Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குருபெயர்ச்சி பலன்கள்: தனுசு

யல்பு நிலையை எதற்காகவும் மாற்றிக் கொள்ளாதவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால், அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவார். வருமானம் குறையாது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியமும், மனப் பக்குவமும் வாய்க்கும். உங்களின் சில பலவீனங்களையும், பிடிவாத போக்கையும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கடன் பிரச்னை மனத்தை வாட்டும்.

சந்தேகத்தையும், ஈகோவையும் ஒதுக்கிவையுங்கள்.அதனால் நட்பும் குடும்பமும் நலம்பெறும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். செலவுகளும் வழக்கால் நெருக்கடிகளும் வேலைப்பளுவும் உண்டு.  சொத்து வரியை செலுத்தி சரியாகப் பராமரியுங்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகன லைசென்ஸ், இன்ஷூரன்ஸை உரிய காலத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். நகை, பணம் களவு போக வாய்ப்பு உண்டு. உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.

குரு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீட்டு ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சீராகும்.

தாய்வழி சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.  உங்களுடைய படைப்புகள் தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங் களுக்குச் சென்று வருவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீர்கள்.    

குரு பகவானின் சஞ்சாரம்...

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குரு தன் சாரமான புனர்பூசத்தில் செல்வ தால், எதிர்பார்த்த காரியங்கள் உடனே முடியும். பணவரவு உண்டு. ஆபரணங்கள் வாங்குவீர்கள். விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் தனாதிபதியும்  சேவகாதிபதியுமான சனியின் பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், அவ்வப்போது உணர்ச்சிவசப் படுவீர்கள். கடனைத் தந்து முடிப்பீர்கள். சிலர் வீடு மாறும் நிர்பந்தத்துக்கு ஆளாவார்கள். வேற்று மாநிலம், வெளி நாடுகளில் இருப்பவர்களுடன் இணைந்து புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு உண்டு.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரையிலும் சப்தமாதிபதியும் ஜீவனாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், வேலைச்சுமை, எதையோ இழந்ததைப் போன்ற கவலைகள், நம்பிக்கையின்மை வந்து செல்லும். புதியவரை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.

3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 9-ல் கேதுவின் நட்சத்திரமான மகத்தில் செல்வதால், சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். பிதுர்வழிச் சொத்தில் சில மாற்றங் களைச் செய்வீர்கள். அரசாங்க விஷயம் உடனே முடியும்.

22.12.14 முதல் 17.4.15 வரை ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் குரு வக்ர கதியில் செல்வதால், புதிய யோசனைகள் பிறக்கும். தந்தையின் உடல் நிலை சீராகும். அவர் வழி சொத்துகள் வந்து சேரும். அரசாங்க விஷயம் சாதகமாகும். வீடு கட்ட அப்ரூவல் கிடைக்கும்.

வியாபாரத்தில் பழைய தவறுகள் மீண்டும் நிகழாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம். இரும்பு, கடல் உணவுகள், ஹோட்டல், ரசாயன வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்கு தாரர்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் கோபதாபங்கள் வேண்டாம். உயரதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். திடீர் இடமாற்றம் உண்டு. சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் வரும்.

கன்னிப்பெண்களே! சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சமூக வலைதளங்களில் கவனமுடன் செயல்படுங்கள். திருமண விஷயத்தை பெற்றோரிடம் ஒப்படைப்பது நல்லது. மாணவ- மாணவிகள், கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். விளையாட்டின்போது காயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு; கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு, சின்னச் சின்ன வாய்ப்புகளையும் போராடி பெற வேண்டியது இருக்கும். மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்லுங்கள். அரசியல்வாதிகளுக்கு, உட்கட்சி பூசலால் நெருக்கடிகள் ஏற்படலாம். தலைமையை மீறி எந்த முயற்சியிலும் இறங்கவேண்டாம். சகாக்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, சற்றே போராடி புதிய முயற்சிகளை முடிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்: திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅருணாசலேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை யும், திருவாசகம் பாடி வணங்குங்கள். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.