Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேதுபந்தன திருக்கதைகள்...

தசாவதார திருத்தலங்கள்

தி.தெய்வநாயகம்

வால்மீகி கிரி ஸம்பூதா ராம ஸாகர காமினீ
புநாது புவநம் புண்யா ராமாயண மஹாநதீ

வால்மீகி என்ற மலையில் தோன்றி, ஸ்ரீராமன் என்ற சமுத்திரத்தை நோக்கி ஓடும் ஒரு நதி உண்டு; அதற்கு ராமாயணம் என்று பெயர். அது, ஒட்டுமொத்த பூவுலகையும் புனிதப்படுத்தும் ஜீவ நதியாகும்.

ஞானநூல்கள் பலவும் புண்ணிய நதிகளில் குளித்தால் பாவம் தீரும் என்று நமக்குப் போதிக்கின்றன. ராமாயணம் எனும் இந்த நதியைப் பார்த்தாலும், தொட்டாலும், படித்துப் பருகினாலும்... பாவங்கள் விலகும்; புண்ணியங்கள் பெருகும். அறியாமை நீங்கும்; உள்ளதை உள்ளபடி அறியும் ஆற்றல் பிறக்கும்.

வால்மீகி ராமாயணம் ஒரு பெரிய நதியென்றால்... அந்த நதியால் நிரம்பும் புனல்களும், அந்த நதியோடு சங்கமிக்கும் கிளை நதிகளும் ஏராளம்!

ஆமாம்! வால்மீகி ராமாயணத்தை அடியற்றியும், ஸ்ரீராம கதைக்கு சிறப்புச் சேர்க்கும் எண்ணத்துடன் மூலநூலில் சொல்லப்படாத சம்பவங்களை சேர்த்துச் சொல்லும் நூல்களும், செவிவழிக் கதைகளுமே ஞானப் புனல்களாகவும் ராமாயணம் எனும் பெருநதியின் கிளை ஆறுகளாகவும் திகழ்கின்றன.

சேதுபந்தனம் தொடர்பாகவும் அப்படிச் சில கதைகள் உண்டு.

ஸ்ரீராமன் கடலில் பாலம் அமைக்க முடிவு செய்ததும், வானர வீரர்கள் பல்வேறு திசைகளுக்கும் சென்று பாறைகளையும் பெரிய பெரிய மலைகளையும் கொண்டு வந்தார்கள். வீர அனுமனும் வடதிசை நோக்கிப் பயணித்தார். அங்கே மிக அற்புதமான ஒரு மலையைக் கண்டார். அதை அடியோடு பெயர்த்தெடுக்க முயற்சித்தார். ஆனால், அந்த மலை சற்றும் அசைந்துகொடுக்கவில்லை.

மலையை வணங்கிய அனுமன், 'மலையரசனே, தங்களின் எடையை இலகுவாக்கி, ஸ்ரீராம பணிக்கு உதவ வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். அந்த மலையும் 'ஸ்ரீராம தரிசனம் நிச்சயம் கிடைக்கும் என்றால், எனது பாரத்தை இலகுவாக்கிக் கொள்கிறேன்’ என்றது. மிக சந்தோஷத்துடன் மலையைப் பெயர்த்தெடுத்து வந்தார் அனுமன். வழியில் மற்றொரு வானர வீரனைக் கண்டார். அவன் அங்கு நிற்பதற்கான காரணத்தை விசாரித்தபோது, 'நான் செல்வதற்குள் சேதுபந்தன வேலைகள் நிறைவுற்றுவிட்டன. எனவே, நான் எடுத்துச் சென்ற குன்றினை மீண்டும் இங்கே நிலை நிறுத்த வந்தேன்’ என்றான்.

எனவே, அனுமனும் தான் எடுத்து வந்த மலையை விரஜாபூமி எனும் இடத்தில் நிலைநிறுத்தினார். சேதுபந்தன திருப் பணிக்கு பயன்படுத்த முடியவில்லை என்றா லும், மலையின் ஆசையை ஸ்ரீராமனிடம் தெரிவிப்பதாக கூறிச் சென்றார்.

ஸ்ரீராமனைத் தரிசித்து மலையின் விருப்பத்தை அவரிடம் கூறினார். உடனே ஸ்ரீராமன், 'ஆஞ்சநேயா வருந்தற்க...

மலையின் விருப்பம் துவாபர யுகத்தில் நிறைவேறும்’ என்றருளினார். அதன்படியே நடந்தது. துவாபர யுகத்தில் கோவர்த்தன கிரியாக, பகவானின் விரலால் தாங்கும் பாக்கியம் பெற்றது அந்த மலை.

இன்னுமொரு திருக்கதை உண்டு.

சேதுபந்தன திருப்பணியின்போது வானர வீரர்கள் கொண்டு வரும் பாறைகள், மலைகளை எல்லாம் கடலில் வீசும் பணி நளன், நீலன் எனும் இரண்டு வானர வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. லட்சுமணனுக்குத் திகைப்பு! அவர் ஸ்ரீராமனிடம் சென்று, 'வயதிலும் அனுபவத்திலும் சிறியவர்களான இவர்களிடம் இந்தப் பணியை ஒப்படைக்கக் காரணம் என்ன?’ என்று கேட்டார். 'அதற்கான காரணம் அனுமனுக்குத் தெரியும். அவரிடம் கேள்’ என்றார் ஸ்ரீராமன்.

அனுமனிடம் லட்சுமணன் விசாரிக்க, அவர் காரணக் கதையை விளக்கினார்.

சுதீட்சணர் என்றொரு முனிவர்; சிறந்த விஷ்ணு பக்தர். தினமும் சாளக்ராமங்களை வைத்து பூஜித்து வந்தார். ஒருநாள், சாளக்ராமங்கள் காணாமல் போயின. எனவே, முனிவர் அடுத்தடுத்த நாட்களில் இறைவனை மானசீகமாகவே பூஜித்து வந்தார். இடையில் ஒருநாள், தண்ணீர் எடுப்பதற்காக அருகிலிருந்த ஏரிக்குச் சென்றார். ஏரி வறண்டு கிடந்தது என்றாலும், அதன்  மத்தியில் ஒரு பள்ளத் தில் சிறிது நீர் தேங்கியிருந்தது.

முனிவர், தமது பானையில் நீர் சேகரித்தபோது, நீருடன் சேர்ந்து இரண்டு சாளக்ராமங்களும் பானைக்குள் வந்து சேர்ந்தன. அவை எப்படி அங்கு வந்தன என்பது முனிவருக்குப் புரியவில்லை. திகைப்பு நீங்காமல், சாளக்ராமத்தை எடுத்து வந்து பூஜையைத் தொடர்ந்தார். ஒருநாள் அவர் தியானத்தில் இருந்தபோது, ஆஸ்ரம குடிலுக்குள் பொருட்கள் உருளும் சத்தம்.

முனிவர் சென்று பார்த்தபோது, இரண்டு குரங்குகள் அட்டகாசம் செய்து கொண்டிருந்தன. அப்போதுதான், சாளக்ராமங்கள் காணாமல் போனதற்கு அந்தக் குரங்குகள்தான் காரணம் என்பது அவருக்குத் தெரிய வந்தது. என்றாலும், ஐந்தறிவு ஜீவன்களான குரங்குகள் மீது அவருக்கு கோபம் வரவில்லை. ஆனாலும், குரங்குகள் மீண்டும் சாளக்ராமங்களை எடுத்துச் சென்று வேறு ஏதேனும் நீர்நிலைகளில் போட்டுவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையும் அவருக்குள் இருந்தது. இந்த நிலையில், மீண்டும் அந்த குரங்குகள் ஆஸ்ரமத்துக்குள் புகுந்துவிட... வேறு வழியின்றி ஒரு சாபம் கொடுத்தார் முனிவர். மிக சாமர்த்தியமான சாபம் அது!

'நீங்கள் எதை நீரில் போட்டாலும், அது மூழ்காமல் மிதக்கக்கடவது!’ என்பதே முனிவரின் சாபம். இதனால் குரங்குகளுக்கு பாதகம் இல்லை. சாளக்ராமங்களுக்கும் இனி ஆபத்து இல்லை!

இப்படி முனிவரிடம் சாபம் பெற்ற வானரர்களே நளனும், நீலனும். சாபத்தின்படி அவர்கள் எதை நீரில் போட்டாலும் மூழ்காது என்பதால், பாறைகளையும் மலைகளையும் கடலில் போடும் பணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று விவரித்து முடித்தார் அனுமன்!

அணில்பிள்ளை கதையும் உண்டு. சேதுபந்தன பணி நடந்துகொண்டிருந்தபோது, அணில் ஒன்று கடற்கரை நீரில் உடலை நனைப்பதும், அப்படியே ஓடி வந்து மணலில் உருண்டுபுரள்வதும், பிறகு ஓடிச்சென்று பாலத்தின் மீது ஏறி உடம்பை உதறுவதுமாக இருந்தது. இதைக் கவனித்த ஸ்ரீராமன் அந்த அணிலைப் பிடித்துக்கொண்டார். அது அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என விசாரித்தபோது, 'கடல் நீரில் உடலை நனைத்துவிட்டு வந்து, மணற்பரப்பில் புரண்டால் மணல் என் உடம்பில் ஒட்டிக்கொள்ளும். அதைப் பாலத்தின் மீது உதறிவிட்டு வருகிறேன். பாறை இடுக்குகளில் மணலும் சேர்ந்தால் பாலம் இறுகும் அல்லவா? ஏதோ... சேதுபந்தன வேலை விரைவில் முடிய என்னால் ஆன உதவி'' என்றது அணில். நெக்குருகிப் போனார் ஸ்ரீராமன்.

அந்தச் சின்ன அணிலின் அன்புக்கு நன்றி செலுத்தும் விதமாக... அதன் பக்தியை அங்கீகரிக்கும் விதமாக தனது மூன்று விரல்களால் அணிலின் முதுகில் தடவிக்கொடுத்தார் ஸ்ரீராமர். அவரின் விரல் தடங்களே அணில்பிள்ளையின் முதுகில் உள்ள மூன்று கோடுகள் என்றொரு கதையையும் சொல்வார்கள்.

எது எப்படியோ... இந்தக் கதைகள் அனைத்தும் ஸ்ரீராம கதைக்குப் புகழ் சேர்ப்பதாகவே உள்ளன. இதே போன்றுதான் திருத்தலங்களும், அவற்றின் புராணங்களும் ஸ்ரீராமன் எனும் அவதார புருஷனின் அளப்பரிய மகிமையை விளக்கும் சான்றுகளாகத் திகழ்கின்றன.

திருப்புல்லாணி எனும் க்ஷேத்திரத்தில் தரப்படும் பால் பாயச நைவேத்தியத்துக்கு அதிக விசேஷம் உண்டு. அந்த விசேஷத்துக்கு காரணம் என்ன தெரியுமா?

தசரதர் பிள்ளை இல்லாமல் தவித்த காலத்தில், எண்ணற்ற தலங்களைத் தரிசித்து வந்தார். அப்படி அவர் இந்தத் தலத்துக்கு வந்தபோது, புத்திர பாக்கியம் பெறும் வரத்துக்கான மூல மந்திரம் அவருக்கு இங்கே உபதேசிக்கப்பட்டது. அதன்படியே அவர் புத்திர காமேஷ்டி யாகத்தை நடத்தினார்.யாக முடிவில் வேள்வித் தீயில் இருந்து அமிர்த பாயசம் கிடைக்க, அதை தம் தேவியர் மூவருக்கும் பருகக் கொடுத் தார். அதன் பலனாகவே ஸ்ரீராமனும் அவர் சகோதரர்களும் பிறந்தனர். இதையட்டியே இந்தத் தலத்திலும் பெருமாளுக்கு, பால் பாயசம் விசேஷ நைவேத்தியம் ஆனது.

இந்தத் தலத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ள ரத்னாகர (கடல்) தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீஆதி ஜெகந்நாதர் ஆலயத்துக்குச் சென்று, பெருமாளுக்கு துளசி சார்த்தி, பால் பாயசம் நைவேத் தியம் செய்து வழிபட, அனைத்து நலன்களும் உண்டாகும்!