Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்விக் கடவுளரை வணங்குவோம்!

 
கல்வி ஞானம் அருள்வாய்... சரணம்!

கல்விக் கடவுளரை வணங்குவோம்!

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

- ஒளவை அருளிய இந்தப் பாடலைப் பாடி, வெள்ளை மலர்கள் தூவி, அனுதினமும் விநாயகரை வழிபட, கல்வித் தடைகள் நீங்கும்.

ஓம் ஞானானந்த மயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே

- இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஸ்ரீஹயக்ரீவரை வழிபட, கடினமான பாடங்களும் எளிமையாகப் புரியும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீ மஹி
தந்நோ புத பிரசோதயாத்

- புதன் பகவானுக்குரிய காயத்ரீ மந்திரமாகிய இதை, தினமும் 5 முறை சொல்லி வந்தால், நினைவாற்றல் வளரும்; கணிதப் பாடத்தில் நூறு சதவீதம் வெற்றி பெறலாம்.

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
ப்ரம்ம பத்தின்யை ச தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத்

ஸ்ரீசரஸ்வதிதேவி காயத்ரீ மந்திரம் இது. தூய பக்தியுடன் இந்த மந்திரத்தைப் பாராயணம் செய்து கலைமகளை வழிபட, மாணவ- மாணவியர் கல்வியில் முதலிடம் பெறலாம்.

நமசிவாயவே ஞானமும் கல்வியும்
நமசிவாயவே நான் அறிவிச்சையும்
நமசிவாயவே நா நவின்று ஏத்துமே
நமசிவாயவே நன்னெறி காட்டுமே

- திருநாவுக்கரசர் அருளிய இந்தப் பாடலைப் பாடி ஈசனை வணங்க, ஞாபகசக்தி பெருகும்.

 
   
 
                            
        

 
கல்வி ஞானம் அருள்வாய்... சரணம்!
சாதித்தவர்கள் சொல்கிறார்கள்!

அருள் வழங்கிய ஆதிபராசக்தி!
- சாத்தூர் ரம்யா

''அதிகாலைல படிக்கறதுதான் பெஸ்ட். பாடங்கள் ஈஸியா புரியும்; மறக்கவும் செய்யாது. குறிப்பா, படிக்கறதுக்கு முன்னாடி, ஒரு பத்து நிமிஷம் கண்ணை மூடி தியானம் பண்ணிட்டு, பிடிச்ச ஸ்லோகங்களைச் சொல்லிட்டு படிக்கறது என் வழக்கம். இதனாலதான், 2006-ஆம் வருஷம், டென்த்ல 500-க்கு 490 மார்க் எடுத்து, மாநிலத்தில் முதலிடம் வரமுடிஞ்சுச்சு. எல்லாத் துக்கும் மேல, ஆதிபராசக்தியோட கருணையும் முக்கிய காரணம்!''

செல்வ விநாயகருக்கு சிதறுகாய்!
- செங்கல்பட்டு அருண்

''உங்களுக்கு ஒரு விஷயம்... எக்ஸாம் ஆரம்பிக்கற துக்கு மூணு மாசம் முன்னாடியே எல்லாப் பாடத்தையும் படிச்சு முடிச்சுட்டேன். அதனாலதான் பிளஸ்டூ-ல (2008-ஆம் வருடம்) நாலு பாடங்கள்ல 200-க்கு 200 மார்க் வாங்கினேன். அப்புறம்... எங்க தெருமுனைல இருக்கற செல்வ விநாயகரையும் சொல்லணும். இவர்தான், எனக்கு துணையா இருந்தார். ரிசல்ட் வந்ததும் முதல் வேலையா என் செல்வ விநாயகருக்கு, சிதறுகாய் உடைச்சு, பிரார்த்தனையை நிறைவேத்தினேன்.''

தேங்க்ஸ் பிள்ளையாரப்பா!
- செங்கல்பட்டு அக்ஷயா

''காலைல எழுந்ததும் விநாயகர் முகத்துல கண் விழிச்சாதான் எனக்கு நிம்மதி! அதேபோல, பாடங்களை தேக்கி வைச்சு, மொத்தமா படிக்கிற பிஸ்னஸ் நம்மகிட்ட கிடையாது. நேரம் கிடைக்கறப்ப, விநாயகர் ஸ்லோகம் சொல்லிட்டுதான் படிக்க உக்காருவேன். 2007-ஆம் வருஷம், எஸ்.எஸ்.எல்.சி-ல 490 மார்க் எடுத்து மாநிலத் தில் முதலிடம் வந்தேன். தேங்க்ஸ் பிள்ளையாரப்பா!''

முருகப்பெருமான் என் பக்கம்!
- நம்பியூர் தாரணி

''ஈரோடு மாவட்டம், நம்பியூர் பக்கத்துல குழந்தை பாளையம்தான் என் ஊரு. முருகப்பெருமான்தான் என் இஷ்டதெய்வம். உண்மையாவும் கவனத்தோடயும் உழைச்சா, கடவுள் நம்ம பக்கம் இருப்பார்னு அம்மா சொல்வாங்க. முருகன் என் பக்கம் இருந்தார். 1126 மார்க் (2008- ஆம் வருடம்) எடுத்தேன். கருத்தியல் பாடத்துல 200 மார்க்!''

குலசாமியும் கோதண்டராமரும்!
- பி.வி.களத்தூர் ராஜேஷ்குமார்

''காஞ்சிபுரம்- பொன் விளைந்த களத்தூர்தான் என்னோட ஊர். திட்டமிட்டு, ஈடுபாட்டோட படிச்சா, வெற்றி நிச்சயம். இதைத்தான் நான் பண்ணினேன். இத்தனைக்கும் மேல... எங்க குலசாமி திரௌபதி அம்ம னும் தினமும் நான் வழிபட்ட கோதண்டராமரும்தான் என் வெற்றிக்குக் காரணம். இல்லேன்னா, 1182 மார்க் (2008-ஆம் வருடம்) எடுத்திருப்பேனா... தெரியல!''

காயத்ரீ மந்திர மகிமை!
- தூத்துக்குடி திவ்யா

''டி.வி.க்கு குட்பை சொல்லிட்டு, படிக்க உக்காந்தாலே பாதி ஜெயிச்சிரலாம். இதான் என் பாலிசி! காலைலயும் சாயந்திரமும் படிக்க உக்காரும்போது, காயத்ரீ மந்திரம் சொல்லுவேன். மனசை ஒருநிலைப்படுத்த முடிஞ்சுச்சு. பிளஸ் டூ-ல 1074 மார்க் எடுத்தேன். சிறப்புத் தமிழ்ல, 198; மாநிலத்துல 3-வது இடம்! இத்தனை பெருமைக்கும் காயத்ரீ மந்திர மகிமையே காரணம்!''

 
- தொகுப்பு இர. ப்ரீத்தி, பா. ஜெயவேல், செ. கார்த்திகேயன், இ. கார்த்திகேயன்