Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்னுயிர்த் தோழன்! - கண்ணன் நாமம் சொல்லும் கதை!


றைவனை பக்தியுடனும் ஆழ்ந்த நம்பிக்கையுடனும் பார்ப்பவர்கள்தான் நாம்! 'கடவுளே... என் வாழ்க்கைல நல்லது நடக்க நீதான் அருள்புரியணும்’ என்று ஒருமையில் அழைத்துப் பிரார்த்தனை செய்கிற அளவுக்கு இறையை நெருங்குகிற பக்தி நமக்கு இருக்கிறது. மிகப்பெரிய வெற்றியாளர்கள், பிரபலங்கள் எனப் பலரும், 'நான் பேரும்புகழுமாக, காரும் பங்களாவுமாக இருப்பதற்குக் கடவுளின் அருளே காரணம்!’ என இறைவனை சிலாகித்துப் பேசுவதைக் கேட்டிருப்போம்.

உண்மையில் இறைவன் என்பவன் நமக்கு கடவுள் என்கிற சக்தி மட்டும்தானா? நமக்கும் அந்தச் சக்திக்குமான உறவு, பக்தன்- கடவுள் என்பதோடு முடிந்துவிடுகிறதா என்ன? கொஞ்சம் யோசியுங்கள்.

அதேபோல், சக மனிதர்கள் எவரேனும் ஆபத்து சம்பத்துகளில் நமக்கு உதவினால், அந்த மாபெரும் உதவியால் நம் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டால், ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டால், உடனே கண்ணீரும் நன்றியுமாக, 'நல்லவேளை... கடவுள் மாதிரி வந்து காப்பாத்துனீங்க’ என்று நெகிழ்ச்சியுடன் சொல்வோம். அப்படி ஓடி வந்து உதவி செய்தவர் நம் நண்பராக இருக்கலாம்; அல்லது, முன்பின் அறிமுகமில்லாதவராகக்கூட இருக்கலாம். ஆனாலும், 'கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினாய்’ என்கிற வார்த்தையைத்தான் சொல்வோம். ஏனெனில், உதவிக்கு ஓடி வருவது கடவுளின் செயல். அந்தச் செயலுக்குக் காரணம்... கடவுள் நம் நண்பன்!

ஆமாம். அதனால்தானோ என்னவோ அழகன், வசீகரன், மாயன், பேரருளாளன், பெருஞ்ஜோதி, ஆயிரம் கோடிப் சூர்யப் பிரகாசம் கொண்டவன் என்றெல்லாம் வர்ணித்த ஆழ்வார்கள் பலரும் தவறாமல் 'தோழன்’ என்கிற வார்த்தையையும் சொல்லி, பரந்தாமனைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

அடேங்கப்பா... நண்பன், தோழன், சகா, மித்ரன் என்று தோழமையைப் பறைசாற்ற, ஏகப்பட்ட வார்த்தைகள் இருக்கின்றன. இவற்றில் நட்பானவரை பெருமையுடன் விவரிக்கிற வார்த்தை... 'ஸுக்ருத்’ என்பதுதான்! 'ஸுக்ருத்’ என்றால் நல்ல மனம் கொண்டவன் என்று அர்த்தம். 'எல்லாரும் நல்லாருக்கணும்’ என்று நினைப்பவன் அவன். மோகனமான, மங்கலகரமான வார்த்தைகளையே எப்போதும் உச்சரிப்பவன்.

நற்குணம் கொண்டவர்களை, நல்ல மனம் படைத்தவர்களை நண்பனாகப் பெறுவது என்பது பெரும்பேறு! அப்பேர்ப்பட்ட சத்குணங்கள் அனைத்துக்கும் சொந்தக்காரன் சாட்ஷாத் கண்ண பிரானைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும்?

ஒருவர் நம்மைப் பார்த்து, 'என்னப்பா... முன்னைக்கிப்ப ரொம்ப இளைச்சுட்டியே?’ என்றோ, 'என்ன... உடம்பு இப்படிப் பருத்துருச்சு’ என்றோ சொல்வார்கள். நண்பனைச் சொல்வதற்கு பல வார்த்தைகள் இருப்பது போல், உடலைச் சொல்வதற்கும் பல வார்த்தைகள் இருக்கின்றன. இளைத்துப்போன உடலைச் சரீரம் என்றும், பருத்திருக்கும் உடம்பை தேகம் என்றும் சொல்கிறது சம்ஸ்கிருதம். அதேபோல், நட்பு குறித்த வார்த்தைகளிலும் வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது சம்ஸ்கிருதம்.

இவற்றில் 'மித்ரன்’ எனும் வார்த்தை, அதே வயதுக்காரரை, ஒத்த மனநிலை கொண்டவரை, அதே குணங்களுடன் திகழ்பவரைக் குறிக்கிறது. அதே போல், இதமான தோழனை 'ஸ்நேகிதன்’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். எவர் ஒருவரைப் பார்க்கிறபோதும், பழகுகிறபோதும், பேசும்போதும், தொடும்போதும், நினைக்கிறபோதும் உள்ளுக்குள்ளே அன்பு பொங்கிப் பிரவாகிக்கிறதோ அவரே ஸ்நேகத்துக்கு உரியவர் என்பார்கள் முன்னோர்.

பிரேமை என்பது ஆசை; அன்பு. ஆசை என்பது விருப்பம். அப்படியெனில், நண்பன் எனப்படுபவர்கள் மீது பிரேமை இல்லையா? அவர்கள் மீதும் ஆசையுடன்தானே பழகுகிறோம், பேசுகிறோம் என்று கேட்கலாம்.

ஒருவருக்குச் சர்க்கரை வியாதி. அவர் ஒரு நண்பரின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கே அவருக்குப் பிடித்த இனிப்புப் பலகாரம் கண்ணெதிரே தட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நண்பரோ, 'உனக்கு இந்த இனிப்பு ரொம்பப் பிடிக்கும்னு தெரியும். ஆனா என்ன பண்றது, உனக்கு இதனால உடம்புக்கு முடியாமப் போயிட்டா என்னடா பண்றது?’ என்கிறார். இது நண்பனின் குணம்! நற்குணம்தான்!

ஆனால்... ஸ்நேகிதன் என்பவன், ஸ்நேகத்தை இதமாகக் கொள்பவன் அல்லவா? அதாவது, மிகுந்த பிரேமை கொண்டவனாயிற்றே! ஆகவே, அந்த ஸ்நேகிதன் 'உனக்கு சர்க்கரை வியாதின்னு தெரியும்டா! இனிப்பு சாப்பிட்டா உடம்பு படுத்தியெடுக்கும் வாய்ப்பு இருக்கு. ஆனா, இந்த இனிப்பு உனக்குப் பிடிக்கும். அதனால துளியூண்டுதான் தருவேன். இந்தா சாப்பிடு. ராத்திரி மறக்காம மருந்தைச் சாப்பிடணும், சொல்லிட்டேன்!’ என்று சொல்லி, அந்த இனிப்பை மிகக் கொஞ்சமாக எடுத்து அவருக்கு வழங்கி, அவரின் ஆசையை, விருப்பத்தை, பிரேமையை நிறைவேற்றுவான்.அதாவது, நண்பர்களில்கூட இதகாரி, ப்ரேமகாரி என்றெல்லாம் உண்டு. பெற்றோரையே எடுத்துக் கொள்ளுங்கள். நம் அம்மா இதமாகவும், கொஞ்சம் கண்டிப்பாகவும் நம்மை வழிநடத்துவார். ஆனால், அப்பாவோ கறாரும் கண்டிப்பாக வழிநடத்துவார். இங்கேயே இதகாரி, ப்ரேமகாரிக்குமான வித்தியாசம் தெரிகிறது அல்லவா?

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கெல்லாம் நாயகன்தான். பரம்பொருள்தான். நாயகனாக இருப்பவரிடம் நட்பை எதிர்பார்க்க முடியாது. ஆனால் நண்பனாக இருப்பவர்... நாயகனாகவும் இருக்கலாம் அல்லவா? கிருஷ்ண பரமாத்மா தன்னை நண்பன் என்று, அதாவது தோழன் என்று சொல்லிக் கொள்ளாமலேயே நட்புடன் பலரிடமும் பழகியிருக்கிறார்.

'அர்ஜுனா, ப்ரீதியுடன் உனக்கு நல்லது செய்யக் காத்திருக்கிறேன்’ என்று அருள்கிறார் கண்ணன். ப்ரீதி என்பதில் உள்ள பிரியத்தையும் இதத்தையும் கவனித்தீர்களா? பாண்டவர்கள் அனைவருக்கும் தோழனாக இருந்தாலும், அர்ஜுனனிடம் ஸ்நேகிதத்துடனும் மிகுந்த உரிமையுடனும் இருந்து வழிகாட்டுகிறார்.

பாண்டவ சகோதரர்களிடம் மட்டுமா? கோபியரிடமும் குசேலனிடமும்கூடத் தோழமையுடன்தானே பழகிக் களித்தார்.

இன்றைக்கும் கோகுலாஷ்டமி நாளில், வீட்டில் கிருஷ்ணர் பாதம் வரைந்து, சீடையும் முறுக்குமாக பட்சணங்கள் செய்து கிருஷ்ணரை வணங்குகிறோமே... இது ஒருவகையில் கிருஷ்ண பக்தி என்றாலும், பகவான் கிருஷ்ணரின்மீது நாம் கொண்ட ஸ்நேகிதத்தின், ப்ரேமையின் வெளிப்பாடுதானே அது!

நாயகனாகத் திகழும் கண்ண பரமாத்மா, நண்பனாகவும் இருந்து அருள்கிறார். உண்மையான கிருஷ்ண பக்தியில் நாம் திளைத்தால், நமக்கும் நண்பராவார் ஸ்ரீகிருஷ்ணர்!