Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீபெட்டத்தம்மன் - முடுக்கந்துறை

 
கல்வி ஞானம் அருள்வாய்... சரணம்!
ஸ்ரீபெட்டத்தம்மன் - முடுக்கந்துறை

த்தியமங்கலத்தில் இருந்து பவானி சாகர் அணைக்கட்டு செல்லும் வழியில், சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் முடுக்கன்துறை. இங்கே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீபெட்டத்தம்மன், கல்வி- கலைகளின் நாயகியாக அருள்கிறாள்!

காரமடையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பெட்டதாபுரம் குகைக்கோயில். இங்கிருந்து எலுமிச்சை பழமும் தீர்த்தமும் எடுத்து வந்து, அவற்றையே ஸ்ரீபெட்டத்தம்மனாக பூஜித்து வந்தனராம். பிற்காலத்தில்தான், அம்பாளுக்கு விக்கிரகத் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கிறார்கள்.பெட்டதாபுரம் குகையில் இருந்து தீர்த்தமும் எலுமிச்சை பழம் எடுத்துவரப்பட்டு, வழிபாடுகள் நடந்து, பின்னர் கோயிலும் எழும்பியதால் இந்த அம்மனுக்கு, ஸ்ரீபெட்டத்தம்மன் என்று பெயர்.

தடைப்பட்ட திருமணம், பிள்ளை பாக்கியம், தொழில் விருத்தி, முக்கியமாக கல்வி மற்றும் ஞானம் வேண்டி வருவோர், அம்மனின் திருப்பாதத்தில் மூன்று எலுமிச்சை பழங்களை சமர்ப்பித்து வழிபட, நினைத்தது நிறைவேறும்; ஞாபக சக்தி அதிகரிக்கும்; படிப்பில் ஆர்வம் பிறக்கும் என்பது ஐதீகம். உடல் சோர்வுடன் திகழும் மாணவர்களும் பெட்டத்தம்மனின் திருப்பாதத்தில் வைத்துத் தரப்படும் எலுமிச்சை பழத்தில் சாறெடுத்து அருந்தினால், சுறுசுறுப்புடன் திகழ்வர் என்பது பக்தர்களின் நம்பிக்கை! சிலர், இந்த பிரசாத எலுமிச்சையை வீட்டு வாசலில் கட்டித் தொங்கவிடுவதும் உண்டு.

முடுக்கன்துறை மட்டுமல்ல, சுற்றுவட்டார ஊர்களில் இருந்தும் எண்ணற்ற மாணவர்கள் இங்கு வந்து, பேனா, புத்தகங்கள், ஹால் டிக்கெட் ஆகியவற்றுடன் எலுமிச்சை பழங்களையும் சமர்ப்பித்து பெட்டத்தம்மனை வணங்கிச் செல்கின்றனர். இவர்களின் எதிர்காலம் சிறக்க அருள் புரிகிறாள் முடுக்கன்துறை நாயகி!

- செ. கார்த்திகேயன்