Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீராமர் கோயில் - பொள்ளாச்சி

 
கல்வி ஞானம் அருள்வாய்... சரணம்!
ஸ்ரீராமர் கோயில் - பொள்ளாச்சி

பொள்ளாச்சி! இயற்கை எழிலார்ந்த இந்த ஊரில் கோயில்கொண்டு, கல்வி-ஞானம் முதலான சகல செல்வங்களையும் வாரி வழங்குகிறார் ஸ்ரீராமர். சுமார் 300 வருடங்களுக்கு முன்பு வரை, ஸ்ரீஅனுமன் ஆலயமாகத் திகழ்ந்ததாம். பிற்காலத்தில் ஸ்ரீராமர் விக்கிரகம் கிடைத்ததும், இங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனராம். அதன்பிறகு, ராமர் கோயில் என்றானதாம்!

கல்வியையும் ஞானத்தையும் அருளும் இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு... தம்பி லட்சுமணன் இல்லாமல், சீதாதேவி மட்டுமே உடனிருக்க ஸ்ரீகல்யாணராமனாக காட்சி தருகிறார் ஸ்வாமி. கோயிலின் மற்றொரு சிறப்பு... ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் இருந்து மண் எடுத்து வந்து, இங்கேயும் ஒரு ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனம் (1972-ஆம் ஆண்டு) அமைக்கப்பட்டதாம். எனவே, இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கினால், இறையருளும் குருவருளும் ஒருசேரக் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

மத்வ சம்பிரதாயப்படி பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில், ஸ்ரீராமநவமியும் அப்போது நடைபெறும் திருக்கல்யாணமும் விசேஷம்! இந்தத் திருநாளில், ஆண்கள் ஸ்ரீராமருக்கு வேட்டி சார்த்தியும்; பெண்கள் ஸ்ரீசீதாதேவிக்கு புடவை சார்த்தியும் வேண்டிக் கொண்டு, கோயிலில் தரப்படும் 'கங்கணதாரம்' எனப்படும் மஞ்சள் கயிற்றை வீட்டு பூஜை அறையில் வைத்து பிரார்த்தித்து வந்தால், விரைவில் திருமணம் நடந்தேறுமாம். இதேபோல், கோயிலில் தரப்படும் தேங்காயை, நேரடியாகவோ அல்லது ஏதேனும் ஸ்வீட் தயாரித்தோ, தம்பதியர் சாப்பிட்டால் விரைவில் குழந்தைப் பேறு உண்டாகும் என்பதும் நம்பிக்கை! படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், கல்வியில் மிகவும் மந்த நிலையில் உள்ளவர்கள், ஸ்ரீராமரையும் ஸ்ரீஅனுமனையும் பிரார்த்திக்க... கல்வியில் தேர்ச்சி பெறுவர்; அதிக மதிப்பெண் பெற்று சாதிப்பது உறுதி என்கின்றனர் மாணவர்கள்!

- ந. வினோத்குமார்
படங்கள் ரியாஸ் இ. அகமத்