Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கள்வருக்கும் கருணை காட்டியவர்!

அருட்பெருஞ் ஜோதியே...

ள்ளலார், சென்னையில் வாழ்ந்த காலம்! ஒருமுறை திருவொற்றியூரில் தரிசனம் முடித்து திரும்பும்போது, இரவு வெகு நேரமாகி விட்டதால், அந்த ஊரில் உள்ள வீட்டுத் திண்ணை ஒன்றில் படுத்துக் கொண்டார். காதில் கடுக்கன் அணியும் வழக்கம் ஆண்களிடம் இருந்தது. வள்ளலாரும் தன்னுடைய காதுகளில் கடுக்கன் அணிந்திருந்தார்.

நள்ளிரவு. இறை சிந்தனையிலேயே இருந்தவருக்கு தூக்கம் பிடிக்கவில்லை. அப்போது, அங்கே திருடன் ஒருவன் வந்தான்; வள்ளலாரின் காதுகளில் கடுக்கன் இருப்பதைக் கண்டு உற்சாகமானான். வள்ளலார் நன்றாக தூங்கிக் கொண்டிருப்பதாக எண்ணியவன், அவரை நெருங்கி அப்படியே புரட்டிப் போட்டான்; கடுக்கனை கழற்றினான். அதுவரை பொறுமையாக இருந்த வள்ளலார், மெள்ள திரும்பிப் படுத்து, 'இந்தா... இந்தக் காதில் உள்ள கடுக்கனையும் எடுத்துக் கொள்’ என்பது போல் காது காட்டிப் படுத்துக் கொண்டாராம்!  

இதேபோல் இன்னொரு சம்பவம்!

டலூரை அடுத்த குள்ளஞ்சாவடி எனும் இடத்தில் தங்கியிருந்தார் சுவாமிகள். உடன் இருந்த காவல்துறை அன்பர் ஒருவர், அவருக்கு புதிய ஆடை ஒன்றை வழங்கினார். அன்று இரவு, அந்த ஆடையைப் போர்த்தியபடி படுத்திருந்தார் வள்ளலார். எல்லோரும் நன்றாகத் தூங்கிய வேளையில், அங்கே வந்தான் திருடன் ஒருவன். வள்ளலார் போர்த்தியிருந்த புத்தாடையை அபகரிக்க முயன்றான். சட்டென்று விழித்துக் கொண்ட காவல்துறை அன்பர், அவனைப் பிடித்துவிட்டார். ஆனால் வள்ளலார், ''பாவம்... ஏழை போல! இல்லாததால்தானே திருடுகிறான். இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுப்பதுதானே முறை?!'' என்று காவல்துறை அன்பரிடம் சொன்னதுடன், அவனுக்கு அந்தப் புத்தாடையைத் தந்து உதவினார். அதேநேரம், அவனிடம் ''திருடுவது பாவத்தைத் தரும். எனவே இதை விட்டுவிட்டு, இனி உழைத்துப் பிழை'' என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன் என்று...பயிரைப் பார்த்து மட்டுமா இரக்கம் கொண்டார்; அனைத்து உயிருக்காகவும் அல்லவா இரக்கம் காட்டியிருக்கிறார்!

டலூர் அருகில் உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் திடீரென தண்ணீர் பஞ்சம்! எங்கும் வறட்சி... மரம், செடி-கொடிகள் அனைத்தும் நாசமாயின. கால்நடைகளும் துன்புற்றன. கலங்கிக் கதறிய மக்கள், வள்ளலாரிடம் வந்து முறையிட்டனர். மனம் பதைத்த வள்ளலார், அவர்களின் ஊருக்குச் சென்றார். ஆறு குடம் தண்ணீரை எடுத்து தனது தலையில் ஊற்றச் சொன்னார்.

எங்கெல்லாமோ அலைந்து திரிந்து ஆறு குடங்களில் நீரைக் கொண்டு வந்து, அப்படியே செய்தனர். அவ்வளவுதான்... சிறிது நேரத்தில் கருமேகங்கள் திரண்டன; பெருமழை பெய்து, நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. மக்கள் மகிழ்ந்தனர்.

வள்ளலாரின் மீது அன்பு கொண்டவர்களுள் வேங்கட சுப்பய்யர் என்பவரும் ஒருவர். மஞ்சக்குப்பம் பகுதி தாசில்தாராகப் பணிபுரிந்த வேங்கடசுப்பய்யர் வெளியில் வரும் போதெல்லாம், இவரது வருகையைத் தெரிவிக்கும் விதமாக பணியாள் ஒருவன் கொம்பு ஊதியபடியே முன்னே செல்வான்.

ஒருநாள், வள்ளலாரின் சொற்பொழிவைக் கேட்க வந்திருந்தார் தாசில்தார். வழக்கம் போல், அவருக்கு முன்னே கொம்பு ஊதியபடி வந்த பணியாள், வியர்த்துக் களைத்து மயங்கும் நிலையில் இருந்தான். இதைக் கண்ட வள்ளலார் மிகவும் வருந்தினார். தாசில்தாரை அழைத்தவர், ஜீவகாருண்யத்தைப் பற்றி அறிவுறுத்தி, பணியாளை கருணையுடன் நடத்த வேண்டும் என்றும், அவனை இவ்வாறு ஓடச் செய்து துன்புறுத்தக் கூடாது என்றும் அன்புடன் கேட்டுக் கொண்டார். மனம் வருந்திய தாசில்தார், அதுமுதல் பணியாளை அன்புடன் நடத்தினாராம்!

வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் என்றெல்லாம் ஏழைகள் படும் துன்பங்கள் கண்டு மனம் வருந்தினார் வள்ளலார். எல்லா தானங்களிலும் அன்ன தானமே உயர்ந்தது என்று அறிவித்து, வடலூரில் சத்திய தருமச்சாலை அமைத்து ஏழைகளின் பசித் துயரைப் போக்கினார். அவர் அன்று ஏற்றிய அன்னதான அடுப்பு இன்றும் எரிந்து,

அடியவர்களின் பசிப்பிணியை நீக்கிக் கொண்டிருக்கிறது.

அருட்பெருஞ் ஜோதி; அருட்பெருஞ் ஜோதி;
தனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் ஜோதி!

- பா.சு. ரமணன்