Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குருபெயர்ச்சி பலன்கள்: மேஷம்

பெரிய குறிக்கோள்களுடன் வாழ்பவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால், சூழலுக்கு ஏற்ப செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களின் பலம்-பலவீனத்தைத் தெரிந்துகொள்வது நல்லது.

கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தலாம்; பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போகவும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுங்கள். வீடு கட்ட அரசு அனுமதி தாமதமாகக் கிடைக்கும். வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகளும் உண்டு. வீடு, மனை வாங்கும்போது தாய் பத்திரத்தைச் சரிபார்த்து வாங்கவும். சொத்து விற்கும்போது ஒரே தவணையில் பணத்தை வாங்கப் பாருங்கள். தாயாருக்கு சின்னச் சின்ன அறுவை சிகிச்சை, மூட்டு வலி, முதுகுத்தண்டு வலி வந்து போகும். பண வரவு இருந்தாலும் செலவுகளும் துரத்தும். மனஇறுக்கம் அதிகமாகும். அரசு வரிகளை உடனுக்குடன் செலுத்தவும். நல்லவர்களின் நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.  

குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்கள் உத்தியோக ஸ்தானத்தைப் பார்ப்பதால், சிலருக்கு புது வேலை கிடைக்கும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குரு பகவானின் சஞ்சாரம்...

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் பாக்ய- விரயாதிபதியான குரு, தனது சாரமான புனர்பூசத்தில் செல்வதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். தந்தையும், அவர் வழி உறவினர்களும் உதவிகரமாக இருப்பர். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். புது வேலை கிடைக்கும். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் ஜீவனாதிபதி யும் லாபாதிபதியுமான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால் வேலைச்சுமை, பணப்பற்றாக் குறை, இனந் தெரியாத கவலைகள் வந்து செல்லும். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள்.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை சேவகாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் செல்வதால், வீண் செலவுகள், சிறுசிறு விபத்துகள், உங்களைப் பற்றிய வதந்திகள், பழைய கடனை நினைத்து அச்சம், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து செல்லும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள்.

3.12.14 முதல் 21.12.14 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 5-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், பணவரவு உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும். மகளுக்குத் திருமணம் கூடி வரும்.  

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...

22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்ய நட்சத்திரத் திலும், 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மனைவிவழியில் மோதல்கள் விலகும்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முதலீடு செய்து லாபம் பெற பாருங்கள்.தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். விளம்பர யுக்திகளைக் கையாளுங்கள். கடையை வேறிடத்துக்கு மாற்றவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். ரியல் எஸ்டேட், புரோக்கரேஜ், உணவு, துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வார்கள். எனினும், சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அடிக்கடி இடமாற்றம் வரும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாகக் கிடைக்கும்.      

கன்னிப்பெண்களுக்குக் கல்யாணம் கூடி வரும். எதிலும் பெற்றோரின் முடிவுகளை ஏற்பது நல்லது. சிலருக்கு வெளி மாநிலத்தில் வேலை கிடைக்கும். புதிய நண்பர்களிடம் கவனமாகப் பழகுங்கள். மாணவ-மாணவியருக்கு, விரும்பிய கல்விப் பிரிவில் சேர்வதற்கு அதிகம் செலவாகும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடலாம். மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். அரசியல்வாதிகளே! கோஷ்டிப்பூசல், வீண் வதந்தியால் உங்கள் செல்வாக்கு குறையலாம். சகாக்கள் மத்தியில் மேலிடத்தை விமர்சிக்கவேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சிறு சிறு ஏமாற்றங் களைத் தந்தாலும் கடின உழைப்பால் உங்களை முன்னேற வைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஆலங்குடி ஈஸ்வரனையும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். ஆதவரற்ற மாணவனின் உயர்கல்விக்கு உதவுங்கள். வாழ்க்கை உயரும்.