Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடன் தொல்லை நீக்கும் ஸ்ரீகாமாட்சி அம்பாள்!

தேவி தரிசனம்...

திருமண வயதை அடைந்தும்கூட, காலா காலத்தில் மகளுக்கு ஒரு கல்யாணம் நடக்கவில்லையே, அவளைக் கரையேற்றினால் நிம்மதியாக இருக்குமே என்று அவள் தாய்க்கு ஆதங்கம். அலுப்பும் சலிப்புமாக, மகளுடன் அந்தக் கோயிலுக்கு வந்தார். அம்பிகையை மனம் குளிரத் தரிசித்தார். மகள் குறித்த கவலை தோய்ந்த அம்மாவின் மௌன அழுகை, உலகுக்கே தாயாகத் திகழும் தேவிக்குத் தெரியாமல் போகுமா? தேவி மனம் கனிந்தாள். விரைவிலேயே அந்தப் பெண்ணுக்குச் சீரும் சிறப்புமாக இனிதே நடந்தேறியது, திருமணம்.

இப்படி, அம்பிகையின் கருணையால் வாழ்வில் கல்யாண வரம் கிடைக்கப் பெற்றவர்கள் எத்தனையோ பேர். வாழ்க்கையையே வரமாக வாய்க்கப் பெற்றவர்களும் இருக்கிறார்கள்.  

'நமக்கு என்ன குறையோ, அதைச் சொல்லிக் கண்ணீர் விட்டு அம்பாளின் சந்நிதியில் முறையிட்டால் போதும்.... சீக்கிரமே நம்ம வாழ்க்கையில் விடிவுகாலம் வந்துடும்’ என்று பக்தர்கள் அனைவரும் பெருமிதமும் நம்பிக்கையுமாகச் சொல்கிறார்கள்.

அந்த அம்பிகை ஸ்ரீகாமாட்சி அம்பாளாகக் குடிகொண்டு அருளாட்சி செய்யும் இடம், தேனி- அல்லிநகரம். இங்கே, வீரப்ப ஐயனார் கோயிலுக்குச் செல்லும் வழியில், சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீகாமாட்சி அம்பாள் திருக்கோயில்.

காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாளின் சக்தி பெற்ற குங்குமத்தைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து, அதன் மேல் அமைக்கப்பட்ட பத்ம பீடத்தில் அமர்ந்தபடி அழகு ததும்பக் காட்சி தருகிறாள், ஸ்ரீகாமாட்சி அம்பாள்.

இங்கே நடைபெற்ற கும்பாபிஷேக வைபவத் தின்போது, காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாள் உடுத்திக்கொண்ட புடவையைப் பூஜித்து, இந்தக் கோயிலின் அம்மனுக்குச் சார்த்தி, சிறப்பு பூஜை செய்துள்ளனர். எனவே, காஞ்சி ஸ்ரீகாமாட்சியே இங்கு உறைந்து அருள்பாலிக்கிறாள் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், கல்யாண வரம் வேண்டியும் பிள்ளை வரம் கேட்டும் வருகிற பக்தர்கள் ஏராளம். கருவறையில், மூலவருக்கு முன்னே உள்ள மகாமேரு மகத்துவம் வாய்ந்தது. எனவே, அம்பாளுக்கு அர்ச்சனை நடைபெறும்போது அப்படியே மகாமேருவுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பிறகு, அம்மனின் பிரசாதமாகத் தரும் குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று, பூஜையறையில் வைத்து, தினமும் நெற்றியில் இட்டுக்கொண்டால், வீட்டில் சுபிட்சம் நிலவும்; வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்

இங்கு நவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்படு கிறது. முதல்நாளில், சிறுமியைப் போல அம்பிகைக்கு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர். அடுத்தடுத்து அம்பிகையின் வளர்ச்சியைக் குறிக்கும் வகையில், அலங்காரம் அமைந்திருக்கும் என்பது சிறப்பு.

பௌர்ணமி நாளில், ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு விசேஷ பூஜைகள் உண்டு. அப்போது திருவிளக்கு பூஜை, ஸ்ரீலலிதா சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெறும்.  கல்வி-கேள்வியில் ஞானத்துடன் திகழ, விரும்பிய வேலை கிடைக்க, பணியில் பதவி உயர்வு கிடைக்க இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள்.

திரிதள விமானத்துடன் கட்டப்பட்ட கோயில் இது. அம்பாள் சந்நிதி கோஷ்டத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீமகா லட்சுமி, ஸ்ரீதுர்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். பிராகாரத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீஅஞ்சலி ஆஞ்சநேயர், நவக்கிரகம், சாத்தாவுராயன், சாது கருப்பர் ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.

கட்டுரை, படங்கள்: ஆதவன்