Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குருபெயர்ச்சி பலன்கள்: சிம்மம்

கொடுப்பதில் மகிழ்பவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால், வேலைச் சுமையும், அலைச்சலும், செலவுகளும் இருக்கும். சிலர் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். வங்கி லோன் கிடைக்கும்.

உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கணவன்-மனைவிக்குள் எழும் சிறு பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். கர்ப்பிணிகள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். மகளுக்கு வரன் தேடும்போது விசாரித்து திருமணம் முடிப்பது நல்லது.

வெளிப்படையான பேச்சைத் தவிர்க்கவும். பழைய கடனை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வாகனத்துக்கான லைசன்ஸ், காப்பீட்டை குறிப்பிட்ட காலத்துக்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். சொத்து ஆவணங்கள், பத்திரங்களைத் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எவருக்காகவும் வாக்குறுதி தர வேண்டாம்.

குரு உங்கள் சுகஸ்தானத்தை பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர், வேறு ஊருக்கு குடிபெயரலாம். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை நீங்கும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும்.

குரு பகவானின் சஞ்சாரம்...

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான குரு, தன் சாரமான புனர்பூசத்தில் செல்வதால், குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு வரும். பூர்வீகச் சொத்து சேரும்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் சஷ்டம- சப்தமாதிபதியான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், பிறர் மீது நம்பிக்கையின்மை, சோர்வு, சுபச் செலவுகள் வந்துபோகும். புதியவரை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். மனைவியின் நலனில் கவனம் தேவை.

28.8.14 முதல் 2.12.14 மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை தனாதிபதியும்-லாபாதிபதியுமான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு செல்வதால் டென்ஷன் அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சொத்து வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். 3.12.2014 முதல் 21.12.2014 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்குள்ளேயே கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், வீண் விரயம், ஏமாற்றம், அல்சர், கை, கால், மூட்டு வலி, யாரை நம்புவது என்கிற குழப்பம் வந்து நீங்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், திடீர் திருப்பம் உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமண முயற்சிகள் பலிதமாகும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். புது பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் புது அனுபவங்கள் கிடைக்கும். புதிய நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சங்கத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களுக்கென்று தனி இடம் உண்டு. இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில், திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். அதிகாரிகளுடன் சின்னச் சின்ன முரண்பாடுகள் வந்து போகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத் ததை முடிப்பீர்கள். வேற்று நாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது.

கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் அமையும். உயர் கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். மாணவ-மாணவியருக்கு, படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.    

கலைத் துறையினர், விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். வேற்று மொழி பேசுபவர்களால் புது வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை மேலிடம் உற்றுநோக்கும். புது பதவியில் அமருவீர்கள். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்புகள் நீங்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சுபச் செலவுகளை தருவதாகவும், நட்பு வட்டத்தை விரிவடையச் செய்வதாகவும் அமையும்.

பரிகாரம்: உத்திராட நட்சத்திரத் திருநாளில் திருச்செந்தூர் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். வீட்டில் சுபிட்சம் பெருகும்.