Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீகயிலாசநாதர் - தென்திருப்பேரை

 
கல்வி ஞானம் அருள்வாய்... சரணம்!
ஸ்ரீகயிலாசநாதர் - தென்திருப்பேரை

ல்விக்கு அதிபதி புதன்! புதனுக்கு உரிய தலமாகப் போற்றப்படுவது சீர்காழி அருகேயுள்ள திருவெண்காடு திருத்தலம். இதேபோல் தென்மாவட்ட நவக்கிரக தலங்களில் புதனுக்கு உரியது, தென்திருப்பேரை ஸ்ரீகயிலாசநாதர் ஆலயம்!

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ளது தென்திருப்பேரை. இங்கே, அழகிய கோயிலில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் ஸ்ரீகயிலாசநாதர்; சுயம்புமூர்த்தி! அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசிவகாமி அம்பாள். அழகியபொன்னம்மை என்றும் பெயர் உண்டு. இங்கே புதனின் அம்சமாகவும் திகழ்கிறார் சிவனார். ஆகவே கல்விச் செல்வத்தை வழங்கும் திருத்தலம் இது எனப் போற்றுகின்றனர்.

கல்வியில் ஆர்வமின்மை, எப்போதும் மந்தம், படித்ததெல்லாம் மறந்து போகும் நிலை... இத்தகைய பிரச்னைகள் உள்ள மாணவர்கள், இங்கு வந்து வழிபடுவது சிறப்பு. இங்கே தீர்த்தத்தில் நீராடி, கைப்பிடி அளவு பச்சைப்பயறை எடுத்து ஸ்வாமி சந்நிதியில் சமர்ப்பித்து, ஸ்ரீகயிலாசநாதரை 3 முறை பிராகார வலம் வந்து வணங்க வேண்டுமாம். இதனால் மாணவர்களின் மந்த நிலை அகலும்; படிப்பில் ஆர்வமும், படித்தது மனதில் பதியும் நிலையும் ஏற்படும்.

தேர்வில் நிறைய மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதற்காக, புதன்கிழமை அன்று ஸ்ரீகயிலாசநாதருக்கு பால், தேன் மற்றும் நெய் கலந்து அபிஷேகம் செய்து, பச்சை வஸ்திரமும் மருக்கொழுந்து மாலையும் சார்த்தி, பச்சைப்பயறு நைவேத்தியம் செய்து, 9 நெய்விளக்குகள் ஏற்றி வழிபடுகின்றனர்.

சுமார் 17 வருடங்கள் வரை, ஒருவரின் ஜாதகத்தில் ஆட்சி செய்வார் புதன் பகவான். கல்வியில் சிறக்க இவரது அனுக்கிரகம் தேவை. புதன் கிரகத்தின் நற்பலன்களைப் பெற, தென்திருப்பேரை ஸ்ரீகயிலாசநாதர் அருள்புரிவார்.

- இ. கார்த்திகேயன்
படங்கள் எல். ராஜேந்திரன்