Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அர்ஜென்டினாவில் ஒலிக்குது 'ரங்கா... ரங்கா...’ கோஷம்!

வைஷ்ணவத்துக்கு மாறிய வெளிநாட்டுத் தம்பதி!

ஸ்ரீரங்கம்- திருவரங்கன் திருக்கோயில், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது. அங்கே செக்கச்செவேல் என்கிற சிவந்த முகம், கூர்மையான மூக்கு, லேசான தாடி எனப் பார்த்தவுடனே தெரிந்தது, அவர் வெளிநாட்டுக்காரர் என்று!

நெற்றியில் நாமம், தோளில் பூணூல் எனக் காட்சி தந்த அந்த வெளிநாட்டுக்காரரை, வியப்பு மேலிட நெருங்கினோம். தம்பதி சமேதராக நின்றிருந்த அந்த வெளிநாட்டுக்காரர்களோடு பேசிக்கொண்டு இருந்தார், ராமராஜ நரசிம்மாச்சாரியார் எனும் வைஷ்ணவப் பெரியவர். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

''இவங்க ரெண்டு பேரும் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவங்க. ஸ்ரீரங்கம் மாசி கருட சேவையைத் தரிசிக்க வந்திருக்காங்க. சாண்டியாலோ மார்கோட், அனயனினா வாலென்டினி... இதான் இவங்களோட முன்னாள் பெயர்கள். சில அபூர்வமான சம்பவங்களால இந்து மதத்தின் மேல ஒரு ஈர்ப்பும் பிடிப்பும் ஏற்பட்டு, இந்துக்களாவே வாழ்ந்துட்டிருக்காங்க அங்கே!'' என்று விவரித்தார் ராமராஜ நரசிம்மாச்சாரியார்.

அவரே தொடர்ந்து, ''போன வருஷம் இதே போல அர்ஜென்டினால இருந்து இங்கே வந்து, வைஷ்ணவத்துக்கு மாறினவர் வருதபா ரங்கப்ரியன். (வருதபா ரங்கப்பிரியன் குறித்து, சக்திவிகடன் 2.10.12 இதழில் 'சிலிர்க்க வைக்கும் அர்ஜென்டினா அடியவர்கள்’ எனும் கட்டுரை வெளியாகி உள்ளது.) அவரோட நண்பர்கள் தான் இவங்க! அவர் மூலமாகத்தான் இவங்க அறிமுகம்.

வைஷ்ணவ சம்பிரதாயங்களையும் வேதங்களையும் கத்துக்கிட்டு, அதன்படி வாழணும்னு ஆசைப்பட்டு, போன வருஷம் வந்தாங்க. என் அப்பா ஸ்ரீஉ.வே.ஸ்ரீதர நரசிம்மாச்சாரியார் சுவாமிகள்கிட்ட வேதங்களையும் வைஷ்ணவ சம்பிரதாயங்களையும் கற்பூரமா கத்துக்கிட்டாங்க. நம்மாலகூட அந்த அளவுக்கு அதையெல்லாம் கிரஹிச்சுக்க முடியுமாங்கிறது சந்தேகம்!'' என்று  பிரமிப்புடன் தெரிவித்தார் ராமராஜ நரசிம்மாச்சாரியார்.

வைஷ்ணவ போதனைகள், திருமாலின் பெருமைகள், புராண- இதிகாச விஷயங்கள் எனக் கற்றுக்கொண்ட பிறகு, பஞ்ச சம்ஸ்காரம் எனும் முறைப்படியானவற்றைச் செய்து, அவர்களை வைஷ்ணவர்களாக, திருமாலின் அடியவர்களாக மாற்றும் வைபவமும் சிறப்புற நடைபெற்றதாம்.

''இதோ... இந்த வருஷமும் ஸ்ரீரங்கனை ஸேவிக்க வந்துட்டாங்க. ஸ்ரீரங்கநாதர் அனுக்கிரகத்தால  முழுக்க முழுக்க வைஷ்ணவ சம்பிரதாயப்படி இவங்களுக்கு கொங்கிலாச்சான் திருமாளிகையில் விவாகம் நடந்துது'' என்றார்.

பளீர் புன்னகையுடன் திகழும் அவரிடம் பேச்சுக் கொடுத்தால், 'ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ’ என்று ஸ்பஷ்டமாகச் சொல்கிறார். 'ரங்கா... ரங்கா’ என்று நெஞ்சில் கைவைத்தபடி சொல்லிப் பூரிக்கிறார் கள் அந்தத் தம்பதி. கொஞ்சம் தமிழ், அதிகம் ஆங்கிலம், ஸ்பானிஷ் என கலந்துகட்டிப் பேசுகிறார்கள்.  

''இந்தியாவும் இந்து மதமும் எங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு! நாராயணனே எங்களுக்கான கடவுள்ங்கறதுல உறுதியாவும் தெளிவாவும் இருக்கோம் இப்ப என் பெயர்... சுந்தரவரத ராமானுஜ தாசன். மனைவி பேரு விருந்தாவன் தேவி'' என்று சொல்லிவிட்டு அவர் தன் மனைவியைத் திரும்பிப் பார்க்க, அவரின் முகத்தில் அப்படியொரு அக்மார்க் தமிழ்ப் பண்பாட்டு வெட்கம்!

''நான் கெமிக்கல் இன்ஜினீயர். என் மனைவி அக்கவுன்ட்டன்ட். அறிவியல், ஆராய்ச்சினு இறங்கினேன். அதுக்காகப் புத்தகங்கள், இன்டர்நெட்னு படிக்கற தும் தேடுறதும் அதிகமாச்சு! அப்பதான் என்னோட ஆய்வு தொடர்பான, உலக அறிவியல் தொடர்பான விஷயங்கள் இந்து மதத்துல அந்தக் காலத்துலயே நிறைய சொல்லப்பட்டிருக்குங்கற விவரம் தெரிய வந்துது. அவற்றையெல்லாம் படிச்சு, பிரமிச்சுப் போயிட்டேன்.  நாம தீவிரமா எதைத் தேடிப் போறோமோ, அதுவே ஒருகட்டத்துல நம்மளைத் தேடி வரும்னு சொல்லுவாங்க. அதேபோல, அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த என் நண்பர் தீவிர வைஷ்ணவரா மாறினதும், அவரோட சந்தோஷமான, வாழ்க்கை குறித்த அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துக்கிட்டார். இப்ப நாங்களும் தீவிர வைஷ்ணவர்கள்னு சொல்லிக்கிறதுல பெருமைப்படறோம்!'' என்கிறார் பெருமிதத்துடன்.

'வைஷ்ணவத்தில் உங்களைக் கவர்ந்த விஷயமாக எதைக் கருதுகிறீர்கள்?’ என்று கேட்டபோது, ''வாழ்க்கை முழுக்க எவ்வளவு தவறுகள் பண்ணினாலும், கடைசி காலத்துல எல்லாருமே சொர்க்கத்துக்குப் போகணும்னுதான் ஆசைப்படுவாங்க. ஆனா, 'சத்தியத்தை மீறினதுக்காக நான் நரகத்துக்குப் போனாலும் பரவாயில்லை; உலக மக்கள் எல்லாரும் சொர்க்கத்துக்கு, வைகுண்டத்துக்குப் போகணும்’னு சொல்லி, எட்டெழுத்து மந்திரத்தை ஜனங்க எல்லாருக்குமா உபதேசிச்சாரே, ராமானுஜர்! எத்தனை பெரிய விஷயம்!'' என்று நெக்குருகிப் பேசுகிறார் அவரின் மனைவி.

''இப்போது எங்கள் நண்பர் வருதபா ரங்கப்ரியனின் மனைவிக்கு வைஷ்ணவ முறைப்படியே அர்ஜென்டினாவில் வளைகாப்பு நடக்கப்போகிறது. அவரை ஆசீர்வதிக்க, அர்ஜென்டினா வருவாங்க ரங்கநாயகியும், ரங்கனும்!'' என்று கண்கள் மூடிப் பிரார்த்தித்தபடியே சொல்கிறார் சுந்தரவரத ராமானுஜதாசன்.

- ப.சபரிநாதன்  

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்