Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்யாண வரம் தரும் கந்தன் திருமணம்!

 

ம் எல்லோருக்கும் திருமண வரம் தந்தருளும் இறைவனுக்கு, நாமெல்லாம் சேர்ந்து திருக்கல்யாணம் செய்து வைத்தால், எவ்வளவு பேரானந்தமாக இருக்கும்? அப்படி ஒரு திருக்கல்யாணம், சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி கோயிலில் நடந்தேறியது. ஆம்... கல்யாண வரம் அருளும் கந்தக் கடவுளுக்கும் ஸ்ரீவள்ளி மற்றும் ஸ்ரீதெய்வானைக்கும், அன்னை சாரதா பக்தர்கள் சபாவும் கோயில் நிர்வாகமும் இணைந்து, பங்குனி உத்திர நன்னாளில் சீரும் சிறப்புமாகத் திருக்கல்யாணம் நடத்தி வைத்தார்கள்.

உத்ஸவ விழாக்களில் பஜனைப் பாடல்கள் பாடி, தெய்வத் திருமணங்களை சிறப்புற நடத்தித் தரும் காந்திமதி அம்மாள், இந்த வைபவத்தையும் சிரத்தையுடன் நடத்தி வைத்தது சிறப்பு.

வழக்கத்தைவிட அன்றைய  தினம் கோயிலில் ஏகத்துக்கும் கூட்டம். ''கடவுளின் திருமணத்தைத் தரிசித்தால், நம்முடைய திருமணத் தடை அகலும் என்பது ஐதீகம்! எனவே, இந்த நாளில் அந்த வேண்டுதலுடன் வந்திருக்கும் பக்தர்கள் ஏராளம்!'' என்று தெரிவித்தார்கள், விழா அமைப்பினர்.

முறைப்படி, ஊருக்கும் உறவுகளுக்கும் திருமணப் பத் திரிகை அடித்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாப்பிள்ளை வீட்டாராக சிவ-பார்வதியர் தோரணையாக வந்து நின்றபோது, விழா களை கட்டத் துவங்கியது. அருணகிரிநாதரின் திருப்புகழை இன்னிசையாகத் தொகுத்துப் பாடிய காந்திமதி சந்தானத்தின் வசீகரக் குரலில் மாப்பிள்ளை முருகப்பெருமான் உற்சாகமாகி இருப்பார்.

மாப்பிள்ளை அழைப்பு, 'பெண்ணே வேண்டாம்’ என்று கோபித்துக்கொண்டு மண மகன் காசி யாத்திரை செல்லுதல், பெண்வீட்டார் ஓடி வந்து சமாதானப்படுத்தி, குடையெல்லாம் கொடுத்து மரியாதை செய்து, மனத்தை மாற்றி மாப்பிள்ளையைத் திரும்ப அழைத்து வருதல்... எனச் சடங்குகள் அமர்க்களப்பட்டன. பருப்புத் தேங்காய், திரட்டுப் பால், பிஸ்கட், முறுக்கு, பழங்கள், ஜூஸ், காய்கறிகள், பால்கோவா, லட்டு, ரவா உருண்டை என இனிப்பு வகைகள் சீர்வரிசையாக தட்டுத் தட்டாக நிறைந்திருந்தன. வளையல், கண்ணாடி, மஞ்சள், சோப்பு, சீப்பு, பட்டு வேட்டி, பட்டுப் புடவை, மாங்கல்யம் என அனைத்தும், கல்யாணத்துக்கும் நலங்கு வைபவத்துக்குமாக வைக்கப்பட்டிருந்தன. இவை எல்லாமே பக்தர்களால் வழங்கப்பட்டவை என்பது கூடுதல் சுவாரஸ்யம்!  

முன்னதாக... தேங்காய், பூ, வெற்றிலை, பாக்கு, பத்திரிகை வைத்து நிச்சயதார்த்தம் செய்து, தட்டுகள் மாற்றிக்கொள்ளப்பட்டன.

ஊஞ்சலில் ஸ்ரீவள்ளி மற்றும் ஸ்ரீதெய்வானையு டன் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி படுஜோராக ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது, கொள்ளை அழகு!

அடுத்து... பஜனைப் பாடல்கள், பாயல் நடனம், கோலாட்டம் என ஸ்ரீமுருகக் கடவுளைப் போற்றிப் பாடியாடிக் கொண்டிருந் தார்கள், பக்தர்கள். அதேபோல், பின்னல் கோலாட்டமும் காண் போரை வியக்க வைத்தது. அதாவது, ஆடிக்கொண்டே பலவிதமான கயிறுகளைப் பின்னினார்கள்; சங்கிலி போலாக்கினார்கள்; அழகிய மாலையாக்கினார்கள். பிறகு, ஆட்டத்தினூடே அவற்றைப் பழையபடி கயிறாகப் பிரித்துக் காட்ட... கூட்டம் மொத்தமும் வியப்பில் ஆர்ப்பரித்து, கரவொலி எழுப்பியது.

பெண்ணும் மாப்பிள்ளையும் களைத்திருப் பார்கள் அல்லவா! எனவே, இறைவனுக்கும் இறைவிக்கும் பாலும் பழமும் கொடுக்கப்பட்டன. ஊர்க் கண்ணும் உறவுக் கண்ணும் பட்டுவிடுமே எனப் பதறிய கூட்டத்தார், அவர்களுக்குப் பல வண்ண சாத உருண்டைகளால் திருஷ்டி சுற்றிப் போட்டனர்.

திருக்கல்யாண வேளை நெருங்கியது. பரவசத்துக்கு ஆளானார்கள் பக்தர்கள். 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!’ எனும் கோஷம், அரங்கையே அதிரச் செய்தது.

''திருமணத் தடையால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு இருந்தால், அவர்கள் அனைவருக்கும் விரைவில் கல்யாண வரம் கிடைக்கும்; அந்தக் கந்தன் துணையிருப்பான்'' என்று கணீர்க் குரலில் காந்திமதி சந்தானம் சொன்னபோது, வந்திருந்த பக்தர்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்! கன்னிப் பெண்களின் முகங்களில் அப்படியொரு நிம்மதி!

- க.பிரபாகரன்

படங்கள்: ரா.மூகாம்பிகை