Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீபாப்பாத்தி அம்மன் - ஆண்டியப்பனூர்

 
கல்வி ஞானம் அருள்வாய்... சரணம்!
ஸ்ரீபாப்பாத்தி அம்மன் - ஆண்டியப்பனூர்

வேலூர் மாவட்டம்- திருப்பத்தூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது ஆண்டியப்பனூர். ஸ்ரீபாப்பாத்தி அம்மன் கோயில்கொண்டிருப்பது இந்த ஊரில்தான்.

கோயிலுக்கு அருகில் உள்ளது பால்கிணறு. ஒரு காலத்தில் இந்த ஊரில் பசுக்கள் கன்று போட, அவை இறந்தே பிறந்தனவாம்! ஊர்க்காரர்கள் பாப்பாத்தியம்மனிடம் வந்து, 'தாயே மாடு-கன்னு நல்லாயிருக்கணும்; கன்னுங்க பொழச்சு வரணும். அப்படி வந்தால்... கன்று குடிச்சது போக மீதிப் பாலை கோயில் கிணத்துல கொட்றோம்' என்று வேண்டிக் கொண்டனர். அதன் பிறகு கன்றுகள் நலமுடன் பிறக்க, ஊர் மக்கள் மகிழ்ந்தனர். குடம் குடமாக கிணற்றில் பால் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனால் இந்தக் கிணற்றுக்கு பால்கிணறு என்று பெயர்!

 

சுமார் 1000 வருடம் புராதனமான ஆலயத்தில் சுயம்பு மூர்த்தமாக அருளும் ஸ்ரீபாப்பாத்தியம்மன், மேற் கூரை ஏதுமின்றி காட்சி தருகிறாள். ''கல்வி, கல்யாணம், வீடு-வாசல், வியாபாரம்னு எந்தக் குறை இருந்தாலும் இங்கே வந்து, கிணத்துல வாழைப்பழம் விட்டு வேண்டிக்கிட்டா போதும்... பாப்பாத்தியம்மா பாத்துக்குவா!'' என்று சிலிர்ப்புடன் சொல்கின்றனர் ஊர்மக்கள். பாப்பாத்தியம்மனை பிரார்த்தித்து, தோல் உரித்த மூன்று வாழைப் பழங்களை பால் கிணற்றில் விட வேண்டுமாம். பழங்கள் மூழ்கினால், காரியம் நிறைவேற தாமதமாகும்; மிதந்தால், நினைத்தது உடனே நிறைவேறுமாம்!

தேர்வுக் காலங்களில், எங்கிருந்தெல்லாமோ பஸ் பிடித்து இங்கே வந்து ஸ்ரீபாப்பாத்தியம்மனை தரிசித்துச் செல்கிறார்கள் மாணவர்கள். வாழைப் பழம் நீரில் மிதந்தால்... 'பரீட்சையில் பாஸ் செய்து விடலாம். இனி அதிக மார்க் எடுப்பதற்கு உழைக்கவேண்டும்' என முடிவு செய்வார்கள். பழம் மிதக்கவில்லை எனில், 'கூடுதலான அக்கறையுடன் படிக்க வேண்டும்' என்று கவனத்துடன் படிக்கத் துவங்குவார்களாம்!

- ஆர். சந்தோஷ்குமார்