Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்யாண வரம் தரும் திருக்கல்யாண உத்ஸவம்!

புரட்டாசியில் புண்ணிய தரிசனம்!

ர்நாடக மாநிலம், மல்லேஸ்வரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில். மடியில் ஸ்ரீலக்ஷ்மியை அமரச் செய்து தாங்கியபடி, தன்னை நாடி வருவோருக்கு அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மர். புராதனப் பெருமைகள் கொண்ட இந்த ஆலயம், 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்கிறது ஸ்தல வரலாறு.

பெங்களூரு நகரில் மல்லேஸ்வரம் எனும் இடத்தில் 15-ஆம் குறுக்கு வீதியில், 2-ஆம் கோவில் தெருவில் அமைந்துள்ளது, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் ஆலயம். 16-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, வீர சிவாஜி மன்னரின் சகோதரரான வெங்கோஜி ராவ் என்பவரின் கனவில் தோன்றிய பெருமாள், கோயில் கட்டும்படி கட்டளையிட்டுச் சென்றார். எனவே இறைவன் சுட்டிக்காட்டிய இடத்தில், தேடியபோது, அங்கே மண்ணுக்குள் சிவலிங்க மூர்த்தமும் ஸ்ரீநரசிம்ம மூர்த்தமும் சுயம்பாக வெளிப்பட்டன. சுயம்புலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தது, காடு மல்லேஸ்வரா எனும் கோயில் என்பார்கள்! இதோ... இங்கே, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் அழகுறத் தரிசனம் தருகிறார்.

இங்கு, யானையின் வடிவிலான சிறிய மலை ஒன்றும் உள்ளது. அந்த மலையையொட்டி கோயிலின் மூலஸ்தானம் அமைந்துள்ளதால், இந்தப் பெருமாளுக்கு கரிகிரிஷா என்கிற பெயரும் உண்டு (கரி என்றால் யானை). ஸ்ரீஅனுமன் மற்றும் ஆழ்வார்களுக்கும் சந்நிதிகள் உள்ளன.

தினமும் மூன்று கால பூஜைகளும் மாதந்தோறும் உத்ஸவங்களுமாக அமர்க்களப் படுகிறது ஆலயம். என்றாலும் புரட்டாசி மாதம் வந்ததும் சர்வ வாகனோத்ஸவம் சிறப்புற இங்கே நடைபெறுகிறது. புரட்டாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று பெருமாளுக்கு விசேஷ அலங்காரம், சிறப்பு உத்ஸவம் எனக் கொண்டாடப்படும். அப்போது தென்னாட்டு வாத்தியங்கள் முழங்க, திருவீதியுலா வரும் ஸ்ரீநரசிம்மரைக் காணக் கண்கோடி வேண்டும்.  அதேபோல், திருக்கல்யாண உத்ஸவம் நடைபெறும் போது, ஏராளமான ஆண்களும் பெண்களும் வந்து, பிரார்த்திக்கின்றனர். அப்படி வேண்டிக்கொண்டால், திருமண வரமும் குழந்தை பாக்கியமும் கிடைக்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம்! மேலும், பிரம்மோத்ஸவம், ஸ்ரீநரசிம்ம ஜயந்தி, டோலோத்ஸவம், பவித்ரோத்ஸவம், நவராத்திரி, தீபாவளி, ஆழ்வார்களின் திருநட்சத்திர நாட்கள் ஆகியவையும் சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன.

கட்டுரை, படங்கள்: கணேஷ் வைஷ்ணவி