Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அட்சய திருதியை - நன்மைகள் பெருகட்டும்!

சித்திரை மாதம்- அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திருதியை நாள், 'அட்சய திருதியை’ திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் மே-2 வெள்ளிக்கிழமை (சித்திரை-19) அன்று அட்சய திருதியை வருகிறது.

'அட்சய’ என்றால் அழியாத- குறையாமல் பெருகக் கூடியது எனப் பொருள். இந்த நன்னாளில் செய்யப்படும் நன்மைகள் பன்மடங்காக பெருகி, அழியாத பலன் களைப் பெற்றுத் தரும் என்கின்றன ஞானநூல்கள்.

பிரம்மதேவன் உலகை சிருஷ்டித்தது, பிட்சாடனரான ஈஸ்வரன், ஸ்ரீஅன்னபூரணியிடம் பிட்சை பெற்றது, ஐஸ்வர்ய லட்சுமி, தான்யலட்சுமி போன்ற திருமகளின் அவதாரங்கள் நிகழ்ந்தது, குபேர மூர்த்தி ஐஸ்வர்யங்களைப் பெற்றது, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தை சூரிய பகவான் திரௌபதிக்கு அருளியது, கௌரவ சபையில் திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் துகில் தந்து அருளியது ஆகிய புராணச் சம்பவங்கள் நிகழ்ந்ததும் இந்த தினத்தில்தான்.

புண்ணியம் மிகுந்த இந்தத் திருநாளில் புண்ணிய நீராடுதல், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது, ஏழைகளுக்கு தானம் தருவது சிறப்பு.

என்னென்ன பொருட்களைத் தானம் தரலாம்?

அரிசி, கோதுமை முதலான உணவுத் தானியங்கள் தருவது சிறப்பு. அட்சய திருதியை அன்று அன்ன தானம் செய்வதால், இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிட்டும்; குடும்பத்தில் வறுமை நீங்கும். தவிர, அன்று பித்ருக் களுக்கு தர்ப்பணம் செய்தபின், பசுக்களுக்கு வாழைப் பழம் கொடுப்பது சிறப்பு. அட்சய திருதியை நாளில் இறைவனுக்குப் படைத்து உண்ணும் பிரசாதம் மிகச் சிறந்ததாகும்.