தி, இந்த சிலா விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தனராம்.

மிக இளையவளாக சிறுமியின் அம்சத்துடன் திகழ்வதால், இவளுக்கு 'பாலா’ என்று திருநாமம். இதுவே, வழக்குச் சொல்லில், 'பாலியம்மன்’ என மருவியதாம்! 'இந்த அன்னையையும் சேர்த்து எட்டு சகோதரிகள். அவர்களில் இவள் இளையவள்’ என்கின்றனர் ஊர் பெரியவர்கள். ஆம், அக்ரஹாரம்- சீயாத்தம்மன், ராஜமங்கலம்- இளங்காளியம்மன், பாடி- படவேட்டம்மன், வில்லிவாக்கத்திலேயே அருள் புரியும் திருவீதி அம்மன், தான்தோன்றியம்மன், எல்லையம்மன் மற்றும் முப்புலியம்மன் ஆகியோரை பாலியம்மனின் மூத்த சகோதரி களாக கருதி வழிபடுகின்றனர்.

கருவறையில், ஸ்ரீபாலியம்மனின் இருபுறமும் உற்ஸவ விக்கிரகங்கள். ஒன்று ஸ்ரீபாலி யம்மனின் உற்ஸவர்; மற்றொன்று ஸ்ரீஇளங்காளி யம்மனின் உற்ஸவர். சந்நிதி வாயிலில் நமக்கு இடப்புறம்... சுதையாலான அம்மன் விக்கிரகம். ஒரு திரைப்படத் துக்காக உருவாக்கப்பட்ட இந்த அம்மன் விக்கிரகம், வழிபாட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணி இங்கு வைத்துச் சென்றனராம்! அம்மன் சந்நிதியை வலம் வரும்போது சந்நிதிச் சுவரில் அமைந்திருக்கும் மாடங்களில் ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீமகேஸ்வரி, ஸ்ரீவைஷ்ணவி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீவிஷ்ணுதுர்கை ஆகி யோரையும் தரிசிக்கலாம். விஷ்ணுதுர்கைக்கு ராகுகால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. அம்மன் சந்நிதிக்கு இணையாக தனிச் சந்நிதி கொண்டிருக்கிறார் சுவாமி ஐயப்பன். இவரது சந்நிதியிலேயே ஸ்ரீபாலகணபதி மற்றும் ஸ்ரீபால முருகனையும் தரிசிக்கலாம். எதிரில் நவக்கிரகங்கள்.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைக்கு உட்பட்ட இந்தக் கோயிலில் ஆடித் திருவிழா விசேஷம்.  தவிர, ஒவ்வொரு செவ்வாய்-வெள்ளியும் இங்கு திருவிழா கூட்டம்தான்! பிள்ளை வரம் தருவதில் கண்கண்ட தெய்வம் ஸ்ரீபாலியம்மன். இவளை பிரார்த்தித்து, அரச மரத்தில் தொட்டில் கட்டிச் சென்றால், பிள்ளை பாக்கியம் கிடைப்பது உறுதியாம்! மட்டுமின்றி, ''திருமண வரமும் மாங்கல்ய பலமும் அருள்வதில் மகத்தான சக்தி இவள். அம்மாவின் பார்வை பட்டால், சர்ப்ப தோஷம் சாம்பலாகும்; சகல பாவங்களும் பறந்தோடும்'' என்கின்றனர் பக்தர்கள்!

இன்றும் நள்ளிரவில்... வேப்பிலை மணம் கமழ, காற் சிலம்பு ஒலியெழுப்ப தன் மக்களைக் காக்க நகர்வலம் வருகிறாளாம் இந்த நாயகி!

படங்கள்: சு. குமரேசன்

தீய சக்தியை விரட்டும் கரித்துண்டு!

ஆடி மாதம் 4 அல்லது 5-ஆம் வெள்ளிக் கிழமையன்று பாலியம்மன் கோயிலில் விழா களைகட்டுகிறது. விழாவுக்கு முந்தைய வெள்ளிக் கிழமையில், காப்புக் கட்டி தவக் கோலத்தில் அமர்கிறாள் அம்மன். அன்றிலிருந்து 8-ஆம் நாள், விழா துவங்குகிறது. இதில் சிறப்பம்சம் தீ மிதி வைபவம். இங்கு, சுமார் 30 அடி நீள- அகலத்துடன் பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது அக்னி குண்டம். வேறெங்கும் இவ்வளவு பெரிதாக அக்னி குண்டம் அமைக்கப்படுவதாகத் தெரியவில்லை என்கிறார்கள்.

அக்னி குண்டத்தில் இறங்குவோரை 'குமார மக்கள்’ என்கின்றனர். இவர்கள், மூன்று நாட்கள் கடும் விரதம் கடைப்பிடிப்பர்.

ஞாயிறன்று அம்மன் அருள் வழங்க, அக்னி குண்டத்தில் அக்னி ஏற்றப்பட்டதும், ஊரின் ஏழு எல்லைகள் மற்றும் ஸ்ரீஇளங்காளியம்மன் கோயிலுக்குச் செல்லும் குமார மக்கள், பிறகு பாலியம்மன் கோயிலுக்கு வந்ததும் துவங்குகிறது தீ மிதி வைபவம். இதைக் காண பெருங்கூட்டம் திரளும்!  ''ஆண்டு தோறும் விழா முடிந்ததும் தவறாமல் மழை பொழிவதே, அம்மனின் அருளுக்கு சாட்சி'' என்கின்றனர் பக்தர்கள். தீ மிதி வைபவம் முடிந்த சற்று நேரத்தில்... அக்னி குண்டத்தில்,

கரித் துண்டுகள் மிஞ்சாதாம்! பக்தர்கள் அள்ளிச் சென்று விடுகின்றனர். கரித் துண்டுகளை வீட்டு வாசலில் கட்டி வைத்தால், தீய சக்திகள் எதுவும் அண்டாது என்பது நம்பிக்கை!