Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குரு பரிகாரத் தலம் - திருவலிதாயம்

 
 
திருவலிதாயம்


'குரு' பூஜித்த சிவாலயம்!

ங்கிருந்தோ பறந்து வந்து குளத்து நீரில் தன்னை நனைத்துக் கொண்டது அந்தக் குருவி. பிறகு சட்டென்று பறந்து, பாதிரி மற்றும் சரக்கொன்றை மரங்கள் நின்றிருந்த அந்த இடத்தை வந்தடைந்தது. அருகில் இருந்த சிவ லிங்கத்தைச் சுற்றி வந்து வழிபட்டது. இப்படி, ஒருநாள் இரண்டு நாள் அல்ல... பல்லாண்டு காலம் தொடர்ந்தது குருவியின் வழிபாடு!

ஒருநாள்... வழக்கம்போல் சிவலிங்கத்தை வலம் வந்து வணங்கிய குருவிக்கு, பார்வதி சமேதராக திருக்காட்சி தந்தார் சிவ பெருமான். அதே கணம், முனிவராக உருப்பெற்றது குருவி! ஆமாம்... மேனகை தந்த சாபத்தால், கருங்குருவியாக மாறிப்போன பரத்வாஜருக்கு சாப விமோசனம் கிடைத்தது; இந்தத் தலத்துக்கும் திருவலிதாயம் என்று பெயர் அமைந்தது.

பரத்வாஜர் மட்டுமா? இந்திரனும் இந்தத் தலத்தில் வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றுள்ளான். பிரம்மன், விஷ்ணு, சூரிய- சந்திரர், அக்னி, ஸ்ரீஅனுமன் மற்றும் நட்சத்திர தேவதையரும் வழிபட்டு பலன் பெற்ற சிவத் தலம் இது என்கிறது ஸ்தல புராணம்.

குறிப்பாக... குருபகவானும் சிவபூஜை செய்து வழிபட்ட தலம் ஆதலால், திட்டை, ஆலங்குடி, திருச்செந்தூர் போன்று இதுவும் குரு பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

இப்படி, தேவர்களும் முனிவர்களும் வழிபட்டு அருள் பெற்ற புண்ணியத் தலமாம் பாடி- திருவலிதாயம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. சென்னை- கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து (சுமார் 6 கி.மீ. தொலைவு) ஆவடி, அம்பத்தூர் (ஓ.டி.) செல்லும் பேருந்தில் ஏறி, பாடி லூகாஸ் டி.வி.எஸ். பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். இங்கிருந்து ஐந்து நிமிட நடைதூரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஜகதாம்பிகை சமேத ஸ்ரீதிருவலிதாய ஸ்வாமி திருக்கோயில்.

இங்கே அருள்பாலிக்கும் குரு பகவான் கொள்ளை அழகு! இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, முல்லைப் பூவால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வணங்குங்கள்... அத்தனை தோஷங்களும் விலகும் என்கின்றனர். ஒரேயரு தோஷம் மட்டும் நம்மை ஆட்கொள்ளும். அது... சந்தோஷம்!

கல்யாண வரம் தரும் நெய்தீப வழிபாடு!

'குரு வேளை வந்தால் மணமாலை தானா விழும்' என்பார்கள் பெரியவர்கள். அதாவது, ஜாதகத்தில் குருபலம் கூடிவந்து விட்டால், எளிதில் திருமணம் கைகூடி விடுமாம். இப்படி கல்யாண யோகம் அமைய, தொடர்ந்து 9 வியாழக் கிழமைகள் திருவலிதாயத்துக்கு வந்து, குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், விரைவில் பலன் கிடைக்கும்.

- வி. ராம்ஜி
படங்கள் எம். உசேன், வி. செந்தில்குமார்