Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீசித்திரகுப்தர் - காஞ்சிபுரம்

 
கல்வி ஞானம் அருள்வாய்... சரணம்!
ஸ்ரீசித்திரகுப்தர் - காஞ்சிபுரம்

னித உயிர்களின் பாவ- புண்ணியங்களைக் கணக்கிடுபவர் சித்திரகுப்தன். உமையவள் சித்திரம் வரைய... அதிலிருந்து தோன்றியவர் என்பதால் சித்திரகுப்தன். 'சித்' என்றால் மனம்; 'அப்தம்' என்றால் மறைந்திருப்பது. மனிதனின் மனதில் மறைந்திருக்கும் எண்ணங்களை அறிபவர் என்பதால், சித்திரகுப்தர் என பெயர் அமைந்ததாகவும் சொல்வர். தன்னுடைய பணிகளுக்கு உதவி செய்ய ஆள் வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டினான் எமதர்மன். அதை நிறைவேற்ற எண்ணிய சிவனார், ''எமதர்மனுக்கு நல்லதொரு உதவியாளரைத் தருவது உமது  பொறுப்பு'' என்று பிரம்மனிடம் சொன்னாராம். அதன்படி, விண்ணில் ஏழு வண்ணங்களைத் தோற்றுவித்து, அவற்றை நீளாதேவி எனும் பெண்ணாக்கினார் பிரம்மன். இவளை, சூரியபகவானுக்கு திருமணம் செய்து வைத்தார். இந்தத் தம்பதிக்கு, சித்திரை மாத பௌர்ணமியில்... இடது கையில் ஏடும், வலது கையில் எழுத்தாணியுமாகப் பிறந்த குழந்தையே சித்திரகுப்தன்!

காஞ்சியம்பதியில் கடும் தவம் இருந்து சிவனருளால் சிறந்த அறிவாற்றலும் வல்லமையும் பெற்றதால், சித்திரகுப்தருக்கு இங்கே தனிக்கோயில் உள்ளது. பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே உள்ளது ஆலயம். பக்தர்களுக்கு ஞானமும் கல்வியும் வாரி வழங்குவதுடன், மோட்சபலனும் தந்தருள்கிறார் சித்திரகுப்தன்.

பல வண்ணங்கள் கொண்ட வஸ்திரத்தை சித்திரகுப்தனுக்கு சார்த்தி, ஏழு தீபங்கள் ஏற்றி, ஏழு முறை பிராகார வலம் வந்து வணங்கினால், மாணவர்கள் கல்வி-கேள்வியில் சிறந்து விளங்குவர்! இவரை வழிபட்டு கல்வியில் வெற்றி பெற்றவர்கள், இன்றைக்கு பெரிய பதவிகளில் உள்ளனர் என சிலிர்ப்புடன் கூறுகிறார்கள் பக்தர்கள். சித்திரா பௌர்ணமியில் நவகலச பூஜை இங்கே விசேஷம். இந்த நாளில் விரதம் இருந்து, சித்திரகுப்தருக்கு ஏழு தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட, முன்ஜன்ம வினைகள் நீங்கும்; கல்வி-ஞானம் பெருகும்!

- செ. மனோ
படங்கள் து. மாரியப்பன்