Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயர்! - சோழவந்தான்

 
கல்வி ஞானம் அருள்வாய்... சரணம்!
ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயர்! - சோழவந்தான்

துரையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது வாடிப்பட்டி. இங்கிருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தூரம் பயணித் தால், கல்விச் செல்வம் வழங்கும் ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயரை கண்குளிர தரிசிக்க லாம். சோழவந்தானில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு!

வயல்களுக்கு நடுவில் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயர். சுமார் 500 வருடங்கள் பழைமையான ஆலயமாம் இது. ஒருகாலத்தில் வானரக்கூட்டம் அதிகம் வசித்த இடம் ஆதலால், அனுமன்மேடு என்று வழங்கப்பட்டது இந்தப் பகுதி. இந்த வானரங்கள் வயல்களில் இறங்கி நாசம் செய்ததால் ஆத்திரம் அடைந்த சண்முகம் சேர்வை என்பவர், கல் வீசி வானரங்களை விரட்டினாராம். இதில் ஒரு குரங்கின் வாய்ப்பகுதியில் அடிபட்டு, அங்கேயே இறந்தும் போனது. இந்த தோஷத்தின் விளைவால், சண்முகம் சேர்வைக்கு இரண்டு மனைவியர் இருந்தும் குழந்தை பாக்கியம் கிடைக்கவே இல்லையாம். மனம் வருந்திய சண்முகம் சேர்வை, அனுமன்மேட்டில் ஸ்ரீஆஞ்ச நேயரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்போது, 'உனக்கு வாரிசு பிறக்க அருள்கிறேன். உன் பரம்பரையினரும் எனக்கான பூஜைகளைத் தொடர வேண்டும்' என்று அசரீரி ஒலித்ததாம். அதன்படி, இன்றும் சண்முகம் சேர்வையின் பரம்பரை யினரே இந்த அனுமனுக்கு பூஜைகள் செய்து வருகின்றனர்.

மாங்கல்ய பாக்கியம், குழந்தைப் பேறு, நாகதோஷ நிவர்த்தி, தொழில் முன்னேற்றம்... என எண்ணற்ற பலன்களை வாரி வழங்குகிறார் ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயர். 'இவருக்கு வெற்றிலை மாலை சார்த்தி, 9 முறை வலம் வந்து, சந்நிதியில் பிரசாதமாகத் தரப்படும் செந்தூர நிறக் கயிற்றை கையில் கட்டிக்கொண்டால் தேர்வு பயம் நீங்கும்; தன்னம்பிக்கை பிறக்கும்' என்றும், 'காரிய ஜெயம் தரும் ஆஞ்சநேயர் இவர்' என்றும் சிலிர்ப்புடன் விவரிக்கின்றனர் பக்தர்கள்!

- இரா. கோகுல்ரமணன்
படங்கள் ஈ.ஜெ. நந்தகுமார்