Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்புகழ் பரப்பிய வள்ளிமலை ஸ்வாமிகள்!

 
திருவடி தரிசனம்!
 

மிழுக்கு அணி சேர்ப்பவை இலக்கியங்கள். குறிப்பாக பக்தி இலக்கியங்கள்! இவையே இந்த மண்ணின் பக்தி நெறியை காலங்காலமாகப் பாதுகாத்து, உலகெங்கும் பரப்பி வந்திருக்கின்றன. தேவார- திருவாசகங்களும், திருமுறைகளும், நாலாயிர திவ்யப் பிரபந்தமும் போன்று, பக்தி இலக்கியத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது திருப்புகழ். கி.பி.15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரால், முருகப்பெருமானது தலங்கள் தோறும் சென்று பாடப்பட்ட, சந்த நயம் மிகுந்த தமிழ்ப் பாக்கள் திருப்புகழில் உண்டு!

இத்தகு பெருமை வாய்ந்த திருப்புகழ் பாடல்களைத் தொகுத்து, அவற்றை மீண்டும் பரப்பிய பெருமை ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகளைச் சாரும். அதனால் திருப்புகழ் ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டார்.

வள்ளிமலை! சொன்னதுமே ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகளின் பெயரும் நினைவுக்கு வரும். கடந்த நூற்றாண்டு கண்ட மகான். ஞானத்தால், திருப்புகழால் ஸித்தியடைந்தவர்! இவருடைய சமாதி ஆலயம் இருப்பது வள்ளிமலையில்தான். இவர் வள்ளிமலையை அடைந்து தவ வாழ்வு மேற்கொண்டதற்கு காரணமும் உண்டு. அது - முருகப் பெருமான் தொடர்புடையது!

தொண்டை மண்டலத்தில் சிறப்புறத் திகழும் தலமான வள்ளிமலை, வேலூர் - சோளிங்கர் சாலையில், வேலூரில் இருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் உள்ளது.

காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி, சோளிங்கர்-திருத்தணி செல்லும் சாலையில் பயணிக்கிறோம். சுற்றிலும் பச்சைப் பசேல் என வயல்வெளிகள். வழியெங்கும் சின்னச் சின்னதாக குன்றுகள். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்களே... முருகப் பெருமானின் விளையாடல்கள் குறித்த கதைகள் மனத்துக்குள் நிறைகின்றன. வள்ளிமலை அடிவாரத்தை அடைகிறோம்.

அழகான கோயில் தெரிகிறது. ஐந்து நிலை ராஜகோபுரம். கோயிலின் பின்புறம் அழகிய தெப்பக்குளம். அதனைத் தொடர்ந்து, மலைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் தெரிகின்றன. விநாயகப் பெருமானை வணங்கி, படிகளில் ஏறத் தொடங்குகிறோம். இடதுபுறம் திருப்புகழ் அருளிய அருணகிரிநாதர் சந்நிதி. படிகள் அழகாக சரியான அளவுகளில் ஏறுவதற்கு வசதியாக உள்ளன. சற்று தொலைவில் எட்டுகால் மண்டபம் ஒன்று சற்றே சிதிலமடைந்து கிடக்கிறது. படிகள் திருப்பணி செய்த போது, இந்த மண்டபத்தையும் சரிசெய்ய எண்ணி கடப்பாறையால் தோண்டும்போது, திடீரென புகை வந்ததாம். அங்கே சித்தர்கள் சமாதியடைந்திருப்பதாகவும், அவர்கள் இன்னமும் தவம் செய்வதாகவும் ஒருவர் அருள் வாக்கு சொல்ல... அந்த எட்டு கால் மண்டபத்தை மட்டும் அப்படியே விட்டுவிட்டார்களாம்!

444 படிகள் கடந்து மலைக்கோயிலை அடை கிறோம். கோட்டை போன்று சுற்றுச் சுவர் அழகாகக் கட்டப்பட்டிருக்கிறது. நெடிதுயர்ந்த கொடிமரத்தை வணங்கி, வேல்- மயில் சந்நிதியை தரிசித்து உள்ளே செல்கிறோம். அருமையான குடைவரைக் கோயில். ஒரே பாறையில் குடையப்பட்ட குகைக்கோயிலுள் நுழைகிறோம். இடப்புறம் ஸ்ரீவள்ளி சந்நிதி. அடுத்து ஸ்ரீவிநாயகர் சந்நிதி. வள்ளி தெய்வானை ஸமேத ஸ்ரீமுருகப்பெருமான் மூலவராகக் காட்சி தருகிறார். இந்த இடத்தில்தான் வள்ளியை மணம் புரிந்துகொண்டாராம் முருகப்பெருமான்.

கோயில் அர்ச்சகர் ரவி, புராணக் கதைகள் சொல்லி கோயிலின் சிறப்பை விளக்குகிறார். கோயிலுக்குள் ஓர் இடத்தில் பெரிய துவாரம் ஒன்று உள்ளது. அதன் வழியேதான் முருகப்பெருமான் வள்ளியை திருத்தணிக்கு அழைத்துச் சென்றார் என்று அவர் ஆர்வத்துடன் சொல்லும் போது, நாமும் அந்த ஆலயத்தின் புராண நிகழ்வுகளை மனத்தில் அசைபோட்டபடி ஒன்றி விடுகிறோம்.

கோயிலை விட்டு வெளியே வருகிறோம். இடப்புறம் தனியே ஒரு பாதை தெரிகிறது. செல்கிறோம். சற்று நடந்து, தண்ணீர் தொட்டியை ஒட்டி இடப்புறம் செல்லும் பாதை வழியே மேலே ஏறுகிறோம். கரடு முரடான பாதை. சில இடங்களில் படிகளாக சிறிய அளவில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அந்த வழியே சென்று ஆஸ்ரமத்தை அடைகிறோம். ஆஸ்ரம முகப்பில் பொங்கியம்மன் சந்நிதி உள்ளது. இது ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அம்மனாம்! பொங்கியம்மனை வணங்கி ஆஸ்ரமத்துக்குள் செல்கிறோம்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த சாதுவைச் சந்தித்து வணங்குகிறோம். அவர்- சாது பாலானந்தா. தற்போது வள்ளிமலை ஆஸ்ரமத்தை நிர்வகித்து வருபவர். அவருடன் ஆஸ்ரமத்தைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.

முன்புறம் ஒரு தனிக் கட்டடம். அதுதான் ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகள் அறையாம்! அதனுள் ஸ்வாமிகளின் சிறிய சிலை உள்ளது. மகான் ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், அருணகிரிநாதர் உள்ளிட்ட மகான்களின் பெரிய படங்களும் உள்ளன. அந்தக் கட்டடத்துக்குப் பின்புறம், ஒரு பாறையின் கீழே குகை போன்ற அமைப்பு. சிறிய கதவு ஒன்று உள்ளது. குனிந்தபடி குகையினுள் செல்கிறோம். கீழே அறை போன்ற அமைப்பு. அதன் நடுவில் உள்ளது ஸ்ரீசச்சிதானந்தரின் சமாதி. பளபளவென தூய்மையாக உள்ளது. அதன் மேல் வேலும், முருகப் பெருமானின் சிறிய விக்கிரகமும் உள்ளது. இதற்கு அபிஷேகம் அலங்காரம் எல்லாம் உண்டு. அமைதியான இடம். சற்று நேரம் அமர்ந்து கண்மூடி தியானிக்கிறோம். சித்தர் ஸ்வாமியின் அதிர்வலைகளை உணர்கிறோம்.

வெளியே வருகிறோம். அங்கு ஒரே மேடையில் மூன்று மரங்கள் உள்ளன. கீழே மாடு ஒன்றின் கற்சிலை. விசாரித்தோம். வள்ளிமலை ஸ்வாமிகள் இந்த குகையைக் குடைந்தபோது, அங்கே பத்மாசனமிட்டு அமர்ந்த நிலையில் மூன்று எலும்புக் கூடுகள் கிடைத்தனவாம். அவை ஸித்தியடைந்த மகான்களுடையது என்பதை அறிந்த ஸ்வாமிகள், தனியே ஒரு மேடை அமைத்து, மீண்டும் சமாதிப்படுத்தி, அதன் மேல் அரசு, வேம்பு, வில்வ மரங்களை நட்டுவைத்து பூஜித் தாராம். மேடைக்குக் கீழ், தான் பூஜித்து வந்த சுந்தரவள்ளி என்ற பசு மாட்டுக்கு சமாதி எழுப்பி பசுவின் சிலையையும் வைத்தாராம். இப்படி அந்த இடம் எல்லாமே சித்தர்களின் தொடர்புடன் தெய்வீக அருள் நிரம்பப் பெற்றதாகத் திகழ்கிறது. அவற்றை வலம் வந்து வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்றும், சித்தர்களின் அருள் பெற்று சகல நலன்களும் அடைவோம் என்றும் சொன்னார்கள்.

அதற்கு அருகே பெரிய ஒற்றைப் பாறை. உற்றுப் பார்த்தோம். அப்படியே ஒரு யானை முன்னங் கால்களை மடக்கி அமர யத்தனிக்கும் கோலம். முருகப் பெருமான் ஸ்ரீவள்ளியை மணம் செய்ய யானைமுகன் விநாயகப் பெருமான் யானையாக உதவியதை வெளிக்காட்டியது அந்தப் பாறை. அருகே விநாயகர் விக்கிரகப் பிரதிஷ்டை செய்திருக்கிறார் ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகள்.

இன்னொரு இடத்தில் மலை உச்சிக்கு ஒரு பாதை செல்லும் தடம் தெரிந்தது. அதில் சற்றே கவனமாக ஏறினோம். வெறும் பாறைதான்; படிகள் இல்லை. அதன் உச்சியில் நான்கு கால் மண்டபம். கீழே சிவலிங்கம்- ஸ்ரீவள்ளியாலும் ஸ்ரீவிஷ்ணுவாலும் பூஜிக்கப்பட்ட திருமால்கிரீஸ்வரர். வள்ளி தினைப்புனம் காவல் காத்து வரும்போது, மஞ்சள் தேய்த்துக் குளித்த இடம் இது என்று கைகாட்டினார் உடன் வந்த ஆஸ்ரமப் பணியாளர். அருகில் ஒரு சுனை இருக்கிறது.

கீழிறங்கி வந்து, மீண்டும் திருப்புகழ் ஆஸ்ரமத்தின் மேலே உள்ள பாதை வழியே சற்று தூரம் ஏறிச் சென்றால் அங்கேயும் ஒரு சுனை. அதற்குப் பெயர் சூரியன் காணாச் சுனை. பெரிய பாறை இடுக்கில் தண்ணீர் இருக்கிறது. சூரிய உதயத்தின்போது சூரியனின் கதிர்களை எதிரே உள்ள பாறை மறைத்து விடுவதால் அந்த சுனை நீரில் சூரியக் கதிர்கள் படுவதில்லை. ஸ்ரீவள்ளி, முருகப் பெருமானுக்கு உண்பதற்காக தேனும் தினைமாவும் கொடுத்தாள். முருகப் பெருமான் ஆசையுடன் அதை உண்டான். அவனுக்கு விக்கல் எடுக்கவே, தண்ணீர் கேட்டான். வள்ளி உடனே தண்ணீர் கொடுக்க, ''இந்தத் தண்ணீர் வேண்டாம்.... சூரியன் காணாத தண்ணீர் வேண்டும்!'' என்று கேட்க, இந்தச் சுனையிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தாளாம் வள்ளி.

இப்படி, இந்த மலை முழுவதுமே முருகனையும் வள்ளியையும் நினைவுறுத்தும் சம்பவங்களைத் தாங்கியுள்ளது. ஒவ்வொரு கல்லும், சுனையும், ஏதோ முருகப்பெருமானும் வள்ளியும் நம்மோடு அங்கும் இங்குமாகத் திரிவது போன்ற அனுபவத்தைத் தருகிறது. நமக்கே இப்படி ஒரு முருகானுபவத்தைத் தந்து ஈர்க்கும் வள்ளிமலை, ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகள் போன்ற முருக பக்தர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லையே!

இந்த சச்சிதானந்த ஸ்வாமிகள் யார்? அவர் எப்படி இங்கே ஆஸ்ரமம் அமைத்தார்? அன்பர்களின் வாழ்வில் என்ன அனுபவங்களை ஏற்படுத்தியிருக்கிறார்...? 

                          
        

 
 
 

 

கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள பூநாச்சிபுதூர் கிராமம். இங்கே வாழ்ந்து வந்தார் சிதம்பர ஐயர். வேத சாஸ்திர பாண்டித்யம் பெற்றவர்; இவருடைய முதல் மனைவி இளம் வயதில் இறந்து விட, மகாலட்சுமி எனும் உறவுக்காரப் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். மகாலட்சுமி- அதீத இறை பக்தி கொண்டவர். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஒரு கனவாகவே இருந்தது.

ஒரு நாள்... மகாலட்சுமி அம்மாள், பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியது கண்டு பயந்தார். அருகில் உள்ள 'நாககிரி' என்ற திருச்செங்கோட்டுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி வழிபடுவதாக வேண்டிக் கொண்டதும், அந்தப் பாம்பு ஊர்ந்து மறைந்துவிட்டது.

திருச்செங்கோடு- அருணகிரிநாதரால் பாடப்பெற்ற முருகன் தலம். தனது வேண்டுதலை நிறைவேற்ற பன்னிரண்டு அமாவாசைகள் தொடர்ந்து சென்று, நெய் தீபம் ஏற்றி வழிபட்டார். இதன் பலனாக, நாகம்மாள் என்ற பெண் குழந்தையும், ஆண் குழந்தை 'அர்த்தநாரி'யும் பிறந்தனர்.

அர்த்தநாரிக்கு அப்போது ஐந்து வயது. கணவர் சிதம்பர ஐயர் திடீரென காலமாக, செய்வதறியாது திகைத்த மகாலட்சுமி, தன் சகோதரன் வீட்டில் தஞ்சம் புகுந்தார். அர்த்தநாரிக்கு உபநயனம் ஆனது. பள்ளியிலும் சேர்க்கப்பட்டான். ஆனால் படிப்பு சரியாக ஏறாததால், படிப்புக்கு முழுக்கு போடும் நிலை வந்தது. நல்ல குரல் வளம் அவனுக்கு; எனவே, நாடகங்களில் நடித்தான் அர்த்தநாரி. மனனம் செய்யும் ஆற்றலும் கைகொடுத்தது. பாலமுருகன் மற்றும் பாலகிருஷ்ணன் வேஷங்களை ஏற்று அற்புதமாக நடித்தான். அர்த்தநாரிக்கு சிறு வயதிலேயே திருமணமும் ஆனது. மாமா பெண் சுப்புலட்சுமியை மணம் செய்து வைத்தனர்.

சிறிது காலம் சென்றதும், பிழைப்புக் காக தனது உறவினர்கள் வசித்து வந்த மைசூருக்குச் சென்றார் அர்த்தநாரி. மைசூர் அரண்மனையில் வேலை பார்த்த உறவினர் சிபாரிசால் அர்த்தநாரிக்கும் அரண்மனையில் சமையல் வேலை கிடைத்தது. சந்தர்ப்ப சூழலால்

நஞ்சம்மாவை இரண்டாவது தாரமாக மணந்து கொண்டார். முதல் மனைவி சுப்புலட்சுமி, மாமியார் மகாலட்சுமி அம்மாளுடன் பூநாச்சிபுதூரில் வசிக்க, அர்த்தநாரி இரண்டாவது மனைவியுடன் மைசூரில் வாழ்ந்தார்.

இந்த நிலையில், முதல் மனைவியான சுப்புலட்சுமிக்குப் பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றாக இறக்க, அதே ஏக்கத்தில் சுப்புலட்சுமி காலமானார். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளும் ஒவ்வொன்றாக இறக்க, கடைசியாகப் பிறந்த நரசிம்மன் மட்டுமே உயிருடன் இருந்தான். இதனால் அர்த்தநாரிக்கு வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்பட்டது. அடிக்கடி தற்கொலை எண்ணம் தலை தூக்கியது. மிகக் கொடிய வயிற்று நோயும் ஏற்பட்டது. எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல் அர்த்தநாரியின் உடலை அது வருத்தியது. அதுவரை கடவுள், கோயில், இறைத் தத்துவம் எதிலும் பற்று இல்லாதிருந்த அவருக்கு, அடிக்கடி இறைச் சிந்தனைகளும், நிலையாமை, உடல், உயிர் தத்துவங்களும் மனதில் உதித்தன.

'பழநி முருகப் பெருமானை தரிசித்தால் தீராத வினை எல்லாம் தீரும்' என்றார் உறவினர் ஒருவர். இதனால், மைசூர் அரண்மனை சமையல் வேலையை உதறிவிட்டு மனைவி, குழந்தையுடன் பழநிக்கு வந்தார் அர்த்தநாரி.

பழநியில் கால் வைத்த நாள் முதல், தன் உடலில் புது சக்தி பாய்வதாக உணர்ந்தார். படிப்படியாக வலியும் குணமானது. சந்நியாசம் மேற்கொள்ள ஆவல் பிறந்தது. ஆனால், குடும்பஸ்தரான அவருக்கு சந்நியாசம் மறுக்கப்பட்டது. வெறுப்புற்று, சொந்த ஊருக்குச் சென்று சொத்துகளை உறவினர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். சந்நியாசி போலவே வாழத் தொடங்கினார்; பழநியிலேயே தங்கினார்.

அன்ன ஆகாரம் ஏதுமில்லை; பிரசாதமாகக் கிடைத்த பாலும் பழமும்தான் உணவு! எப்போதும் கோயில், பூஜை, தியானம் என்று ஆலய மண்டபத்திலேயே உட்கார்ந்திருந்ததாலும், மைசூரில் இருந்து வந்து அங்கே தங்கி இருந்ததாலும், மக்கள் அவரை 'மைசூர் ஸ்வாமிகள்' என அழைத்தனர். ஸ்வாமிகளும் சதா ஏகாந்தத்தில் இருப்பார். ஆலயப் பணிகளில் உதவி செய்வார். அபிஷேகத்துக்கு நீர் சுமந்து வருவார். மக்களை வரிசையாக அனுப்பி, தரிசனம் செய்து வைப்பார். அதிகாலையில் எழுந்து, நதியில் குளித்து, கழுத்தளவு நீரில் நின்று 1008 முறை காயத்ரி மந்திரம் ஜபிப்பார். ஆலயம் சென்று வழிபடுவார். இப்படியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

ஒருநாள்... அன்பர் ஒருவரின் திருப்புகழ் பாடலைக் கேட்டார் அர்த்தநாரி. உள்ளம் உருகியது. திருப்புகழில் தன்னை மறந்தார். திருப்புகழுக்காகவே எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டு மனப்பாடம் செய்தார். தினமும் தான் கற்ற பாடல்களை முருகன் சந்நிதிக்கு முன்னே பாடினார். இவர் பாடுவதைக் கேட்க கூட்டம் கூடியது. இதனால், 'திருப்புகழ் ஸ்வாமிகள்' என்று பெயர் ஏற்பட்டது.

பின்னர், பொதிகை மலை, பாபநாசம், குற்றாலம் போன்ற இடங்களுக்கு யாத்திரை செய்து, மகான்களையும் சித்த புருஷர்களையும் தரிசித்து ஆசிபெற்றார். சித்துக்களும் கைவரப் பெற்றார். நாடி வருவோருக்கு திருநீறு பூசினார்; மூலிகைகள் கொடுத்தார். இதில் பலவித நோய்களும் குணமாகி, அன்பர்கள் கூட்டம் இவருக்குப் பெருகியது.மருதமலை, திருச்செந்தூர், ராமேஸ்வரம், இலங்கையில் கதிர்காமம்... என்று பல இடங்களுக்கும் சென்று ஸ்வாமி தரிசனம் செய்தார். நாளுக்கு நாள் துறவு பூண வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது.

அன்பர் ஒருவர் வழிகாட்ட, திருவண்ணாமலை நோக்கிப் பயணமானார். அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்த பின்னர், துறவுக்கான தீட்சை பெற ஸ்ரீரமண மகரிஷியிடம் சென்றார். அவர் முன் திருப்புகழ் பாடல்களைப் பாடியபடி நாட்களைக் கழித்தார். ஆனாலும் துறவு பூணும் அவருடைய எண்ணம் நிறைவேறவில்லை. எனவே, மீண்டும் திருத்தல யாத்திரை எண்ணம் தலைதூக்கியது. சென்னையை நோக்கி பயணமானார். அங்கே கந்தசாமி கோயில் உட்பட பல கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்தார். பின்னர் திருத்தணி சென்றார். முருகனை தரிசித்தார். அங்கே மற்றொரு திருப்புகழ் அன்பரின் தொடர்பு ஏற்பட்டது. அவர் மூலம் திருப்புகழ் நூலின் இரண்டாவது பாகமும் ஸ்வாமிகளுக்குக் கிடைக்கப் பெற்றது. பிறகு மீண்டும் பழநிக்குச் சென்றார். அங்கே சில காலம் இருந்தார்.

பர்மாவில் இருந்த தன் மகனை வரவழைத்து, மனைவியை அவன் பொறுப்பில் ஒப்படைத்தவர், பின் வடநாட்டு யாத்திரை செய்தார். இமாலயம் சென்று, அங்கே தவம் செய்த யோகிகளை தரிசித்தார். அவர்களில் ஒருவர் மூலம் தீட்சை பெற்று, 'சச்சிதானந்த ஸ்வாமிகள்' என்ற தீட்சா நாமம் பெற்று, துறவு ஏற்றார். ஸ்வாமிகளின் வடநாட்டு யாத்திரையின் போது முருகன் அருளால், அவருக்கு அற்புதங்கள் சில நிகழ்ந்தன. அவர் பசியால் துடித்தபோது குரங்குகள் சில உணவு தந்தன. இருளில் வழி தெரியாமல் தவித்தபோது தீப்பந்தங்கள் துணையாக வந்து வழிகாட்டின.

மீண்டும் ரமணரை தரிசிக்க, திருவண்ணாமலையை அடைந்தார். ஒரு நாள்... திருப்புகழ் ஸ்வாமிகளைப் பார்த்து, 'கீழே போ, இங்கே நிற்காதே!'' என்றார் ரமணர். திருப்புகழ் ஸ்வாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. மனக் கலக்கத்துடன், 'குருவின் வார்த்தையை மீறக்கூடாது' என்று மலையிலிருந்து கீழே இறங்கினார். கீழே, ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் இவரை அழைத்தபடி நின்றிருந்தார். இவருக்கு ஆச்சரியம். இதனால்தான் ரமண மகரிஷி தன்னை கீழே போகச் சொன்னார் போலும் என்று எண்ணி சிலிர்த்தார். திருப்புகழ் ஸ்வாமிகளைத் தன்னருகே அமர வைத்த சேஷாத்ரி ஸ்வாமிகள், அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.

சிவ மானஸ ஸ்தோத்திரத்தின் நான்காம் ஸ்லோகத்தைச் சொல்லி அதன் பொருளையும் விளக்கினார். அதற்கு ஈடான திருப்புகழை, இவரிடம் சொல்லச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்த சேஷாத்ரி ஸ்வாமிகள், ''திருப்புகழ்தான் உனக்கு தாரக மந்திரம். சிந்தனை, சொல், செயல் என அனைத்தையும் பரம்பொருளுக்கே அர்ப்பணம் செய்து வாழ். நீ இனி வேறு எந்த மந்திர நூல்களும் படிக்க வேண்டாம். ஜப தபங்கள் எதுவும் வேண்டாம்.

திருப்புகழே போதும். அதுதான் உனக்கு மகா மந்திரம். இனி நீ எங்கே சென்றாலும் திருப்புகழ் ஒலிக்கட்டும்... நீ இனி வள்ளிமலைக்குப் போய் தவம் செய். பின்னர் நானும் அங்கே வருகிறேன்'' என்று ஆசீர்வதித்தார். மகானை வணங்கி விடைபெற்ற திருப்புகழ் ஸ்வாமிகள், குருவின் ஆணைப்படி வள்ளிமலைக்குச் சென்று தவம் செய்யலானார். அதன் பின், 'திருப்புகழ் ஸ்வாமிகள்' என்ற பெயர் 'வள்ளிமலை ஸ்வாமிகள்' ஆனது.

வள்ளிமலையில் ஆலயம் மற்றும் மலைப் பகுதிகளை சீரமைத்து, அங்கேயே தங்கி ஆஸ்ரமமும் அமைத்துக் கொண்டார். திருப்புகழின் பெருமையைப் பரப்பினார். நாடி வரும் அடியவர்களுக்கு திருநீறு அளித்தும், திருப்புகழ் மந்திரம் ஓதியும் நோய் தீர்த்தார். ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் காட்சி தருதல், அன்பர்களின் இருப்பிடம் சென்று நோய்களை நீக்குதல், ஆபத்திலிருந்து காத்தல் எனப் பல அற்புதங்களை நிகழ்த்தினார். சென்னையில் சில காலம் வசித்தார். திருப்புகழையே உயிர்மூச்சாகக் கொண்ட ஸ்வாமிகள், 1950 நவம்பர் 21-ஆம் தேதி மகாசமாதி அடைந்தார். அவரது பூவுடல் வள்ளி மலைக்கு எடுத்து வரப்பட்டு, அவர் தவம் செய்த அதே குகையில் சமாதியில் வைக்கப்பட்டது.

தற்போது, நாம் அந்த குகையில் ஸ்வாமிகளின் சமாதியையும், அதன் மேல் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள வேல் மற்றும் சிலை வடிவிலான தட்சிணாமூர்த்தியையும், எதிரே, திருப்புகழ் ஈந்த அருணகிரிநாதர் சிலையையும் தரிசிக்கலாம்.

வள்ளிமலையில் சமணர்கள் வாழ்ந்த குகை களும் உள்ளன. அவை, தொல்லியல்துறைகட்டுப் பாட்டில் உள்ளன. வள்ளி தினைப்புனம் காத்த மண்டபம், தடாகம், சுனை என முருகப் பெருமான் - வள்ளியம்மை தொடர்பு உடைய மலையில் நம் பாதங்கள் படும்போதே நம்முள் ஓர் தெய்வீக உணர்வு ஆட்கொள்கிறது. இங்கே ஸ்வாமிகளுக்கு ஸ்ரீவள்ளியுடன் பலமுறை காட்சி தந்துள்ளாராம் முருகப்பெருமான்.

ஸ்ரீவள்ளி தவம் செய்த மலை; முருகப்பெருமான் வேடுவனாக, கிழவனாக வள்ளிக்குக் காட்சியளித்த மலை; சிறந்த முருக பக்தராகத் திகழ்ந்த கிருபானந்த வாரியார் மனம் உகந்து கொண்டாடி திருப்பணி செய்யப்பெற்ற மலை; இயற்கை அழகு நிரம்பிய மலை; தியானம் செய்ய ஏற்ற மலை... இப்படி பல சிறப்புகள் பெற்ற இந்த வள்ளிமலையில் நாம் கழித்த ஒவ்வொரு நிமிடமும் மனதில் அமைதி நிரம்பியிருந்ததை உணர்ந்தோம். பொறாமை, கோபம், பேராசை என எதையெல்லாம் மனித சமூகம் விட்டுத் தொலைத்து, இறைவனடி சேர வேண்டும் என மகான்கள் சொன்னார்களோ, அது இந்த வள்ளிமலைக்கு வந்து, மலை மேல் குகைக் கோயிலில் அருளும் முருகப்பெருமானது சந்நிதியில் சற்று நேரம் அமர்ந்தாலே சாத்தியமாகும். வள்ளிமலைக்கு வந்தும் மன அழுக்குகள் நீங்கவில்லை எனில் நாம் உய்வடைய வேறு மார்க்கமில்லை! அவ்வளவு புனிதம் வாய்ந்த மலை இது.

அழகான முருகன் ஆலயம்; அமைதி தவழும் சமாதிக் கோயில். தியான மண்டபம், மனதை ஈர்க்கும் இயற்கைச் சூழல் என முற்றிலும் புதிய உலகுக்கு அழைத்து செல்லும் வள்ளிமலையை வாழ்வில் ஒருமுறையேனும் தரிசியுங்கள்!

- செங்கோட்டை ஸ்ரீராம்
படங்கள் எம்.ரமேஷ்பாபு