Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள் - மேஷம் முதல் கன்னி வரை

- ஜோதிடர் சந்திரசேகர பாரதி

மேஷம்:

உங்கள் ராசிக்கு ராகு 6-ஆமிடத்துக்கும் கேது 12-ஆமிடத்துக்கும் மாறியிருக்கிறார்கள். ராகு அர்த்த திரிகோணமான 6-ல் உலவுவதால் பொருளாதார நிலை உயரும் குடும்ப நலம் சீராகும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். தொழில் முன்னேற்ற முயற்சிகள் கைகூடும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும், வர்த்தகம் விருத்தி அடையும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். பயணம் சம்பந்தமான இனங்கள் லாபம் தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

கேது 12-ல் உலவுவதாலும் குரு பார்வையைப் பெறுவதாலும் ஆன்மிக மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். சாதுக்கள், மகான்கள் ஆகியோரது தரிசனம் கிட்டும். மோட்ச சாதனங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வப் பணிகளுக்காகச் செலவு செய்வீர்கள். நல்ல இடத்துக்கு மாற்றம் உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புக் கூடிவரும். நல்ல உறக்கம் வரும். அதில் நல்ல கனவுகளையும் காண்பீர்கள். நல்லவர்களின் நட்புறவு கிடைக்கும். மந்திர, தந்திர, யந்திர, புராண, இதிகாச, சாஸ்திர, வேத விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மூத்த சகோதர, சகோதரிகளின் முன்னேற்றம் தடைப்படும். வாழ்க்கைத்துணைவருக்காக அதிகம் செலவு செய்ய வேண்டிவரும். கூட்டாளிகளிடம் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. விட்டுக் கொடுத்துப் பழகுவது நல்லது. மக்களால் மன வருத்தம் உண்டாகும். 2014 நவம்பர் 2 முதல் தொழில் ரீதியாகப் பிரச்னைகள் ஏற்படும். கடுமையாக உழைக்க வேண்டிவரும். வீண்பழி சுமத்தப்பட நேரலாம்; எச்சரிக்கை தேவை. 13-7-2015 முதல் குரு 5-ஆமிடம் மாறுவதால் மக்கள் நலம் சீராகும். த்டை, தாமதப்பட்டிருந்த சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும்.

கேதுவுக்குப் பிரீதியாக விநாயகரை வழிபடவும். முடிந்தவர்கள் கணபதி ஜப, ஹோமத்தைத் தங்கள் இல்லத்திலேயே வேத விற்பன்னர்களைக் கொண்டு செய்து கொள்ளலாம்.

ரிஷபம்:

உங்கள் ராசிக்கு 5-ஆமிடத்துக்கு ராகு மாறி இருப்பது சிறப்பாகாது. கேது 11-ஆமிடத்தில் உலவுவது விசேடமாகும். ராகுவால் அந்தஸ்தும் மதிப்பும் குறையும். புத்திர, புத்திரிகளால் அனுகூலமிராது. தந்தை வழி தாத்தாவுக்கும் தாய் மாமனுக்கும் பிரச்னைகள் ஏற்படும். குழந்தைகளின் நலம் பாதிக்கும். பூர்விகச் சொத்து சம்பந்தமான செலவுகள் ஏற்படும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அதன் மூலம் மன அமைதியும் கிடைக்கும். தொலைதூரத்தில் உள்ளவர்களால் அனுகூலமிராது.

கேது 11-ஆமிடத்தில் உலவுவதால் ஞான மார்க்கத்திலும் பக்தி மார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும். ஆதாயம் கூடும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். தாய் வழி பாட்டனாரால் அனுகூலம் உண்டாகும். த்யானம், யோகா, ஜோதிடம் போன்ற இனங்களால் லாபம் கிடைக்கும். ஜலப்பொருட்கள் மூலம் ஆதாயம் வந்து சேரும். ஞானிகள், மகான்கள் ஆகியோரது ஆசிகள் கிடைக்கும். சாஸ்திர ஞானமும் அதனால் பயனும் கிடைக்கும். வேதம்  படித்தவர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும்.

மருத்துவச் செலவுகள் சற்று கூடும் நேரமிது. அதிர்ஷ்டத்தை நம்பி ஏமாற வேண்டாம். சூதாட்டங்களில் ஈடுபடலாகாது. தொழில் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். தொழிலில் புதியவர்களின் வருகையால் உங்களின் முன்னேற்றம் பாதிக்கும்.  ஏற்றுமதி-இறக்குமதி இனங்களைச் சேர்ந்தவர்கள், பயணம் சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியமாகும். சொத்துக்கள் சம்பந்தமாகவும் உடல் ஆரோக்கியத்துக்காகவும், மக்கள் நலனுக்காகவும் அதிகம் செலவுகள் ஏற்படுவதுடன் பிரச்னைகளும் உண்டாகும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

ராகுவுக்குப் பிரீதியாக விஷ்ணு துர்கையை வழிபடவும். திருநாகேஸ்வரம், பட்டீஸ்வரம் ஆகிய தலங்களுக்குச் சென்று வழிபடுவது நல்லது.

மிதுனம்:

உங்கள் ராசிக்கு 4-ல் ராகு உலவுவது விசேடமாகாது. கேது 10-ல் உலவுவது சிறப்பாகும். ராகுவால் உடல் நலம் பாதிக்கும். அதிகம் அலைந்து திரிய வேண்டிவரும். தாய் நலனிலும் கவனம் செலுதத வேண்டிவரும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். சுகம் குறையும். வீட்டில் ஒன்று மாறி மற்றொன்றாகப் பிரச்னைகள் ஏற்பட்ட வண்ணமிருக்கும். வாகனப பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். கால்நடைகளால் ஆதாயமிராது. நண்பர்கள், உறவினர்களால் மன அமைதி குறையும். முக்கியமானவர்களை விட்டுப் பிரியவும் நேரலாம்.

கேது 10-ல் குருவின் வீட்டில், குரு பார்வையுடன் உலவுவதால் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணமுடியும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். பண வரவு அதிகமாகும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். ஜோதிடம், ஆன்மிகம், அறநிலையம் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஜலப் பொருட்கள் லாபம் தரும். தொழில் ரீதியாக சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்.

தந்தையாலும், புத்திர, புத்திரிகளாலும் அதிகம் அனுகூலமிராது. அவர்களால் செலவுகள் ஏற்படுவதுடன் மன அமைதியும் குறையும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை நம்பி ஏமாற வேண்டாம். சகோதர, சகோதரிகளின் நலனில் கவனம் தேவைப்படும். எதிலும் எதிர்பார்த்த முழுமையான ஆதாயம் கிடைப்பது கடினமாகும். போட்டிப் பந்தயங்கள், விளையாட்டு விநோதங்களில் ஈடுபடும்போது பாதுகாப்பு தேவை. 13-7-2015 முதல் குரு 3-ஆமிடம் மாறுவதால் கேதுவை குரு பார்க்கும் நிலை விலகும். பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வழக்கு, வியாஜ்ஜியங்களில் ஈடுபட வேண்டிவரும். சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும்.

துர்கை அம்மனை வழிபடுவது நல்லது. ராகு காலத்தில் துர்கா கவசம், ஸ்லோகம் சொல்வது சிறப்பாகும்.


கடகம்:

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு உலவுவது விசேடமாகும். கேது 9-ஆமிடத்தில் உலவினாலும் குரு வீட்டில் அமர்ந்து, உச்ச ராசியில் உள்ள குருவின் பார்வையைப் பெறுவதால் நலம் புரிவார். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். புதியவர்களது தொடர்பு நலம் சேர்க்கும். பயணம் சம்பந்தப்பட்ட இனங்கள் லாபம் தரும். தகவல் தொடர்பு இனங்களால் அதிக ஆதாயம் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி, போக்குவரத்துச் சாதனங்கள், தோல் பொருட்கள் ஆகியவற்றால் லாபம் கூடும். எதிர்ப்புக்கள் குறையும். எதிர்பாராத தனப்பிராப்தி உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.

கேது 9-ல் உலவுவதால் புனித தலங்களுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். தந்தை நலம் சீராக இருந்துவரும். புனித நதிகளில் நீராடும் பாக்கியம் கிட்டும். ஞானிகள், மகான்கள் ஆகியோரது ஆசிகள் கிடைக்கும். தர்ம குணம் வெளிப்படும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். வேதம் படிப்பவர்களுக்கும், படித்தவர்களுக்கும் மதிப்பு உயரும். மந்திர, தந்திர, யந்திர காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

இந்த நேரத்தில் தன் சுகம் பாதிப்பதுடன், தன் தாயாரின் சுகமும் பாதிக்கும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். தொழிலில் பின்னடைவு உண்டாகும். குறுக்கு வழிகளில் ஈடுபடுவதால் மதிப்பு குறையும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். 13-7-2015 முதல் குரு 2-ஆமிடம் மாறுவதால் குடும்ப நலம் சிறக்கும்.பொருள்வரவு கூடும் என்றாலும் கேதுவுக்கு குரு பார்வை விலகுவதால் தந்தை நலம் பாதிக்கும். பிதுரார்ஜித சொத்துக்களைப் பெற அரும்பாடுபட வேண்டிவரும். தாயாராலும் தாய் வழி உறவினராலும் தொல்லைகள் சூழும்.

விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

சிம்மம்:

உங்கள் ஜன்ம ராசிக்கு 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகாது. சர்ப்ப தோஷமாகும் இது. குடும்ப நலம் பாதிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றமுடியாமல் போகும். சில நேரங்களில் பொய் சொல்லவும் நேரலாம். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. கண் மற்றும் முகம் சம்பந்தமான உபத்திரவம் ஏற்படும். உணவு ஒவ்வாமை ஏற்படக்காரணம் உண்டு. அகால போஜனத்தைத் தவிர்க்கவும். நல்ல உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது.

கேது 8-ல் இருப்பதால் விஷத்தாலும், விஷ ஜந்துக்களாலும் பாதிப்பு உண்டாகும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. ஜல கண்டம் ஏற்பட நேரலாம். கேது ஜல ராசியில், அஷ்டமத்தில் உலவுவதால் நீர்நிலைகள் அருகிலும், வழுக்கும் இடங்களிலும் செல்லும்போது எச்சரிக்கை தேவை. பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்படும். கடன் உபத்திரவம் கூடும். வாழ்க்கைத்துணைவரின் குடும்பத்தாரால் பிரச்னைகள் சூழும். நோய் நொடி உபத்திரவங்களால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். ஜாதக பலமும் இல்லாதவர்களுக்கு விபத்து, கண்டம் ஆகியவை ஏற்படும்.

தந்தை நலனில் கவனம் தேவைப்படும். உடன்பிறந்தவர்களால் செலவுகள் ஏற்படும். போட்டிகளில் வெற்றி பெற இயலாமல் போகும். வாழ்க்கைத்துணைவரால் மன அமைதி கெடும். கூட்டாளிகளிடம் எச்சரிக்கை தேவை. பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். சுப காரியங்கள் நிகழத் தடைகளும் குறுக்கீடுகளும் உண்டாகும். மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். குடும்பப் பெரியவர்களின் (தாத்தா, பாட்டி) நலம் பாதிக்கும்.

வியாழக்கிழமைகளில் விநாயகரை வழிபடவும். கணபதிக்குரிய ஸ்லோகங்களைச் சொல்வது நல்லது. விஷ்ணு துர்கையை வழிபடவும்.

கன்னி:

உங்கள் ஜன்ம ராசியில் ராகுவும் 7-ஆமிடத்தில் கேதுவும் மாறியிருப்பது விசேடமாகாது. சர்ப்ப தோஷமாகும். வீண் அலைச்சல் அதிகமாகும். உடல் சோர்வு ஏற்படும். தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. மனத்தில் ஏதேனும் சலனமும் பயமும் ஏற்படும்.  விஷத்தாலும், விஷ ஜந்துக்களாலும் ஆபத்து ஏற்படும். பயணத்தால் சங்கடம் உண்டாகும். தீயவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. குறுக்கு வழிகளில் செல்லலாகாது. கெட்டபழக்க வழக்கங்களைத் தவிர்ப்பது நல்லது.

7-ல் கேது இருப்பதால் கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். எதிரிகள் இருப்பார்கள். நன்கு பழகியவர்களே உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். சண்டை, சச்சரவுகளில் ஈடுபாடு கூடும். கூட்டாளிகள் உங்களை விட்டுப்பிரிவார்கள். திடீர்க் கோபம் வரும். அதனால் மற்றவர்களது அதிருப்திக்கு ஆளாக நேரும். கேதுவை 11-ல் உள்ள குரு பார்ப்பதால் 12-7-2015 வரையிலும் நிலைமையைச் சமாளித்துவிடுவீர்கள். அதன்பிறகு குருவின் பார்வை கேதுவுக்குக் கிடைக்காமல் போவதால் பிரச்னைகள் அதிகமாகும்.

தன் குடும்பத்தாராலும், தன் வாழ்க்கைத்துணைவரின் குடும்பத்தாராலும் பிரச்னைகள் சூழும். வீண்வம்பு வேண்டாம். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். மருத்துவச் செலவுகள் சற்று கூடவே செய்யும். ஜாதகப்படி யோக பலனைத்தரும் தசை, புக்திகள் தற்சமயம் நடக்குமானால் நற்பலன்கள் உண்டாகும். ஜாதக பலமும் இல்லாதவர்கள் கிரக வழிபாட்டிலும் இறைவழிபாட்டிலும் ஈடுபடுவது நல்லது.

ராகுவுக்காக துர்கையையும், கேதுவுக்காக விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும். முடிந்தவர்கள் காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று வழிபடுவது நல்லது.