Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேவி தரிசனம்... பாப விமோசனம்

 
 
தேவி தரிசனம்... பாப விமோசனம்

''பெண்களைத் தவிர வேறு எவரும் என்னை வெல்ல முடியாதபடி வரம் அருளுங்கள் ஸ்வாமி!'' என்றான் தஞ்சன் எனும் அரக்கன். இவனது கடும் தவத்தில் மகிழ்ந்து, இவனுக்கு எதிரே காட்சி தந்த சிவனாரிடம் இப்படித்தான் வரம் கேட்டான். கலகலவென சிவபெருமான் சிரிக்க... நடுங்கி நின்றான் அரக்கன்!

''அப்படியெனில் உன்னை பெண் ணொருத்தி வென்றால் பரவாயில்லையா?'' என்று சிவபெருமான் கேட்க... ''அதெப்படி வெல்வார்கள்? என்னதான் இருந்தாலும் ஆண்களை வெல்லும் சக்தி பெண்களுக்கு இல்லையே?!'' - எகத்தாளமாகச் சொன்னான் தஞ்சன். உள்ளே கோபம் எழுந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மெள்ளப் புன்னகைத்தபடி, ''அப்படியே ஆகட்டும்'' என்று வரம் தந்தார் சிவனார்!

வரம் கிடைத்ததும் வரைமுறையே இன்றி அட்டூழியம் செய்யத் துவங்கினான் அரக்கன். தேவர்கள் கதறியபடி ஓடிவந்து சிவபெருமானை சரணடைந்தனர்.

''எவரும் கலங்க வேண்டாம். பெண்ணுக்கு சக்தி இல்லை என்று கூறிய முட்டாள் அரக்கன் அவன்! பெண்ணே சக்தி என்பதை உணர்த்தும் வேளை வந்துவிட்டது. இதோ... தேவியை, என் கௌரியை அனுப்புகிறேன். அழித்து துவம்சமாக்கி விடுவாள். நிம்மதியாகச் செல்லுங்கள்'' என்றார் சிவபெருமான்.

அவ்வளவுதான்! முகத்தில் உக்கிரம் ஏற, எட்டுக் கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி, சிங்கத்தில் அமர்ந்தபடி மகாகாளியாக கர்ஜித்தாள் தேவி.

தஞ்சாசுரனுக்கும் இவளுக்கும் கடும் போர் மூண்டது. இதுவரை பெற்ற வரங்களால் பல முயற்சிகள் மேற்கொண்டு காளியை அழிக்க முற்பட்டவன், எருமைக் கிடாவாகத் தோன்றினான். இறுதியில்... கொடூரமாக, மிகக் கேவலமாகத் தோற்றுப் போனான். 'பெண் என்றால் இளப்பமா உனக்கு?' என்று கொதித்த மாகாளி, அவனது தலையையும் உடலையும் இரண்டாக்கி வீசியெறிந்தாள்; தஞ்சாசுரன் ஒழிந்தான்!

ஆனாலும் உக்கிரம் தணியவில்லை தேவிக்கு! இதில், காடு-கரையெல்லாம் கபகபவென எரிந்து சாம்பலாயின! மொத்தப் பகுதியிலும் வெம்மை கூடி, அனைவரையும் இம்சித்தது. தேவரெல்லோரும் சிவனாரிடம் சொல்ல... தேவியைத் தேடி வந்தார் சர்வேஸ்வரன். ''ஏ கௌரி... சாந்தம் கொள்!'' என்று செல்லமாக அதட்டினார். எத்தனை சக்தியும் திறமையும் இருந்தாலும் கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் கட்டுப்படுவதுதானே தாம்பத்தியத்தின் அடிப்படை! ஆகவே, நெல்லிப்பள்ளம் எனும் குளத்தில் மூழ்கி எழுந்தவள் அமைதியானாள்; பூங்காளிவனத்தில் கோயில் கொண்டாள்!

அந்தப் பூங்காளிவனத்தின் இன்றைய பெயர், வல்லம்! வல்லப மன்னன் ஆண்டதால் வல்லம் என்று இந்த ஊரின் பெயர் அமைந்தது. தஞ்சன் எனும் அசுரனின் பெயரைக் கொண்டு அழைக்கப்படும் ஊரும் உண்டு. அதுதான் தஞ்சாவூர் என்கிறது தல வரலாறு.

தஞ்சை மாவட்டம் வல்லத்தில் அமைந்துள்ள மிகப் பழைமையான ஆலயம் இது! கரிகால் சோழன் இந்த அம்மனை தரிசித்து விட்டுத்தான், போருக்குச் செல்வானாம்; வெற்றிவாகை சூடி வருவானாம்! இந்தக் கோயிலை பிரமாண்டமாக எழுப்பியதுகூட கரிகால்சோழன்தான்! இதன் பிறகு வந்த சோழ மன்னர்களுக்கு இஷ்ட தெய்வம்

குலதெய்வம் எல்லாமே ஏகௌரி அம்மன்தானாம்! வல்லத்தில் குடிகொண்டதால் வல்லத்து மாகாளி; கரிகாலன் வழிபட்டதால் கரிகாற்சோழ மாகாளி என்றும் பெயர் உண்டு.

எட்டு கரங்களில் சூலம், கத்தி, நாகத்துடன் கூடிய உடுக்கை, கிளி, நாகம், கேடயம், மணி மற்றும் கபாலம் ஏந்தியபடி, வலது காலை மடித்து வைத்து, இடது காலைத் தொங்கவிட்டு, அந்தக் காலுக்குக் கீழே அசுரனை மிதித்தபடி பத்ம பீடத்தில் காட்சி தருகிறாள். இன்னொரு விஷயம்... தலைக்கு மேலே இன்னொரு தலையும் உண்டு. ஒரு முகத்தில் சாந்தமும் கருணையும் பொங்க தரிசனம் தரும் அம்மன், இன்னொரு முகத்தில் உக்கிரத்துடன் காட்சி தருகிறாள்.

கருவறையில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயில்களில் ஏகௌரி அம்மனின் ஆலயமும் ஒன்று! எனவே மிக சக்தி வாய்ந்த அம்மனாக, கருணை வடிவம் கொண்ட தாயாக, அருளும் பொருளும் வாரி வழங்கும் தேவியாகப் போற்றப்படுகிறாள் ஏகௌரி அம்மன்!

சோழ தேசத்தைக் கட்டிக் காத்த மாமன்னர்கள் பலருக்கும் துணையாக இருந்து தஞ்சைத் தரணியை செழிக்கச் செய்த ஏகௌரி அம்மனை கண்ணார தரிசித்து வணங்குங்கள். பிறகு உங்கள் வீட்டில் ஒருத்தியாக இருந்து உங்களையும் மொத்த குடும்பத்தையும் காப்பாள் என்பது உறுதி!

எலுமிச்சை பழமும் மஞ்சள் கிழங்கும்!

டைப்பட்ட திருமணம் மற்றும் பிள்ளை பாக்கியம் முதலானவற்றுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக இந்தக் கோயிலைப் போற்றுகின்றனர் பக்தர்கள். திருமணத் தடை உள்ள பெண்கள், இங்கே வந்து அம்மனுக்கு புடவை சார்த்தி அம்மனின் திருப்பாதத்தில் குண்டு (குளியல் மஞ்சள்) மஞ்சளை வைத்து வணங்குகின்றனர்.

அதில் இருந்து ஒரேயரு மஞ்சளை எடுத்து வந்து, தினமும் குளிக்கும்போது பூசிக்கொள்ள, விரைவில் திருமணம் நடைபெறும்; அனுதினமும் அம்மன் நம்கூடவே இருந்து காப்பாற்றுகிறாள் என்பது ஐதீகம்!

இதேபோல், பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கே எலுமிச்சை பழத்தை அம்மனின் திருப்பாதத்தில் வைத்து, அதன் சாறை ஆலயத் திலேயே சாப்பிட்டுச் செல்ல... விரைவில் தொட்டில் சத்தம் கேட்பது உறுதியாம்!

கணவனின் நோய் தீர... எருமைக் கன்று காணிக்கை!

தீராத நோய் அல்லது திடீர் விபத்து என்று பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாகிவிட்ட கணவன்மார்களுக்காக வேண்டிக்கொண்டு இவளிடம் மடிப்பிச்சை கேட்டும் திரளான பெண்கள் வருகிறார்கள். தஞ்சை மற்றும் திருச்சி முதலான மாவட்டங்களில் இருந்தெல்லாம் வரும் பெண்கள் 'என் புருஷனை எமன்கிட்டேருந்து நீதாம்மா காப்பாத்தணும்' என்று கண்ணீர் மல்க வேண்டிச் செல்கின்றனர்.

பிரார்த்தனை நிறைவேறியவர்கள், நேர்த்திக்கடனாக எருமைக்கன்றை காணிக்கை செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர்.

அமாவாசை பௌர்ணமியில் அற்புத ஹோமம்!

மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி திருநாட்களில், அம்மனுக்கு சிறப்பு ஹோமங்களும் அபிஷேக-ஆராதனைகளும் நடைபெறுவது இந்தக் கோயிலின் இன்னுமொரு சிறப்பம்சம்!

காலை 9 முதல் 1200 மணி வரை நடைபெறும் ஹோமத்தில் கலந்துகொண்டு அம்மனை வழிபட, சகல சங்கடங்களும் தீர்ந்து சந்தோஷம் நிலைக்கும் என்கின்றனர்.

எங்கே இருக்கிறது?

ஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில், தஞ்சையில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லம். இங்கிருந்து வடக்கு நோக்கிய ஆலக்குடி சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு பயணித்தால், பிரமாண்டமான ஸ்ரீஏகௌரி அம்மன் ஆலயத்தை அடையலாம்!

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை

- வி. ராம்ஜி
படங்கள் மு. நியாஸ் அகமது