Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்ட திருவிழா!

ருந்தவை மந்திரம் மறுமை நன்னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் மாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துறுபைம்பூம்
செருந்திசெம் பொன்மலர் திருநெலியுறை தாமே

என்று ஒரு பழைமையான பாடல் உண்டு.

தென் தமிழகத்தில், வற்றாது வளம் கொழிக்கும் தாமிரபரணி என வழங்கும் தண்பொருநை ஆற்றின் அருகில் அமைந்துள்ளது திருநெல்வேலி எனும் திருத்தலம். அருள்மிகு நெல்லையப்பர், நெல்லுக்கு வேலியிட்டு காத்தருளிய ஈசன் இவர். அருள்தரும் காந்திமதி அம்பாள், மிகுந்த வரப்பிரசாதி. கருணைத் தெய்வம் இவள்.
 

தமிழகத்தில் விழாக்களுக்கு பேர்போன தலங்களில் இதுவும் ஒன்று. பாண்டிய நாட்டில் 14 பாடல் பெற்ற தலங்களில் இந்தத் தலம் முக்கியமானது எனப் போற்றுவர்.

வேதசர்மா, இறைவனுக்கு திரு அமுது ஆக்குவதற்கு காயப்போட்டிருந்த நெல்லை மழையினால் நனையாதபடி வேலியிட்டுக் காத்த சிறப்புடையது. அகத்தியமுனிவருக்கு திருமணக்கோலம் காட்டிய மேன்மையுடையது. தாருகாவனத்து முனிவர்களின் செருக்கினை அடக்கிய புகழை உடையது.  பால்குடம் சுமந்து சென்ற ராமக்கோன் என்பானிடம்  இறைவன் மூங்கில் வடிவாக இருந்து இடறிவிட்டு பாலை தன்மேல் கவிழச் செய்து அதனால் வெட்டுண்டு காட்சியருளிய பெருமையுடையது. திக்கெல்லாம் புகழப்படும் திருநெல்வேலி என்று திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற பெருமையுடைய திருத்தலம் என பல சிறப்புகள் நிறைந்தது இந்த புண்ணிய தலம்.

இங்கே கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திரிபுரம் எரித்த வரிசடைக் கடவுளாகிய சிவபெருமான், உயிர்களின் மூவகைக் கட்டுகளாகிய அரவணங்களைத் தகர்த்தெறிந்த செயலை விளக்குவதாகிய திரிபுரம் எரித்த வரலாற்றின்படி, அப்போது தேர் ஏறி வந்த திருக்கோலத்தை நினைவூட்டிக் காட்டும் வகையில், இங்கு ஆனி மாதத்தின்போது, மாபெரும் தேர்த் திருவிழா நடைபெறுவது சிறப்புக்கு உரிய ஒன்று.

இந்தத் திருவிழாவானது மங்கல மாதமான ஆனி மாதம் 18 (02.07.2014) ஆம் நாள் கடக லக்னத்தில் கொடி ஏற்றப்பட்டு ஆனி 26(10.07.2014) ஆம் நாள் தேர் வடம் பிடித்தலுடன் முடிந்து தீர்த்தவாரியும் செய்யப்படுகிறது. விழாவின்போது முன்னதாக விநாயகருக்கு வைகாசி 31ம் நாள் கொடி ஏற்றப்பட்டு 5 நாட்கள் வாகனத்தில் வீதி உலா வருவார் இறைவன். பின்பு முதல் மூவர் எனப்படும் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோருக்கு ஆனி 11ல் சந்திர சேகர உற்ஸவம் ஆரம்பமாகும். அப்போது அருமையாக ரத வீதியை சுற்றி வருவார்கள் அவர்கள்.

இதன் பின்புதான் ஆனித் திருவிழா களைகட்ட ஆரம்பிக்கும். முதலாம் நாள் அதாவது, ஆனி 18 கொடியேற்றப்பட்டு இரவு 7 மணிக்கு சுவாமி அம்மன் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதி உலா வருவார். இரண்டாம் நாள் காலை 8.30 மணி அளவில் வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி, அம்மன் திருவீதி உலா மற்றும் இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும் அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதி உலா வருவார்கள்.

மூன்றாம் நாள் சுவாமி இரவு 8 மணிக்கு தங்க பூத வாகனத்திலும், அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா வருவார்கள். நான்காம் நாள்  காலை 8 மணிக்கு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதி உலா மற்றும் இரவு 8 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மன் திருவீதியுலா வருவார்கள்.
 

அதையடுத்து, காலையில் அதே வெள்ளி ரிஷப வாகனத்தில் நடைபெறுகிறது திருவீதியுலா. அன்று இரவு 8 மணி அளவில் இந்திர விமானத்தில் வீதி உலா வைபவம் நடைபெறும். ஆறாம் நாளும் காலையும் மாலையும் 8 மணி அளவில் வெள்ளி சப்பரத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறும்.
இதைத்தொடர்ந்து ஏழாம் நாள் காலை 8 மணிக்கு சுவாமி தந்தப் பல்லக்கிலும் அம்மன் முத்துப் பல்லக்கிலும் தவழ்ந்த திருக்கோலம் வந்து இரவு சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்திலும் அம்பாள் காமதேனு வாகனத்திலும் திரு வீதி உலா வரும் வைபவம் சிறப்புற நடைபெறுகிறது.  பின்பு எட்டாம் நாள் காலை 8.30க்கு சுவாமி நடராஜப் பெருமான் வெள்ளை சாத்தி எழுந்தருள்வார்.  உட்பிரகாரம் உலா வருதல் மற்றும் இரவு 8 மணிக்கு அவர் பச்சை சாத்தி எழுந்தருள்வார்.

மறுநாள் (ஒன்பதாம் நாள்) காலை அதிகாலை 4.09 மணிக்கு மேல் 4.29 மணிக்குள்ளாக சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருள, காலை 8 மணி அளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து வருவார்கள். இதில் 1ஆம் நாள் முதல் 7ஆம் நாள் முடிய தினசரி மாலை 6 மணி அளவில் பஞ்சமூர்த்திகளுக்கும் சோடச தீபாராதனை நடைபெறுகிறது.
 

செய்தி, படங்கள்: தி.ஹரிஹரன் (மாணவ பத்திரிகையாளர்)