Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்வை அளித்த பாபா!

ஷீர்டி நாதா சரணம்!

- நந்தி அடிகள்

காணவல் லார்க்கு அவன் கண்ணின் மணிஒக்கும்
காணவல் லார்க்குக் கடலின் அமுதுஒக்கும்
பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர் நந்தி
ஆணவல் லார்க்கே அவன் துணை யாமே.

- திருமந்திரம்

பொருள்: பேரன்புடன் கூடிய பக்தியோடு தன்னை நாடும் பக்தர்களுக்கு, அவர்களின் கண்ணின் மணி போல் நெருங்கி அருள்வார் ஈசன். திருப்பாற்கடலில் விளைந்த அமுதத்துக்கு நிகரானவனாகவும் நந்தி என்ற பெயரைக் கொண்டவனாகவும் திகழும் ஈசன், அடியவருக்கு உறுதுணையாகத் திகழ்வான்.

சேஷாசலம் - சுசீலா தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் வேண்டாத தெய்வம் இல்லை. சிவ பக்தையான சுசீலா, வீட்டுக்கு அருகில் உள்ள சிவாலயத்தில் தினமும் விளக்கேற்றி வழிபட்டு வந்தாள்.

வேறொரு திருமணம் செய்து கொள்ளும்படி சேஷா சலத்தை அவருடைய உறவினர்கள் வலியுறுத்தினர். ஆனால், அவர் மறுத்து விட்டார்.

ஒருநாள்... சுசீலாவின் சகோதரர், அவளிடம் ஷீர்டி பாபாவின் சிறிய புகைப்படம் ஒன்றைக் கொடுத்து, 'தினமும் இவரை வழிபடு; குருவருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்’ என்றார். இதையடுத்து, பாபாவை தான் வணங்கும் சிவபெருமானாகவே எண்ணி தினமும் பூஜித்து வந்தாள் சுசீலா.

இரண்டு வருடங்கள் ஓடிய நிலையில் (1954-ஆம் வருடம்) கருவுற்ற சுசீலாவுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சாயிராம் என்றே பெயரிட்டனர். ஸ்ரீசாயிபாபாவின் பக்தர்களாகிவிட்ட அந்தத் தம்பதி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஷீர்டி சென்று துவாரகாமயியை தரிசித்து வந்தனர்.

இந்த நிலையில் நெஞ்சை உலுக்கும் ஒரு சம்பவம்! சுசீலாவின் சகோதரியின் மகன், இவளது வீட்டில் தங்கி படித்து வந்தான். ஒருநாள் அவன், ''எனக்கு திருமணம் செய்து வையுங்கள்'' என்று கேட்க, ''படிப்பே முடியலை; அதற்குள் என்ன அவசரம்?'' என்று அவனுடைய பெற்றோர் கடிந்து கொண்டனர். இதில் மனம் வெறுத்தவன், எலி பாஷாணத்தைத் தின்று விட்டான். கவலைக்கிடமான நிலையில் அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். இது ஒருபுறமிருக்க... சுசீலாதான் தன் மகனுக்கு விஷம் கொடுத்து விட்டாள் என்று பழி சுமத்தினாள் சகோதரி. சுசீலா நிலைகுலைந்து போனாள். மருத்துவர்கள், ''48 மணி நேரம் கழித்தே பையனின் நிலை குறித்து தெளிவாகச் சொல்ல முடியும்'' என்று  சொல்லி விட... சுசீலா தவித்தாள்!

வீட்டுக்கு ஓடோடி வந்தாள். பாபாவின் படத்துக்கு முன் நின்று, ''சகோதரியின் மகனைக் காப்பாற்றுங்கள்; வீண் பழியில் இருந்து நான் விடுபட அருளுங்கள்'' என்று கதறினாள் சுசீலா. அப்போது, வாயிற்கதவு தட்டப்படும் சத்தம். முகத்தைத் துடைத்துக் கொண்டு ஓடோடி வந்து கதவைத் திறந்தவளுக்கு அதிர்ச்சி. வாசலில் நின்றிருந்த சகோதரி, இவளை கட்டியணைத்து

அழ ஆரம்பிக்க, சுசீலா ஆடிப்போனாள்! 'ஒருவேளை... அந்தச் சிறுவனுக்கு ஏதேனும்... என் பாபாவே!’ - மனது படபடத்தது அவளுக்கு.

ஆனால்... ''என் மகன் பிழைச்சிட்டான். நாங்க கண்டிச்சதுல மனசு வெறுத்து பாஷாணத்தை விழுங்கிட்டதா சொன்னான். இது தெரியாம உன்னை தப்பா நினைச்சிட்டேனே... என்னை மன்னிச்சிரு'' என்று அரற்றினாள் சகோதரி.  வீண்பழி நீங்கியதால் மகிழ்ந்த சுசீலா, பாபாவுக்கு மனதார நன்றி சொல்லி வணங்கினாள்.

வருடங்கள் ஓடின! சுசீலாவுக்கு பார்வைத் திறன் படிப்படியாகக் குறைந்து கொண்டு வந்தது. வழக்கம்போல், ஸ்ரீசாயிநாதனை பிரார்த் தித்துக் கொண்டாள் சுசீலா. ஒரு நாள் இரவு அவளின் கனவில் வந்தார் பாபா. ''பார்வைக் குறைபாடு, உனது பூர்வ ஜன்ம வினையால் ஏற்பட்ட துன்பம். உனக்கு பார்வை தருகிறேன். ஆனால், முன் ஜன்ம வினையை அடுத்த பிறவியில் நீ அனுபவிக்க நேரிடும்... சம்மதமா?'' என்று அவர் கேட்க, கனவு கலைந்தது. எதுவும் புரியாத நிலையில் தவித்து மருகினாள் சுசீலா. ஆனாலும் அடுத்த சில நாட்களில் ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பினாள்.

ஒருநாள்... மாடியில் படுத்திருந்த சுசீலாவின் கண்களை, எங்கிருந்தோ பறந்து வந்த வெளவால் ஒன்று கொத்தியது. வலியில் கதறி அழுதே விட்டாள் சுசீலா. கண்களில் ரத்தம் வழிய, மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். ''பாவம் இவள்... ஆபரேஷன் மூலம் பார்வையைத் தெளிவாக்கினோம். ஆனால், இப்போது நிகழ்ந்த விபத்தால், நுண்ணிய நரம்புகள் பழுதடைந்து விட்டன. இனி, பார்வை கிடைக்குமா என்று உறுதி யாகச் சொல்ல முடியவில்லை'' என்று மருத்துவர் சொல்ல, வீடே சோகத்தில் ஆழ்ந்தது.

மூன்றாம் நாள்... மீண்டும் அவளின் கனவில் பாபா தோன்றினார். சுசீலாவின் கண் கட்டினை அவிழ்த்து, அவளின் கண்களில் சிறிது தண்ணீரை ஊற்றியவர், ''ஓம் சாயி, ஸ்ரீசாயி, ஜெய ஜெய சாயி என்று சொல்லிக் கொண்டே இரு'' என்றார். அப்படியே செய்தாள் சுசீலா. பிறகு, தன்னைப் பார்க்கும்படி பாபா கட்டளையிட, மெள்ள கண் திறந்தாள் சுசீலா. எதிரில் பாபாவை மட்டுமா அவள் தரிசித்தாள்..? சாட்சாத் சிவபெருமானே நிற்பதைக் கண்டாள்! ''என்ன கண் தெரியுதா?'' என்று பாபா கேட்க, கனவு கலைந்தது!

மறுநாள், கண் கட்டு அவிழ்க்கப்பட்டது. ''டாக்டர்... எனக்கு எல்லாமே நல்லா தெரியுது டாக்டர்!'' என்று சந்தோஷத்தில் கூச்சலிட்டாள் சுசீலா. ''உண்மையில் இது அதிசயம்தான்! நீ வணங்கும் பாபா உன்னை கைவிடவில்லை'' என்று நெகிழ்ந்தார் மருத்துவர்.

சுசீலாவுக்குப் புரிந்தது... 'பார்வையும் கிடைக்க வேண்டும்; முன் ஜன்ம வினையும் முடிவுக்கு வர வேண்டும். இதன் பொருட்டு பாபா செய்த அருளாடலே எல்லாம்’ என்பதைத் தெரிந்து கொண்டாள். 'நீ என்னை நோக்கினால் நான் உன்னை நோக்குவேன்.’ சாயிபாபாவின் வாக்கு மனதில் ஒலிக்க, மனதார அவருக்கு நன்றி சொன்னாள்!