Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குருப் பெயர்ச்சிப் பலன்கள் (திருக்கணித பஞ்சாங்கப்படி)

19-6-2013 முதல் 13-7-2015 வரை

- சந்திரசேகரபாரதி

குரு ஸ்லோகம்:

தேவானாம்ச ருஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.

ஸுராசார்யாய வித்மஹே ஸுர ஸ்ரேஷ்டாய தீமஹி
தந்நோ குரு ப்ரஜோதயாத்.

வ்ருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரஜோதயாத்.

நவக்கிரகங்களில் முழுச்சுபர் ஆவார் இவர். தன காரகராகவும், புத்திர காரகராகவும் இருக்கிறார். அந்தணர் வகுப்பைச் சேர்ந்தவர். சமஸ்கிருத பாஷை பேசுபவர். சத்வ குணம் உள்ளவர். மஞ்சள் நிறத்தவர். வாதம் சம்பந்தமானவர். உடலில் சதையையும் மூளையையும் ஆள்பவர். பஞ்ச பூதங்களில் ஆகாயத்தை ஆள்பவர். தேவர்களுக்குக் குரு ஆவார். மந்திரியாகவும் விளங்குபவர். நான்கு கரங்களைக் கொண்டவர்.

வடகிழக்குத் திசை இவருக்கு உரியது. யானையை வாகனமாகக் கொண்டவர். குருவுக்குப் பிரீதியாக யானைக்குக் கரும்பு கொடுப்பது நல்லது.  நீள் சதுர (செவ்வக) ஆசனம் இவருக்குப் பிடித்தமானது. இனிப்பு சுவை இவருக்குப் பிடிக்கும். இனிப்புப் பண்டங்களை இவருக்கு நைவேத்தியம் செய்து, மற்றவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் குரு அருள் பெறலாம்.

'பொன்னன்' எனப்படும் இவர் பொன்னுக்கு அதிபதி ஆவார்.

முல்லை மலர் தொடுத்து இவருக்கு அணிவித்து வணங்க, வேண்டியதை வழங்குவார்.

ஹோமம் செய்யும் இடங்களில் இவர் இருப்பார் என்பதால் ஹோமம் நடக்கும் இடங்களுக்குச் சென்று கலந்து கொண்டால் இவரது அருள் கிடைக்கும். அரசு சமித்து இவருக்கு உரியது.  ஹோமத்தில் அரசு சமித்தை உபயோகிப்பதன் மூலம் இவரது அருளைப் பெறலாம்.

தட்சிணாமூர்த்தி இவருக்கு அதிதேவதை ஆவார். இவருக்கு அதிதேவதை இந்திர மருத்துவன் என்றும், பிரத்யதி தேவதை பிரம்மா என்றும் கூறப்பட்டுள்ளது.

பஞ்ச பூத தத்துவத்தில் இவர் ஆகாயத்தைக் குறிப்பதால் ஆகாயத் திருத்தலமான சிதம்பரம் சென்று ஸ்ரீநடராஜரை வழிபடுவதன் மூலம் திருவருளும் குருவருளும் பெறலாம்.

தனுசு, மீன ராசிகளுக்கு அதிபதி ஆவார். இதில் தனுசு ராசி இவருக்கு மூலத்திரிகோண ராசியாக அமைவதால்  அதிபலம் பெறுவார்.

கடகம் உச்ச வீடு.  மகரம் நீச வீடு.

அறிவு என்றால் குரு. வேதம் என்பதற்குப் பொருள் அறிவு ஆகும்.  வேதத்தின் வடிவம்தான் குரு ஆவார்.

புனித சிந்தனை, நன்னெறிகளைக் கடைப்பிடித்தல், தெய்வ பக்தி, வழிபாடு, மதாபிமானம், ஒழுக்கம், அறிவுக்கூர்மை, பெருந்தன்மை, சாத்திர அறிவு, புனித யாத்திரை, மட ஆதிக்கம், அமைச்சர் போன்ற உயர்பதவி, கெளரவமான உத்தியோகம், உயர் ரக வாகனம், அரசு சன்மானம், உயர் ரக ஆடை, அணிமணிகள், நீதி, நியாயம், தர்மம், ஈகை, உடல் உறுதி, உள்ளத் தெளிவு, சுபிட்சம், மகிழ்ச்சி, மலர்ச்சி, கல்வி, நன்மக்கட்பேறு ஆகியவற்றை குரு அருள்வார்.

ஒருவரது ஜாதகத்தில் குரு ஒருவர் மட்டுமே அதிகம் பலமாக இருந்தாலும் போதுமானது. அவரது கருணையால் அனைத்துத் துன்பங்களும் அகலுவதற்கு இடம் உண்டாகும்.

குருவின் பார்வை விசேடமானது. குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும். குரு தசை நடக்காவிட்டாலும், அவர் பார்வை பட்ட இடமும், கிரகமும் நற்பலன்களைத் தரும்.

நவக்கிரகங்களில் முழு முதல் சுபக்கிரகமான, சுபத் தன்மை நிறைந்த குருவானவர் கோசாரப்படி 19-6-2014 அன்று காலை 8.58 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் மாறுகிறார். குருவுக்கு உச்ச வீடு இது. 13-7-2015 வரை கடக ராசியில் உலவிவிட்டு அதன்பிறகு சிம்ம ராசிக்கு இடம் மாறுவார்.

கடகத்தில் குரு உலவும் இக்காலத்தில் மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு சுப பலன்களைத் தருவார்.

மேஷம், துலாம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு அளவோடு நன்மைகள் உண்டாகும்.

ரிஷபம், கடகம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்குக் கெடுபலன்கள் உண்டாகும்.

ஜனன கால ஜாதகப்படி இந்தக் குருப்பெயர்ச்சிக் காலத்தில் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் சுப பலன்கள் சொல்லப்பட்டுள்ள ராசிக்காரர்களுக்குப் பருத்தி புடவையாய்க் காய்த்தது போல் இரட்டிப்பு சுப பலன்கள் உண்டாகும். 

கெடுபலன்கள் சொல்லப்பட்டுள்ள ராசிக்காரர்களுக்குச் சங்கடங்கள் குறைந்து, ஓரளவாவது நன்மைகள் உண்டாகும்.

மேலும் ஒருவர் பிறந்த நட்சத்திரத்துக்கு 2, 4, 6, 8, 9-ஆவது நட்சத்திரங்களில் குரு உலவும்போது சுப பலன்களைத் தருவார். ராசிக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்களில் அமர்ந்து, நட்சத்திரப்படியும் சாதகமாக உலவும்போது நற்பலன்களின் அளவு கூடும். 1, 3, 4, 6, 8, 10, 12-ஆம் இடங்களில் அமர்ந்து, நட்சத்திரப்படி சாதகமாக உலவும்போது கெடுபலன்களின் அளவு குறையும்.

கோசாரம், தசாபுக்தி, நட்சத்திரம் இம்மூன்று நிலைகளின்படி குரு பலம் சிறப்பாக அமையப்பெற்றவர்கள் பாக்கியவான்கள். விசேடமான சுப பலன்களை இவர்கள் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

குரு பலம் அமையப் பெறாதவர்கள் குரு கவசம், குரு காயத்ரி, குரு மூல மந்திரம், வேத மந்திரம், ஸ்தோத்திரம், த்யான ஸ்லோகம், அஷ்டோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி, வழிபடுவது சிறப்பாகும்.

குருவுக்கு உரிய வழிபாட்டுத் தலங்கள்:

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் ஆலயம் குருவுக்குரிய வழிபாட்டு தலமாகும்.
இதுவே குருவுக்குரிய முக்கியமான பிரீதி ஸ்தலமும் ஆகும். இங்கு தட்சிணாமூர்த்தியே குருவாகக் காட்சி அளிக்கிறார்.

தஞ்சாவூர் அருகில் உள்ள தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதன் மூலமும் குரு அருள் பெறலாம். இங்கு குருவுக்குத் தனிச் சந்நிதி உண்டு.

குரு ஸ்தானத்தில் உள்ளவர்களையும், குடும்பப் பெரியவர்களையும் உள்ளன்புடன் வணங்கி, அவர்களது வாழ்த்துக்களைப் பெறுவதன் மூலமும் குருவருள் பெறலாம்.

வேதம் படித்த அந்தணர்களை வணங்கி, அவர்களுக்கு வஸ்திரம், அன்னம், சொர்ணம் ஆகியவற்றை அளிப்பதன் மூலமும் குருவருள் கிடைக்கும்.

தினமும் 108 முறை குரு காயத்ரியைச் சொல்லி, குருவுக்கு பசும் நெய் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

இனி, கடகத்தில் உலவும் குருவால் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் விளையக்கூடிய பொதுப்பலன்களைப் பார்ப்போம்.

மேஷம்:

உங்கள் ராசிக்கு 3-ல் உலவிக்கொண்டிருந்த குரு 4-ஆமிடம் மாறியிருக்கிறார். இது சிறப்பான நிலை ஆகாது. என்றாலும் 9-ஆம் வீட்டுக்கு அதிபதியான குரு 4-ல், தன் உச்ச ராசியில் உலவுவதால் நிலம், மனை, வீடு, வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். நண்பர்கள், உறவினர்களது வருகை அதிகரிக்கும். அதனால் மன மகிழ்ச்சி கூடும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். தல யாத்திரை மேற்கொள்ளச் சந்தர்ப்பம் உண்டாகும். தாயாரிடம் அன்புடனும் பாசத்துடனும் நடந்து கொள்வீர்கள். தாயாராலும் தாய் வழி உறவினர்களால் அதிகம் நலம் ஏற்படும். 4-ஆம் இடம் வித்யா ஸ்தானமானதால் மாணவர்களுக்கு வெற்றிகள் குவியும். 4-ஆமிடம் சுக ஸ்தானம் என்பதால் சுகானுபவம் ஏற்படும். 12-ஆம் வீட்டோன் குரு 4-ல் உலவுவதால் சுபச் செலவுகள் ஏற்படும். சொத்துக்களைப் பராமரிப்பதற்காகச் செலவு செய்வீர்கள். வீடு கட்டுவதற்கு வாய்ப்பு உண்டாகும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். அலைச்சல் கூடும். அதனால் உடல் அசைதி ஏற்படும். ஜல சம்பந்தமான உபாதைகள் உண்டாகும்.  உங்களது ஆரோக்கியத்துக்காகவும், தாயாரின் நலனுக்காகவும் செலவு செய்ய வேண்டிவரும்.

குரு 4-ல் அமர்ந்து 5-ஆம் பார்வையாக 8-ஆமிடத்தைப் பார்ப்பதால் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். இன்சூரன்ஸ் மற்றும் ஆயுள் சம்பந்தமான காப்பீடு மூலம் ஆதாயம் கிடைக்கும். 7-ஆம் பார்வையாக 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் அன்றாடப் பணிகள் சீராக நடந்துவரும். மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறை இராது. பொது நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழிலுக்காகவும், மேற்படிப்புக்காகவும் சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும். 9-ஆம் பார்வையாக தன் வீடான மீனத்தை, 12-ஆமிடத்தைக் குரு பார்ப்பதால் சுபச் செலவுகள் ஏற்படும். தெய்வப் பணிகளுக்காகவும், தர்மப்பணிகளுக்காகவும் செலவு செய்ய வேண்டிவரும். வெளிநாட்டுத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலனிலும், மக்கள் நலனிலும் அக்கறை தேவைப்படும். மூத்த சகோதர, சகோதரிகளின் மூலம் பிரச்னைகள் சூழும். கர்ப்ப ஸ்திரீகள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திருக்கருக்காவூர் ஸ்ரீ கர்ப்ப ரட்சகாம்பிகையை வழிபடவும். 

இந்தக் குருப் பெயர்ச்சிக் காலத்தில் சனிபகவானுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது அவசியமாகும். சக்தியை வழிபடவும்.

ரிஷபம்:

உங்கள் ராசிக்கு 2-ஆமிடத்தில் உலவிக் கொண்டிருந்த குரு 3-ஆமிடம் மாறியிருக்கிறார். இது விசேடமானதாகாது. பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்படும். பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. புதிய துறைகளில் அதிகம் பொருளை முதலீடு செய்யலாகாது. தொழில் அதிபர்களின் முன்னேற்றம் பாதிக்கும். சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். ஜாதக பலமும் சரியில்லாதவர்களுக்குக் கண்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சளி, இருமல், மார்பு. நுரையீரல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகமாகும். சிக்கன நடவடிக்கை தேவை. நம்பியவர்களே மோசம் செய்யும் நேரமிது என்பதால் எல்லோரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது அவசியமாகும். எதிலும் அலட்சியப் போக்கு கூடாது. ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. மதிப்பும் அந்தஸ்தும் குறையும். பெண்களால் பிரச்னைகள் உண்டாகும். காரியம் தாமதமாகும். மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். காமத்தில் ஈடுபாடு அதிகமாகும். நீர் நிறைந்துள்ள இடங்களிலும் வழுக்கும் இடங்களிலும் செல்லும்போது எச்சரிக்கை தேவை.

குரு 3-ல் அமர்ந்து 5-ஆம் பார்வையாக 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் கணவன் மனைவி உறவு நிலை சீராகவே இருந்துவரும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். நல்லவர்களின் நட்புறவால் நலம் உண்டாகும். நல்லவர் அல்லாதவர்களது தொடர்பு கூடாது. 7-ஆம் பார்வையாக 9-ஆமிடத்தைப் பார்ப்பதால் தெய்வப் பணிகளுக்காகவும் தர்மப் பணிகளுக்காகவும் செலவு செய்வீர்கள். தொலைதூரத்தொடர்பு பயன்படும். தந்தையால் நலம் உண்டாகும். 9-ஆம் பார்வையாக 11-ஆமிடத்தைப் பார்ப்பதால் மூத்த சகோதர, சகோதரிகளால் நலம் உண்டாகும். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். முக்கியமான எண்ணங்கள் ஒன்றிரண்டு நிறைவேறும். 9-12-2014 முதல் 8-4-2015 வரையிலும் உள்ள காலகட்டத்தில் குரு வக்கிரமாக உலவுவதால் நலம் புரிவார். பண வரவு அதிகமாகும். நற்காரியங்களில் பங்கு கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். குடும்ப நலம் சீராகும். கொடுக்கல்-வாங்கலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு ஆதாயம் கூடும்.

வியாழக்கிழமைகளில் குருவுக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது. பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் அவர்களது ஆலோசனைகளின்படி நடப்பதன் மூலம் சங்கடங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

மிதுனம்:

உங்கள் ஜன்ம ராசியில் உலவிக்கொண்டிருந்த குரு 2-ஆமிடத்துக்கு வந்திருக்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10-ஆம் இடங்களுக்குரிய குரு 2-ல் உலவுவதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மென்மையாகப் பேசுவீர்கள். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வருமானம் அதிகமாகும். குடும்பத்தாரால் அனுகூலம் உண்டாகும். குடும்ப நல முன்னேற்றப் பணிகளில் ஈடுபடுவீர்கள். முக வசீகரம் கூடும். கண் சம்பந்தமான உபாதைகள் குறையும். ஜலப் பொருட்கள் லாபம் தரும். கடல், கப்பல், திரவம், வெண்மையான பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், மேடைப் பேச்சாளர்கள், சட்ட வல்லுனர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். செய்துவரும் தொழில் அபிவிருத்தி அடையும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய பொருட்கள் சேரும். பெண்களால் நலம் ஏற்படும்.

குரு 2-ல் அமர்ந்து 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் எதிரிகள் அடங்கிப் போவார்கள். கடன் உபத்திரவம் குறையும். 8-ஆம் இடத்தைப் பார்ப்பதால் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். பி.எஃப், இன்சூரன்ஸ் மூலம் ஆதாயம் கிடைக்கும். 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் வலுக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புக் கூடிவரும். தொழில் அதிபர்களது எண்ணம் நிறைவேறும். செய்து வரும் தொழிலை விரிவுபடுத்த வாய்ப்பு உருவாகும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். உடன் பிறந்தவர்கள், வாழ்க்கைத்துணைவர், தந்தை ஆகியோரது நலனுக்காக செலவு செய்வீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும் மதிப்பும் செல்வாக்கும் உயரும். பொருளாதாரம் சம்பந்தமான வங்கிகள், சேமிப்பு நிறுவனங்கள், கஜானாக்கள் ஆகியவற்றில் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். எந்தப் பிரச்னை என்றாலும் எளிதில் தீரும் நேரமிது.

இந்தக் குருப் பெயர்ச்சிக் காலத்தில் ராகுவின் பலம் குறைந்திருப்பதால் ராகுவுக்குப் பிரீதியாக துர்கையை வழிபடவும்.

கடகம்:

உங்கள் ராசிக்கு 12-ஆமிடத்தில் உலவிக் கொண்டிருந்த குருவானவர் ஜன்ம ராசிக்கு வந்திருக்கிறார். இது விசேடமாகாது. 6, 9-ஆம் இடங்களுக்கு அதிபதியான குரு ஜன்ம ராசியில் உலவுவதால்  உடல்நலம் பாதிக்கும். மதிப்பும் அந்தஸ்தும் குறையும். விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். எதிரிகள் இருப்பார்கள்.
அலைச்சல் அதிகமாகும். மருத்துவச் செலவுகள் கூடும். தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். சளி, இருமல், தலையில் நீர்க்கோர்த்தல் மற்றும் ஜல சம்பந்தமான நோய்நொடிகள் உண்டாகும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண அதிகம்  பாடுபட வேண்டிவரும். தாய் மாமனால் மன வருத்தம் ஏற்படும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிவரும். 9-ஆம் வீட்டோன் குரு ஜன்ம ராசியில் இருப்பதால் தர்ம குணம் மேலோங்கும் . தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அதனால் மன அமைதி கிடைக்கும். தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். ஜலப் பொருட்களால் லாபம் கிடைக்கும்.

குரு 5-ஆம் பார்வையாக 5-ஆம் இடத்தைப் பார்ப்பதால் மக்கள் நலம் சீராகும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் அளவோடு ஆதாயம் கிடைக்கும். மந்திர உபதேசம் பெற வாய்ப்பு உண்டாகும். 7-ஆம் பார்வையாக 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் கணவன் மனைவி உறவு நிலை சீராகும். தொழில் பங்குதாரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கூட்டுத் தொழிலில் வளர்ச்சியும் காணலாம். 9-ஆம் வீட்டோன் குரு 9-ஆமிடத்தைத் தன் உச்ச ராசியில் இருந்து பார்ப்பது விசேடமாகும். பாக்கியம் சேரும். கடல், ஆறு, ஏரி மற்றும் நீர் சம்பந்தமான இனங்களால் ஆதாயம் கிடைக்கும். தந்தை நலம் சீராகும். பிதுரார்ஜித சொத்துக்களைப் பெற வாய்ப்பு உண்டாகும். கோயில், குளம் என்று சுற்றி வருவீர்கள். மகான்களது ஆசிகள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று பொருள் திரட்டும் யோகம் உண்டாகும். ஆன்மிகவாதிகள், அறப்பணியாளர்கள், ஜோதிடர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். தான, தர்ம காரியங்களில் ஈடுபட வாய்ப்புக் கூடிவரும்.

குரு, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. தன்வந்தரி ஜப, ஹோமம் செய்யவும்.

சிம்மம்:

உங்கள் ராசிக்கு 11-ல் உலவிக் கொண்டிருந்த குரு 12-ஆமிடத்துக்கு வந்திருக்கிறார். இது சிறப்பானதாகாது. 5-ஆம் வீட்டோன் 12-ல் இருப்பதால் மறதி ஏற்படும். பிள்ளைகளால் செலவுகள் கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் குறையும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாகாது. ஆசைகளைக் குறைத்துக் கொண்டு, நேர்வழியில் செல்வதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றிவருவது அவசியமாகும். கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கருக்கலைவு, கருச்சிதைவு, கர்ப்பப் பை கோளாறு ஆகியவை ஏற்படக் காரணம் உண்டு. மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் தொல்லைகள் சூழும். பிற பெண்களிடம் எச்சரிக்கை தேவை. நீர் நிறைந்த இடங்களிலும், வழுக்கும் இடங்களிலும் செல்லும்போது விழிப்புடன் இருப்பது நல்லது. பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். வாழ்க்கைத்துணைவரின் நலனில் கவனம் தேவைப்படும்.

குரு 12-ல் இருந்தாலும் உங்கள் ராசிக்கு 4-ஆம் இடமான விருச்சிகத்தைப் பார்ப்பதால் நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வீடு, நிலம் வாங்குவதற்குச் செலவு செய்வீர்கள். தாய் நலம் சீராகும். சுகானுபவம் கூடும். 7-ஆம் பார்வையாக 6-ஆமிடமான மகரத்தைப் பார்ப்பதால் எதிரிகள் கட்டுக்குள் அடங்கியே இருப்பார்கள். தாய் வழி உறவினரால் நலம் உண்டாகும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். 9-ஆம் பார்வையாக 8-ஆமிடமான மீனத்தைப் பார்ப்பதால் ஆயுள் பலம் கூடும். ஆயுள் சம்பந்தமான இனங்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும். சிலர் காதல் திருமணம் செய்து கொள்வர். அதன் மூலம் குடும்பத்தில் பிரச்னை ஏற்படும். மார்பு, இதயம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.

குரு, சனி, ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது அவசியமாகும். ஜனன கால ஜாதகப்படி இந்தக் குருப் பெயர்ச்சிக் காலத்தில்யோக பலம் உள்ள தசை, புக்திகள் நடைபெறுமானால் கவலைப்பட தேவையில்லை.

கன்னி:

உங்கள் ராசிக்கு 10-ஆமிடத்தில் உலவிக் கொண்டிருந்த குரு 11-ஆமிடம் மாறி இருப்பது விசேடமாகும். 4, 7-ஆம் வீடுகளுக்கு அதிபதியான குரு வலுத்திருப்பதால் நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். வீடு கட்ட வாய்ப்புக் கூடிவரும். சுகானுபவம் உண்டாகும். தாயாராலும், தாய் வழி உறவினர்களாலும் அனுகூலம் ஏற்படும். மனத்தில் தெளிவு பிறக்கும். நல்லவர்களது தொடர்பால் நலம் பல உண்டாகும். ஞான மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். திருமணம், சீமந்தம், காது குத்தல், உபநயனம், கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்கள் நிகழும். மகப்பேறும், மக்களால் பாக்கியமும் உண்டாகும். பொன்னும் பொருளும் ஏராளமாகச் சேரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். கடல், கப்பல், ஏரி, குளம், வெண்மை நிறப்பொருட்கள், திரவப் பொருட்கள், ஆகியவை லாபம் தரும். மன மகிழ்ச்சி பெருகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். நல்லவர்கள் உங்களுக்கு பக்கபலமாய் இருப்பார்கள்.

குரு 5-ஆம் பார்வையாக 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் மனத்துணிவு கூடும். போட்டிகளில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். 7-ஆம் பார்வையாக 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடிவரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். மகன் அல்லது மகளுக்கு சுப காரியம் நிகழும். வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. மந்திர உபதேசம் பெறுவீர்கள். புத்திக்கூர்மை வெளிப்படும். மாணவர்களது நிலை உயரும். குரு 9-ஆம் பார்வையாக 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் உருவாகும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் அனுகூலமான திருப்பம் உண்டாகும். நல்ல தீர்ப்பும் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் கூடும். பிணக்குகள் விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனம் ஒருமித்து வாழச் சந்தர்ப்பம் கூடிவரும். சிலருக்கு மறுமணம் ஆகும். ஆசை, அபிலாஷைகள் அதிகரிக்கும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். உற்சாகமாக நடைபோடுவீர்கள்.

இந்தக் குருப் பெயர்ச்சிக்காலம் முழுவதும் ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் நாக வழிபாடு அவசியமாகும்.

துலாம்:

உங்கள் ராசிக்கு 9-ல் உலவிக்கொண்டிருந்த குரு 10-ஆமிடம் மாறுகிறார். கோசாரப்படி குரு 10-ல் உலவுவது சிறப்பானதாகாது. தொழில் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் நலம் பாதிக்கும். வியாபாரிகளும் உத்தியோகஸ்தர்களும் பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். வருமானம் குறைந்து செலவுகள் அதிகமாகும். தேவைகளைச் சமாளிக்கக் கடன்பட நேரும். மதிப்பும் அந்தஸ்தும் குறையும். விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். எதிலும் முழுமையான பயனைப் பெற முடியாமல் போகும். மனத்தில் தைரியம் குறையும். மறதியால் அவதி உண்டாகும். மக்களின் நலனில் கவனம் தேவைப்படும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மத போதகர்கள் ஆகியோர் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றிவருவது நல்லது.  நுரையீரல், கால் மூட்டு தோள்பட்டை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் தொல்லைகள் சூழும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

குரு 10-ல் அமர்ந்து 5-ஆம் பார்வையாக 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் குடும்ப நலம் சீராகும். பண வரவு சற்று கூடும். திறம்பட பேசுவீர்கள். என்றாலும் சில நேரங்களில் உண்மைக்குப் புறம்பாகப் பேச வேண்டிவரும். மதாபிமானம் குறையும். குரு 7-ஆம் பார்வையாக 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். புதிய சொத்துக்கள் சிலருக்கு சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பழைய நண்பர்களது தொடர்பால் நலம் பெறுவீர்கள். குரு 9-ஆம் பார்வையாக 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் எதிர்ப்புக்கள் குறையும். கடன் உபத்திரவம் கட்டுக்குள் அடங்கி இருக்கும். கடன் கொடுத்தவர்களால் உங்களுக்கு எந்தவித பாதிப்பும் உண்டாகாது. த்யானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு பிறக்கும். இயந்திரப் பணியாளர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பயணத்தால் அனுகூலமிராது. போக்குவரத்துச் சாதனங்களில் தொழில் புரிபவர்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியமாகும்.

குரு, சனி, ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது.

விருச்சிகம்:

உங்கள் ராசிக்கு 2, 5-ஆம் இடங்களுக்கு அதிபதியான குரு 9-ஆமிடம் மாறுகிறார். கோசார சாஸ்திரப்படி குரு 9-ல் உலவுவதென்பது மகா யோகமாகும். இதுவரையிலும் அஷ்டம குருவால் பட்ட வேதனைகளும் சோதனைகளும் விலகும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். தந்தையாலும் மக்களாலும் உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும். புனித தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு கூடும். பிதுரார்ஜித சொத்துக்கள் சேரும். பொன்னும் பொருளும் சேரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவுவார்கள். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். ஜலப்பொருட்கள் ஆதாயம் கொண்டுவரும். வெளிநாடு செல்ல வாய்ப்புக் கூடிவரும். மாணவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். மகான்கள், யோகிகள், சித்தர்கள் ஆகியோரது ஆசிகள் கிடைக்கும். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாகும்.

9-ல் உலவும் குரு 5-ஆம் பார்வையாக உங்கள் ஜன்ம ராசியைப் பார்ப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் சேரும். தர்ம குணம் மேலோங்கும். குரு 7-ஆம் பார்வையாக 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். மனோபலம் கூடும். போட்டிகளிலும் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். 9-ஆம் பார்வையாக தன் வீடான 5-ஆம் இடத்தைப் பார்ப்பதால் மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். மந்திர, தந்திர, யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். அறிவும் ஆற்றலும் வெளிப்படும். சிந்தனை திறன் கூடும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் வளர்ச்சி காண்பார்கள். பொழுதுபோக்கு இனங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு கூடும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிகழும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொள்வீர்கள்.

இந்தக் குருப் பெயர்ச்சிக்காலம் முழுவதும் சனியின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சனிப் பிரீதி செய்வது அவசியமாகும்.

தனுசு:

ராசிநாதன் குரு 7-ஆமிடத்திலிருந்து 8-ஆம் வீட்டுக்கு மாறியிருக்கிறார். இது சிறப்பான மாற்றமாகாது. அஷ்டம குருவின் காலமிது என்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. உங்கள் ராசிக்கும் 4-ஆமிடத்துக்கும் அதிபதியான குரு 8-ல் மறைவதால் உடல்நலம் பாதிக்கும். மதிப்பும் அந்தஸ்தும் குறையும். பிறரால் அவமானப்பட நேரலாம். மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். சுகபங்கம் உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். பொருளாதார நெருக்கடி ஏற்படும். கடன் வாங்க வேண்டிய நிலை உண்டாகும். ஜல கண்டம் ஏற்படும். நீர்நிலைகள் மற்றும் வழுக்கும் இடங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. மறைமுக நோய் நொடிகள் உண்டாகும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. பெரியவர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது அதிருப்திக்கு ஆளாக நேரலாம். உடன்பணிபுரிபவர்களால் பிரச்னைகள் சூழும். சுப காரியங்கள் நிகழத் தடைகளும் குறுக்கீடுகளும் ஏற்படும். உடன்பிறந்தவர்களாலும், தந்தையாலும் மக்களாலும் மன அமைதி குறையும்.

குரு 8-ல் அமர்ந்து 5-ஆம் பார்வையாக 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். தூக்கம் கெடும். 7-ஆம் பார்வையாக 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் பண வரவு சற்று கூடும். குடும்ப நலம் சீராகும். பேச்சில் திறமை வெளிப்படும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓரளவு உதவுவார்கள். குரு 9-ஆம் பார்வையாக, தன் வீடான மீனத்தைப் பார்ப்பதால் சிலருக்கு சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தாயாராலும் தாய் வழிஉறவினர்களாலும் நலம் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். பொருளாதாரம் சம்பந்தமான இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியமாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆன்மிகவாதிகளுக்கும் முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் இருந்துவரும். சிறு தவறு செய்தாலும் அதிகம் பாதிப்பு உண்டாகும். தொழில் அதிபர்கள் அகலக்கால் வைக்க வேண்டாம். புதிய துறைகளில் ஈடுபட இந்த நேரம் சிறப்பானதாகாது. அன்றாடப் பணிகளிலும் கூட அதிகம் அக்கறை தேவை.

குருவுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது மிகவும் அவசியமாகும். பெரியவர்களின் ஆலோசனைகளை மதித்து ஏற்று, அதன்படி செயல்படுவதன் மூலம் சங்கடங்களை குறைத்துக் கொள்ளலாம்.

மகரம்:

உங்கள் ராசிக்கு 6-ஆமிடத்தில் உலவிக்கொண்டிருந்த குரு 7-ஆமிடம் மாறியிருக்கிறார். இது விசேடமானதாகும்.
நல்லவர்களின் தொடர்பு நலம் கூட்டும். எதிர்ப்புக்கள் விலகும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். திருமணம் ஆனவர்களுக்கு இல்லறம் நல்லறமாய்த் திகழும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். உபரி வருமானம் கிடைக்கும். கூட்டாகத் தொழில் புரிபவர்களுக்கு லாபம் கூடும். கூட்டாளிகள் அதிகம் ஒத்துழைப்புத் தருவார்கள். கடல் பயணம் லாபம் தரும். மகனாலும் மகளாலும் உங்களுக்குப் பெருமை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்பவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். பிறரிடம் சுமுகமாகப் பழகி உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அறிவாற்றல் பளிச்சிடும். புதிய முயற்சிகள் கைகூடும். தொழில் அதிபர்களது நோக்கம் நிறைவேறும். மாணவர்களது நிலை உயரும்.

குரு 7-ல் அமர்ந்து 5-ஆம் பார்வையாக 11-ஆமிடத்தைப் பார்ப்பதால் பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். மூத்த சகோதர சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாளாக நினைத்திருந்த காரியங்கள் இப்போது நிறைவேறும். குரு 7-ஆம் பார்வையாக ஜன்ம ராசியைப் பார்ப்பதால் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உடல் ஆரோக்கியம் சீர்பெறும். வாழ்க்கை வசதிகள் பெருகும். நற்குணம் கூடும். நற்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். குரு 9-ஆம் பார்வையாக 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் போட்டிகளிலும், பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். மனோபலம் கூடும். இளைய சகோதர, சகோதரிகளால் நலம் உண்டாகும். பொதுவாக உடன்பிறந்தவர்களுக்கு குருவருளால் நலம் உண்டாவதுடன், அவர்களால் உங்களுக்கும் நன்மைகள் பெருகும். முயற்சி வீண்போகாது. வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். கடல், கப்பல், மற்றும் நீர் சம்பந்தப்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

கேதுவுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. கணபதி ஜப, ஹோமம் செய்யவும்.

கும்பம்:

உங்கள் ராசிக்கு 2, 11-ஆம் இடங்களுக்குரிய குரு 6-ஆம் இடம் மாறி இருக்கிறார். கோசாரப்படி 6-ஆமிடத்தில் குரு உலவுவது சிறப்பாகாது. பொருளாதார நிலையில் வளர்ச்சி காண அரும்பாடுபட வேண்டிவரும். செலவுகள் அதிகமாகும். முக்கியத் தேவைகளைச் சமாளிக்கக் கடன்பட வேண்டிவரும். மன நிம்மதி குறையும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டிவரும். எதிர்ப்புக்கள் அதிகமாகும். மக்களால் பிரச்னைகள் சூழும். பெற்றோருக்கும் மக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கண், வாய், பல், முகம், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். மூத்த சகோதர, சகோதரிகளால் மன அமைதிகுறையும். என்னதான் உழைத்தாலும் அதற்கான முழுமையான பயனைப் பெறமுடியாமல் போகும். வீண்வம்பு, சண்டை, சச்சரவுகளில் ஈடுபாடு உண்டாகும். நல்லவர்களின் சாபத்துக்கு ஆளாக நேரலாம்; எச்சரிக்கை தேவை. பெரியவர்களிடம் பணிவன்போடு பழகுவது அவசியமாகும். உத்தியோகஸ்தர்களுக்குச் சரிவு உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும்.

குரு 6-ல் அமர்ந்து 5-ஆம் பார்வையாக 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் அன்றாடப்பணிகள் சீராகவே நடந்துவரும். 7-ஆம் பார்வையாக 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் செலவுகள் கூடுமென்றாலும் பெரும்பாலும் அவை சுபச் செலவுகளாக இருக்கும். 9-ஆம் பார்வையாக 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் குடும்ப நலம் கவனிப்பின் பேரில் சீராகும். பண வரவு சற்று கூடும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. நண்பர்களே கூட விரோதிகளாவார்கள் என்பதால் யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. பேச்சில் நிதானம் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். பயணம் சம்பந்தப்பட்ட இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் சங்கடங்களுக்கு ஆளாக வேண்டிவரும். குறுக்கு வழிகளில் சென்றால் தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும். பொருளாதார குற்றங்களில் சிலர் சிக்கிக் கொள்ள நேரும்; எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். தொழில் அதிபர்கள் புதிய துறைகளில் அதிகம் முதலீடு செய்ய இந்த நேரம் சிறப்பானதாகாது. ஆசைகளைக் குறைத்துக் கொண்டு, நேர்வழியில் சென்றால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். ஜாதகப்படி தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்பட தேவையில்லை. ஜாதக பலமும் இல்லாதவர்கள் இறைவழிபாட்டிலும் கிரக வழிபாட்டிலும் முழு நம்பிக்கையோடு ஈடுபடுவதன் மூலம் அமைதி காணலாம்.

குருபகவானுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது அவசியமாகும். அன்னை பராசக்தியை வழிபடவும்.

மீனம்:

உங்கள் ஜன்ம ராசிக்கும் 10-ஆமிடத்துக்கும் அதிபதியான குரு 5-ஆமிடம் மாறியிருக்கிறார். குரு தன் உச்ச ராசியான கடகத்தில் உலவுவது விசேடமாகும். பிரசித்தி யோகம் உண்டாகும். பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணிய பலன்களை இப்போது பெறுவீர்கள். எண்ணங்கள் எல்லாம் எளிதில் நிறைவேறும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவி புரிவார்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். ஸ்பெகுலேஷன் இனங்களால் ஆதாயம் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். மனத்தில் தெளிவு பிறக்கும். சிந்தனா சக்தி கூடும். மந்திர, தந்திர, யந்திர சாஸ்த்ரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். மாணவர்களது நிலை உயரும். உத்தியோகஸ்தர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான போக்கு தென்படும். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். மதாபிமானம் கூடும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிட்டும். ஹோம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில் அதிபர்களுக்கு ஆதாயம் பெருகும். புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புக் கூடிவரும். மக்களால் பெற்றோருக்கும் பெற்றோரால் மக்களுக்கும் அனுகூலம் உண்டாகும்.

குரு 5-ல் அமர்ந்து 5-ஆம் பார்வையாக 9-ஆமிடத்தைப் பார்ப்பதால் பாக்கியங்கள் கூடும். புத்திர, பெளத்திர பாக்கியம் உண்டாகும். தொலைதூரத் தொடர்புகள் பயன்படும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. 7-ஆம் பார்வையாக 11-ஆமிடத்தைப் பார்ப்பதால் பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். நீண்ட காலமாக நினைத்திருந்த காரியம் ஒன்று இப்போது நிறைவேறும். மூத்த சகோதர, சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். குரு 9-ஆம் பார்வையாக உங்கள் ஜன்ம ராசியைப் பார்ப்பது விசேடமாகும். ராசிநாதன் ராசியைப் பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் சீராகும். மற்றவர்கள் உங்களைப் போற்றிப் புகழுவார்கள். சுயபலம் கூடும். தெய்வானுக்கிரகம் உண்டாகும். நற்காரியங்களில் ஈடுபாடு  அதிகரிக்கும். நற்குணம் வெளிப்படும். சிந்தித்துச் செயல்படுவீர்கள். அதனால் பயன் கூடப் பெறுவீர்கள். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு அதிகமாகும். குடும்பத்தில் அமைதி காணலாம். குரு உபதேசம் கிடைக்கும். குருவருளால் திருவருளைப் பெறுவீர்கள்.

விநாயகருக்கும் துர்கைக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வழிபடவும். சனிப் பிரீதி செய்து கொள்ளவும்.