Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குருபெயர்ச்சி பலன்கள்: துலாம்

ழைமையில் புதுமையை திணிப்பவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவியைப் பறித்துவிடுவாரே, கையில் காசு பணம் தங்காதே... என்றெல்லாம் பதற்றப்படாதீர்கள். ஒரளவு நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். வேலைப்பளுவால் டென்ஷன் கூடும். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவர்.

எந்த விஷயத்தையும் நீங்களே முன்னின்று முடிக்கவும். எவருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வீண் பழி வந்து சேரும். நகை, பணத்தை இழக்க நேரிடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும். குரு ஏழாம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். குரு 9-ம் பார்வையால் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், தடைப்பட்டிருந்த காரியங்கள் இனி கைகூடும்.

குரு பகவானின் சஞ்சாரம்...

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் சேவகாதிபதியும் - சஷ்டமாதிபதியுமான குருபகவான் புனர்பூசத்தில் செல்வதால், உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்டதை எண்ணி வருந்துவீர்கள். உங்களின் தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் சுக-பூர்வ புண்ணியாதிபதியான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால் புதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வேலை கிடைக்கும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். 28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரையிலும் உங்களின் பாக்யாதிபதியும்-விரயாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், பண வரவு உண்டு. புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். தந்தை மற்றும் அவர் வழி உறவுக ளால் ஆதாயமடைவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.

3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 11-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால் செல்வம், செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும்.      

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:

22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், சிக்கனம் தேவை. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் விவாதிக்கவேண்டாம். நண்பர்களுடன் மோதல்கள் வரும். யூரினரி இன்ஃபெக்ஷன், தோலில் நமைச் சல், மறதியும், பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். வாடிக்கை யாளர்களை தக்கவைத்துக் கொள்ளுங்கள். கடன் தருவதைத் தவிருங்கள். பங்குதாரர்களிடம் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு சட்ட ஆலோசகரை ஆலோசிக்கவும். கமிஷன், ரியல் எஸ்டேட், பெட்ரோ-கெமிக்கல், மூலிகை வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோக ஸ்தானமான 10-ல் குரு அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். வேலையை விட்டுவிடலாமா என்றும் எண்ணம் எழும். அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட வாய்ப்பிருக்கிறது. புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களைவிட தகுதியில் குறைந்தவர்களுக்கெல்லாம் பதவி, சம்பள உயர்வு கிடைக்கிறதே என்று வருந்துவீர்கள்.

கன்னிப்பெண்கள், எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைப்பட்ட கல்யாணம் கூடி வரும். மாணவ - மாணவியருக்கு, விருப்பப்பட்ட கல்விப் பிரிவில் சேர்வதற்கு சிலரது சிபாரிசை நாடவேண்டியது இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, தலைமையுடன் பனிப்போர் உண்டாகும். விமர்சனத்தைத் தவிர்க்கவும். கலைத் துறையினர், சிறு வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்துவது சிறப்பு. புதிய நிறுவனங்களை நம்பவேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, வாழ்வின் நெளிவு- சுளிவுகளை, சமூகத்தில் வளைந்து கொடுத்துப் போகும் கலையை உங்களுக்குக் கற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: ரேவதி நட்சத்திர நாளில் திருவானைக்கா ஸ்ரீஜம்புகேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் தீபமேற்றி வணங்குங்கள். ஏழை கட்டடத் தொழிலாளிக்கு உதவுங்கள். சுபிட்சம் வந்து சேரும்.