Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வரலட்சுமி விரதம் - பூஜை முறைகளுடன்

(2014, ஆகஸ்ட் 8)

முத்துஸ்வாமி தீட்சிதர், தனது 'வரலக்ஷ்மி நமஸ்துப்யம்’ க்ருதியில் இந்த விரதத்தைப் பாடியிருக்கிறார். வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகளும் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு, அவர்களிடம் இருந்து கேட்டு, விரதத்தைக் கடைப்பிடித்து சாப விமோசனம் பெற்றார்.

பூவுலகில், சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.

இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் (2014, ஆகஸ்ட் 8) செய்ய வேண்டும். சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இதை மேற்கொள்வர்.

கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜிப்பதால், 'வரலட்சுமி விரத பூஜை’ என்று பெயர். மணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜை நாளில் இருந்து ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். விரத நாளின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால், பூஜை நாளுக்கு அடுத்துவரும் வெள்ளிக்கிழமை பூஜையைச் செய்யலாம். பூஜை செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்புச் சரடை கையில் கட்டி, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி, தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜை செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும். அது எல்லோராலும் இயலாது. மந்திரங்களின் உச்சரிப்பு மாறாமல் செய்ய வேண்டும் என்பதால், குருவை, அல்லது பூஜை கிரமம் தெரிந்த பெரியவர்களை உடன் வைத்துக்கொண்டு செய்ய வேண்டும்.  

பூஜைக்குத் தேவையானவை : மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

நிவேதனப் பொருள்கள்: பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

பழங்கள்: ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மா, வாழை, திராட்சை.

பூஜைக்கான முன்னேற்பாடுகள்: வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், இடத்தை அமைத்து, மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து அலங்கரிக்கவும். நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன்மேல் ஒரு தட்டில் அரிசியை வைத்து, கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கலச கும்பத்தில் நிரப்பவும்(தீர்த்தத்தையும் நிரப்பலாம்). கும்பத்தின் மேல், மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்ற வேண்டும். இந்த பூஜைக்கென்றே, தங்கம்/வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தை செய்து வைத்திருப்பர். அப்படி இல்லை எனில், மகாலட்சுமியின் முக பிம்பத்தையும் வைக்கலாம். இந்த பிம்பத்தை, கலசத்தின் மேற்புறத்தில் வைத்து, பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.

ஒரு சில இடங்களில், வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை வரைந்து, வரலட்சுமியை ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவற்றையும் சேர்க்கிறார்கள்...

பூஜையின் முடிவில், மஞ்சள் சரடை கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள்- மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்கிறது சாஸ்திரம். எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புச் சரடை பூஜையில் வைக்க வேண்டும்.

விரத நாளான வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் - ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்கிறார்கள்) தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி, கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு, நிவேதனப் பொருள் வைத்து, வாசலின் உள் நிலைப்படி அருகே நின்று, கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து, மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடன் அழைத்து வந்து, பூஜை மண்டபத்தில் கலசத்தில் உள்ள பிரதிமை பிம்பத்தில், மகாலட்சுமித் தாய் இருந்து, விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு வேண்டி, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.

தாங்கள் மேற்கொள்ளப்போகும் விரத பூஜை, எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து தொடங்க வேண்டும்.

விக்னேஸ்வர பூஜை

மஞ்சள்பொடியில் தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிடித்து, அதனையே விக்னேஸ்வரராக பாவனை செய்து, பூஜை கலசத்துக்கு முன் ஒரு வெற்றிலையில் அல்லது தாம்பாளத்தில் வைக்க வேண்டும். கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்ய வேண்டும்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே ||

- என்று விக்னேஸ்வரரை தியானித்து, அட்சதை, புஷ்பத்தை சேர்க்கவும். மணி அடிக்கவும். பிடித்து வைத்த மஞ்சளில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தித்து, அவர் முன் புஷ்பம், அட்சதை சேர்க்கவும்.

புஷ்பத்தால், விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.

ஓம் சுமுகாய நம: | ஓம் ஏகதந்தாய நம: | ஓம் கபிலாய நம: |  ஓம் கஜகர்ணாய நம: | ஓம் லம்போதராய நம: | ஓம் விகடாய நம: | ஓம் விக்னராஜாய நம: | ஓம் விநாயகாய நம: | ஓம் தூமகேதவே நம: | ஓம் கணாத்யக்ஷ£ய நம: |  ஓம் பாலசந்த்ராய நம: | ஓம் கஜானனாய நம: |  ஓம் வக்ரதுண்டாய நம: |  ஓம் சூர்ப்பகர்ணாய நம: |  ஓம் ஹேரம்பாய நம: |  ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |  ஓம் ஸித்திவிநாயகாய நம: |  ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: |

பின், தூப-தீபம் காட்டி, நிவேதனம் செய்யவும். கற்பூர ஆரத்தி செய்யவும். அதன்பின், எல்லாவற்றிலும் எப்போதும் இடையூறு நேராமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை வழிபடவும்.

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப |
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷ§ ஸர்வதா ||

- என்று பிரார்த்தனை செய்து, நமஸ்காரம் செய்யவும்.

பிறகு, கையில் அட்சதையை எடுத்துக்கொண்டு, 'வரலட்சுமித் தாயே, பூஜை மேற்கொள்ளும் எங்களுக்கு சகல நலன்களும் அருள்வாய்’ என்றும், 'குடும்பத்தில் சுபிட்சம் நிலவவும், நோய் நொடியில்லாமல் அனைவரும் சுகமாக வாழவும், தாலி பாக்கியம் நீண்டு நிலைக்கவும், நல்ல புத்திரர்களைப் பெற்று கல்வியிலும் செல்வ வளத்திலும் சிறந்து விளங்கவும் அருள் புரிவாய்’ என்றும் பிரார்த்தித்து, 'இந்த பலன்களை உத்தேசித்து, நன்னாளாகிய இன்று வரலட்சுமி பூஜையைச் செய்கிறேன்’ என்று சங்கல்பம் செய்ய வேண்டும்.

அட்சதையை வடபுறம் சேர்த்துவிட்டு, உத்தரணி தீர்த்தத்தால் கையை துடைத்து, புஷ்பத்தை எடுத்து, பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.

பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தில் சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு ||
என்று, புஷ்பார்ச்சனை செய்யவும். தீர்த்தத்தால், பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்களின் மீது தெளித்துக் கொள்ளவும்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர: |
குருஸ் ஸாக்ஷ£த் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம: || -என்று, குருவை தியானிக்கவும். பிறகு, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்தில் லேசாகத் தொட்டு, கும்பத்திலுள்ள லக்ஷ்மி பிம்பத்தில் சேர்க்கவும். பிறகு, பால் பழம் நிவேதித்து, வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கவும். கும்பத்தில் வரலக்ஷ்மியை தியானிக்கவும்.

வரலக்ஷ்ம்யை நம:- என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும்.பின், 9 முடிச்சுகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும்.

ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே |
ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ ||

வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி - என்று சொல்லி, புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து வரலட்சுமியை ஆவாஹனம் செய்யவும். பிறகு அங்க பூஜை செய்யவும். முழுதாகச் செய்யாவிடினும், மகாலட்சுமி பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து,

ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று, புஷ்பம் அட்சதை சமர்ப்பிக்கவும். பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோத்ரசத நாமம் (பார்க்க பக்கம்: 113) சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.

தூப தீபம் காட்டி, புஷ்பம் அட்சதை சேர்த்து, நிவேதனப் பொருள்களை புரோட்சித்து, நிவேதனங்களின் பெயர் சொல்லி நிவேதித்து, நீராஞ்சனமும் புஷ்பாஞ்சலியும் செய்து, வலம் வந்து வணங்கி நமஸ்காரம் செய்யவும்.

நமோஸ்து நாலீக நிபானனாயை நமோஸ்து நாராயண வல்லபாயை
நமோஸ்து ரத்னாகர ஸம்பவாயை நமோஸ்து லக்ஷ்ம்யை ஜகதாம் சரண்யை
- என்று சொல்லி, நமஸ்காரம் செய்து, பிரார்த்தனை செய்யவும்.பிறகு, 9 முடிச்சுகள் போடப்பட்ட சரடில் முடிச்சுக்கு ஒன்றாக, புஷ்பத்தால் அர்ச்சிக்கவும். கமலாயை நம: (முதல் முடிச்சில்), ரமாயை நம: (2-ல்) லோகமாத்ரே நம:(3-ல்), விச்வஜனன்யை நம:(4-ல்), மஹாலக்ஷ்ம்யை நம:(5-ல்), க்ஷீராப்தி தனயாயை நம:(6-ல்), விச்வஸாக்ஷிண்யை நம:(7-ல்), சந்த்ர ஸஹோதர்யை நம:(8-ல்), ஹரிவல்லபாயை நம:(9ல்)  

ஸர்வமங்கல மாங்கல்யே ஸர்வபாப ப்ரணாசினி |
தோரகம் ப்ரதிக்ருஹ்ணாமி ஸுப்ரீதா பவ ஸர்வதா ||
என்று சொல்லி, சரடை தாம்பாளத்தில் வைத்து, தேங்காய்மூடி பழம் வெற்றிலை பாக்கு மஞ்சள் வைத்து, தட்டை கையில் பிடித்து,

நவதந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி ஸமன்விதம் |
பத்னீயாம் தக்ஷிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே || என்று சொல்லி சரடை வலது கையில் கட்டிக்கொள்ளவும். கையில் பழம் புஷ்பம் எடுத்து, ஸ்ரீ வரலக்ஷ்மீ ப்ரீத்யர்த்தம் க்ஷீர அர்க்யப்ரதானம் கரிஷ்யே | என்று பாலினால் அர்க்யம் கொடுக்கவும். பிறகு பெரியோரை வணங்கி, தாம்பூலம் தட்சிணை கொடுத்து, சுமங்கலிகளை பூஜித்து தாம்பூலம் கொடுக்கவும். பிறகு ஆரத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்யவும்.

மறுநாள், அட்சதை புஷ்பம் சேர்த்து, தூப தீப, கற்பூர ஆரத்தி காட்டி, நைவேத்யம் செய்து, நமஸ்கரிக்கவும். கலசத்தில் தீர்த்தம் இருந்தால், சிறிது உட்கொண்டுவிட்டு, மீதத்தை வீடு முழுவதும் தெளிக்கவும். கலசத்தில் அரிசி வைத்திருந்தால், அதை அரிசிப் பானையில் சேர்த்துவிடவும்.