Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குருபெயர்ச்சி பலன்கள்: கடகம்

சிறந்த பரோபகாரி நீங்கள். குரு 13.6.14 முதல் 4.7.15 வரை ஜென்ம குருவாக அமர்வதால், பொறுப்புகளும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும். வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திணறுவீர்கள். கோபம், விரோத மனப்பான்மை அதிகரிக்கும். உணவில் கவனம் தேவை. பெரிய நோய் இருப்பதாக நினைத்து வீண் பயம் வரும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் தம்பதிக்குள் பிரிவு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகவும்.

எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்கவேண்டாம். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். வங்கியில் உங்கள் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. புதியவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம்.  

குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக தீரும். சிலர், தங்களது பங்கு நிலத்தை விற்று நகரத்தை ஒட்டி இடம் வாங்குவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு 7-ம் வீட்டை பார்ப்பதால், தள்ளிப் போன திருமணம் கூடி வரும். கணவன்-மனைவிக்குள் சச்சரவு இருந்தாலும் பாசம் குறையாது.

குரு பகவானின் சஞ்சாரம்...

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் சஷ்டம- பாக்கி யாதிபதியான குரு, சுய நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால், பணப்புழக்கம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கல்யாணம் கூடி வரும். வழக்கு சாதகமாகும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் சப்த-அஷ்டமாதிபதியான சனியின் பூசம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவர். கடன் பிரச்னையை நினைத்து பயம் எழும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

28.8.14 முதல் 2.12.14 மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை சேவகாதிபதியும்-விரயஸ்தானாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் பயணங்கள், வீண் செலவுகள் வந்து நீங்கும். இளைய சகோதரர்களால் சங்கடங்கள் வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது.  

3.12.14 முதல் 21.12.14 வரை கேதுவின் நட்சத்திரமான மகத்தில் குரு செல்வதால், திடீர் பணவரவு உண்டு. அரசால் ஆதாயம் அடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் பலிதமாகும். உங்களைவிட வயதில் குறைந்தவர்கள் மூலம் ஆதாயம் உண்டு. வீட்டு ப்ளான் அப்ரூவலாகும். 22.12.14 முதல் 17.4.15 வரை குரு பகவான் ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீண் செலவுகள் வேண்டாம். மகளுக்கு நல்ல வரன் அமையும். சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகளும், சிறு சிறு நஷ்டங்களும், ஏமாற்றங்களும் இருக்கவே செய்யும். புது முதலீடுகளோ, எவருக்கும் முன்பணம் தருவதோ, கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதோ வேண்டாம். கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். கூட்டுத்தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும், முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது.

உத்தியோகத்தில் வேலை கூடும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். சின்னச் சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பார். பதவி உயர்வு, சம்பள உயர்வை பெற போராட வேண்டி இருக்கும்.  

கன்னிப் பெண்களுக்கு பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. மாணவ-மாணவிகளுக்கு மறதியால் மதிப்பெண் குறைய வாய்ப்பு உண்டு. படிப்பில் முழுக்கவனம் செலுத்தவும்.

அரசியல்வாதிகள் சபை நாகரிகம் அறிந்து பேசவும். குடும்ப பிரச்னைகளை வெளியில் தெரியாதபடி பேசித் தீர்க்கவும். கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். கலைத் துறையினரே! விமர்சனங்கள், கிசுகிசுக்கள் வந்தாலும் விரக்தி அடையவேண்டாம். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.  

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் வேலைச் சுமையையும், எதிர்மறை எண்ணங்களையும் தந்தாலும் அனுபவ அறிவையும், தன்னை உணரும் சக்தியையும் தருவதாக அமையும்.

 பரிகாரம்: சஷ்டி திதி நாள்களில் பழநி முருகனையும் போகரையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். தாயில்லாப் பிள்ளைக்கு இயன்றவரையில் உதவுங்கள். தடைகள் நீங்கும்.