Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிள்ளை வரம் தரும் பூங்காவனத்தம்மன்!

ஆலய தரிசனம்

- ஆர்.கே.பாலமயூரி

ஒரு வீட்டை காபந்து செய்பவர்களும் அந்த வீட்டுக்கு மதிப்பு- மரியாதையை தேடித் தருபவர்களும் பெண்கள்தான்! ஒரு தலைமுறையையே செதுக்கி சீர்படுத்தும் வல்லமை இவர்களுக்கு உண்டு. இதனால்தான் பெண்களை சக்தி என்று போற்றுகிறோம். வீட்டைப் போலவே இறை வழிபாட்டிலும் சக்திக்கு முக்கியத்துவம் உண்டு.

நம் தேசத்தில், சக்தி தலங்கள் ஏராளம்! அவற்றுள், புட்லூர்- ஸ்ரீபூங்காவனத்தம்மன் திருக்கோயில் குறிப்பிடத் தக்கது. திருவள்ளூர் மாவட்டம் ராமபுரம் பகுதியில், சிறிய- அழகிய கோயிலில் குடிகொண்டிருக்கும் இந்த அம்மன், கேட்கும் வரங்களை வாரி வழங்கும் கற்பக விருட்சம்; கனிவும் கருணையும், அன்பும் ஆதரவும் கொண்ட தாயுமானவள்!

நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும், சூலம் தாங்கி உக்கிரமாகவும் அபய முத்திரையுடன் கனிவாகவும்... அம்மன்களைப் பார்த்திருப்போம். சில தலங்களில் பாம்பு புற்றையே நாகாத்தம்மன், நாக கன்னியம்மன் என வணங்குவதையும் அறிவோம்.

புட்லூர் திருத்தலத்திலும் புற்று வழிபாடுதான். ஆனால் இந்தப் புற்றே... சிரம், கை-கால், மார்பு என்று பெண்ணுரு கொண்டு, பூங்காவனத்தம்மனாக காட்சி தருவது அற்புதத்திலும் அற்புதம்! ஆம், நிறைமாத கர்ப்பிணியாக மல்லாந்து படுத்தபடி காட்சி தருகிறாள் இந்த அம்மன்.

சரி... இவள் இங்கு கோயில் கொண்டது எப்படி?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந் துள்ள மேல்மலையனூர் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் திருக்கோயில், சக்தி வாய்ந்த தலம்!

மேல்மலையனூர் அங்காளபர மேஸ்வரிக்கும் புட்லூர் பூங்காவனத்தம்ம னுக்கும் என்ன சம்பந்தம்?

முன்னொரு காலத்தில், புட்லூரை அடுத்துள்ள ராமபுரம் எனும் கிராமம், பசுமை நிறைந்த வயல் வெளியாக இருந்தது. மேல்மலையனூரில் இருந்து  நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியை அழைத்துக் கொண்டு காடு-மேடுகளைக் கடந்து நடந்து வந்தார் ஒருவர். இடுப்பில் கூடையை ஏந்தி, சூலத்தை ஊன்றுகோலாக பயன்படுத்தி மெள்ள நடந்து வந்த அந்தப் பெண்ணுக்கு, கடும் தாகம்! நா வறண்டு, நடக்க இயலாமல், அங்கிருந்த மரத்தடி ஒன்றில் அமர்ந்தாள்.

''அப்படியே படுத்துக் கொள்; தண்ணீர் எடுத்து வருகிறேன்'' என்று மனைவியிடம் சொல்லி விட்டு, கணவர் தண்ணீரைத் தேடி ஓடினார்.

வறண்டு கிடந்த குசஸ்தலை ஆற்றுப் படுகையைக் கடந்து, ஓரிடத்தில் தண்ணீரை சேகரித்துக் கொண்டு திரும்பினார். என்ன அதிசயம்!  ஆற்றில் கரைபுரண்டு ஓடியது வெள்ளம். கையில் தண்ணீ ருடன், பாய்ந்தோடும் வெள்ளத்தை பார்த்தபடி, அழுது கொண்டு நிற்பதைத் தவிர, அவரால் வேறென்ன செய்ய முடியும்?

நேரம் ஆக ஆக நீர் வரத்து மெள்ள குறைந்தது; கரை கடக்க வழியும் கிடைத்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டவர், தண்ணீருடன் கரையைக் கடந்து மனைவி அமர்ந்திருந்த மரத்தடிக்கு ஓடினார். அங்கே... அந்தக் காட்சியைக் கண்டு உறைந்து போனார். அவரின் நிறைமாத கர்ப்பிணி, புற்றுருவமாகக் கிடந்தாள்.

காலங்கள் ஓடின! இந்த இடமே விளை நிலமாகிப் போனது.  இங்கு விவசாயி ஒருவர் நிலத்தில் உழுது கொண்டிருந்தபோது, திடீரென... அவரது ஏர்க் கலப்பை அழுந்திய ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. அதிர்ந்த விவசாயி மயங்கிச் சரிந்தார். அருகில் வயலில் வேலை செய்தவர்கள், பரபரவென ஓடி வந்தனர். 'என்னாச்சு... என்னாச்சு...?’ என்று ஒருவருக்கொருவர் பதற்றத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வேளையில்... அங்கு நின்றிருந்த பாட்டியம்மாளுக்கு அருள் வந்தது. ''நான்தான் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி. இந்த இடத்துல புற்றுருவமா கிடக்கிறேன். இங்கே கோயில் கட்டி, என்னைக் கும்பிடுங்க. உங்களையும் உங்க ஊரையும் நல்லா பாத்துக்கறேன். நோய்- நொடி அண்டாம, பில்லி- சூனியம் தீண்டாம காபந்து செய்யறேன்’ என்றவள் மயங்கி விழுந்தாள்.

அங்காளபரமேஸ்வரி, மனித உருவில் தங்கள் ஊருக்கு வந்ததை அறிந்து மெய்சிலிர்த்தனர் ஊர்மக்கள்; புற்றுருவாக தோன்றியவளுக்கு அங்கு கோயில் எழுப்பினர். மரம்-செடி-கொடிகளுடன் பூக்கள் பூத்துக் குலுங்கிய வயலில் கண்டெடுத்ததால், பூங்காவனத்தம்மன் எனப் பெயரிட்டு வழிபடத் துவங்கினர். அங்காளபரமேஸ்வரி என்ற பழைய பெயரும் இவளுக்கு உண்டு!

ராமபுரத்தை அடுத்துள்ள புட்லூர், பிரசித்தி பெற்றிருந்ததால்,  இந்த ஊர்ப்பெயரும் சேர... புட்லூர் பூங்காவனத்தம்மன் என்றானதாம்! சுமார் 400 ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஆலயம், பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்கின்றனர்.

கிழக்கு நோக்கிய ஆலயம்; கோபுரம் இல்லை. ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி, கர்ப்பிணிப் பெண்ணாக மனித உருவம் கொண்டு சிவனாருடன் வந்ததால், சிவத் தலத்துக்கே உரிய கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியனவும் இங்கு உண்டு. அருகில் சூலம்! இடப் பக்கத்தில் வேம்பு, புற்று மற்றும் நாகாத்தம்மன்.

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இந்த வேப்பமரத்தில் தொட்டில் கட்டி, பிரார்த்தித்துச் செல்கின்றனர். திருமண வரம் கேட்டு வரும் பக்தர்கள், மஞ்சள் சரடை மரத்தில் கட்டி வேண்டுகின்றனர்.

சூலத்தை அடுத்து, கம்பீரமாக நிற்கிறார் காவல்தெய்வமான பாவாடைராயர். முன் மண்டபத்தைக் கடக்க அர்த்த மண்டபம்; திருவள்ளுவர் (இவருக்கு சிலை வைத்த காரணம் தெரியவில்லை என்கின்றனர்), ஸ்ரீவிநாயகர், மதுரை வீரன், துவார பாலகியர் ஆகியோரைக் காணலாம். அடுத்து கருவறை; முன்னதாக தென்மேற்கில் தலையை வைத்து, மல்லாந்து படுத்த நிலையில் கர்ப்பிணிப் பெண்ணாக காட்சி தருகிறாள் பூங்காவனத்தம்மன். மஞ்சள் - குங்குமத்துடன் கம்பீரமாக படுத்திருக்கும் இந்த அம்மனின் அருகே நிற்கும் போது, ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது.

'உன் தாகம் தணிக்க தண்ணீர் கிடைக்கா விட்டாலும் எங்களின் ஏக்கத்தையும் சோகத்தையும் தீர்த்து வைக்கும் உனது கருணையே கருணை!’ என்று மனமுருகி அவளையே பார்க்கிறோம். பின்னால் கருவறையில், கையில் சூலம் ஏந்தியும் கழுத்தில் எலுமிச்சை- வேப்பிலை கலந்து கட்டிய மாலை அணிந்தவளுமாக  புன்னகை தவழ அருட்காட்சி தருகிறாள் அங்காள பரமேஸ்வரி! அருகில், தாண்டவராயன் எனும் திருநாமத்துடன் சிவனார்; எதிரே நந்தி.

பிராகாரத்தில்... தென் கிழக்கு மூலையில் வேம்பு;  கோயிலின் ஸ்தல விருட்சம். நவக்கிரகங்கள் மற்றும் அரசமரத்தடியில் விநாயகர்!

செவ்வாய், வெள்ளி மட்டுமா? எல்லா நாட்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. திருமணம் மற்றும் பிள்ளை வரம் வேண்டுகிற பெண்கள், நீராடி விட்டு, ஈரத்துணியுடன் கையில் எலுமிச்சம்பழத்துடன் அம்மனைச் சுற்றி வந்து பிரார்த்திக்கின்றனர். அந்த எலுமிச்சையை அம்மனின் வலப் பாதத்தில் வைத்து உருட்டி விடுகிறார் பூசாரி. அதை, அப்படியே மடியேந்தி தாங்கிக் கொள்கின்றனர் பக்தர்கள். பிறகு கோயிலிலேயே அமர்ந்து, எலுமிச்சம்பழத்தை அப்படியே கடித்துச் சாப்பிட வேண்டுமாம்!

துக்கமும் ஏக்கமுமாக கவலையுடன் வந்து தன்னைப் பிரார்த்திக்கும் பக்தர்களை, மல்லாந்து படுத்தபடியே பார்த்து... கருணையுடன் அருள்புரிந்து வருகிறாள் பூங்காவனத்தம்மன்!

படங்கள்: வீ. நாகமணி

எப்படி வழிபட வேண்டும்?

திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிராகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும்.

குழந்தைப் பேறு வேண்டுவோர் எலுமிச்சம் பழம் மற்றும் தொட்டிலை எடுத்து வந்து, கோயிலின் உள்ளே இடப் புறத்தில் புற்றுக்கு அருகில் உள்ள வேப்பமரத்தில், கட்டி விட்டு பிரார்த்திக்க வேண்டும். திருமண பாக்கியம் வேண்டி பிரார்த்திப்பவர்கள், வேப்பமரத்தில் மஞ்சள் சரடை கட்டி, வேண்டிக் கொள்ளலாம்.

கருவறையில் உள்ள புற்று வடிவில் கோலோச்சும் பூங்காவனத்தம்மனது பாதத்தில் எலுமிச்சம்பழத்தை வைத்து, அப்படியே உருட்டி விடுவார் பூசாரி. இதனை புடவைத்தலைப்பு அல்லது சுடிதார் துப்பட்டாவால் ஏந்தி எடுத்து வந்து, கோயிலில் அமர்ந்து அப்படியே தோலுடன் கடித்துச் சாப்பிட வேண்டும்.

இதேபோல் தொடர்ந்து 9 வாரங்கள் இங்கு வந்து அம்மனை தரிசித்து பிரார்த்திக்க வேண்டுமாம்! முதல் வாரம் மட்டுமே தொட்டில் கட்டவேண்டும் (மஞ்சள் சரடும் அப்படியே!). பிறகு ஒவ்வொரு வாரமும் எலுமிச்சம் பழம் மட்டும் எடுத்து வந்தால் போதும்!

செவ்வாய், வெள்ளி மட்டுமின்றி எந்த நாளும் வழிபடலாம்! முதல் வார பிரார்த்தனையை திங்கள் அன்று துவங்கினால் 9 வாரங்களும் திங்கட் கிழமையில் கோயிலுக்கு வரவேண்டும்; செவ்வாய்க் கிழமை என்றால், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமையன்று வரவேண்டும். பக்தர்களில் சிலர், 11 வாரம் வரை பிரார்த்தனையைத் தொடர்கின்றனர்.

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6:00 முதல் இரவு 8 மணி வரை; மற்ற நாட்களில் காலை 6:00 முதல் மதியம் 1:00 மணி மற்றும் 2:00 முதல் இரவு 7:30 மணி வரை நடை திறந்திருக்கும்.

எங்கே இருக்கிறது?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது புட்லூர்-ராமபுரம். ஊருக்கு நடுவே கோயில் கொண்டிருக்கிறாள் பூங்காவனத்தம்மன். சென்னை சென்ட்ரலில் இருந்து சுமார் 38 கி.மீ; கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 35 கி.மீ.

சென்ட்ரல் - திருவள்ளூர் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு முந்தைய ஸ்டேஷன் புட்லூர். இங்கிருந்து சுமார் 15 நிமிட நடைபயணத்தில் உள்ளது கோயில். ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உண்டு.