Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள் - துலாம் முதல் மீனம் வரை

- ஜோதிடர் சந்திரசேகர பாரதி

துலாம்:

உங்கள் ஜன்ம ராசிக்கு 12-ல் ராகுவும், 6-ல் கேதுவும் இடம் மாறி இருக்கிறார்கள். ராகுவின் சஞ்சாரம் சிறப்பாகாது. கேது 6-ல் குரு பார்வையுடன் இருப்பதால் நலம் புரிவார். எவ்வளவுதான் பண வரவு இருந்தாலும் செலவுகள் அதிகரித்து சேமிப்புக்கு இடமில்லாமல் போகும். வீண் அலைச்சல் ஏற்படும். பயணத்தால் அனுகூலம் இராது. தூக்கம் கெடும். கனவு தொல்லை தரும். விரும்பத்தகாத இடமாற்றம் உண்டாகும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களில் எச்சரிக்கை தேவை. தந்தை வழி உறவினர்களால் பிரச்னைகள் சூழும். செலவுகளும் ஏற்படும்.

6-ல் உள்ள கேது மன பலத்தைக் கூட்டுவார். காரிய சித்தி உண்டாகும். ஆன்மிக, அறநிலையப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஜோதிடர்களுக்கு வரவேற்பு கூடும். உச்ச ராசியில் உள்ள குரு 6-ல் உலவும் கேதுவைப் பார்ப்பதால் பண வரவு அதிகரிக்கும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். சாதுக்கள், மகான்கள் ஆகியோரது ஆசிகள் கிடைக்கும். குடும்ப நலம் சீராகும். உடல் ஆரோக்கியம் சீர்பெறும். கடல் மற்றும் நீர்நிலை சார்ந்த தொழில் வளர்ச்சி பெறும். இயந்திரப்பணிகள் லாபம் தரும்.

கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. விட்டுக் கொடுத்துப் பழகவும். கூட்டாளிகளால் பிரச்னைகள் சூழும். பயணத்தினால் பொருள் இழப்பு உண்டாகும். எதிரிகள் இருப்பார்கள். மக்கள் நலனில் கவனம் தேவை. மூத்த சகோதர, சகோதரிகளால் தொல்லைகள் சூழும். 13-7-2015 முதல் குரு 11-ஆமிடம் மாறுவதால் பொருளாதாரப் பிரச்னைகள் தீரும். எதிரிகள் பணிவார்கள். முயற்சி பலிதமாகும்.

காளி அல்லது துர்கைக்கு பசு நெய் தீபம் ஏற்றி வழிபடவும். திருநாகேஸ்வரம், பட்டீஸ்வரம் ஆகிய திருத்தலங்களுக்குச் சென்றுவருவது நல்லது.

விருச்சிகம்:

உங்கள் ராசிக்கு 11-ஆமிடத்துக்கு ராகு மாறுவது விசேடமாகும். கன்னியா ராகு பலம் மிகுந்தவர் ஆவார். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். வேற்று மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். பயணத்தின் மூலம் முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். கறுப்பு நிறப்பொருட்கள், தோல் பொருட்கள், போக்குவரத்துச் சாதனங்கள், பயணம் சம்பந்தப்பட்ட இனங்கள், ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் மூலம் அதிக ஆதாயம் கிடைக்கும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் கொண்டுவரும்.

கேது 5-ல் இருந்தாலும் குரு வீட்டில் இருப்பதாலும் உச்ச ராசியில் உள்ள குருவால் பார்க்கப்படுவதாலும் மக்கள் நலம் சீராகவே இருந்துவரும். மந்திர, யந்திர, தந்திர காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். குரு அருளால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு மந்திர உபதேசம் கிடைக்கும். சாதுக்கள் தரிசனமும் அவர்களது ஆசிகளும் பெற வாய்ப்புக் கூடிவரும்.

கண், கால், வயிறு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் குருவருளால் சமாளிப்பீர்கள். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகும். தாய் நலனில் கவனம் தேவை. செய்து வரும் தொழிலில் அதிக அக்கறை செலுத்தவும். 13-7-2015 முதல் குரு 10-ஆமிடம் மாறுவதாலும் கேதுவுக்குக் குருவின் பார்வை விலகுவதாலும் மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். மனத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் குறையும். மறதியால் அவதி உண்டாகும்.

வியாழக்கிழமைகளில் கேதுவுக்கும், கேதுவுக்கு அதிதேவதையான விநாயகரையும் வழிபடுவது நல்லது. சனிப் பிரீதி செய்து கொள்வதும் அவசியமாகும். ஆஞ்சநேயரை வழிபடவும்.

தனுசு:

உங்கள் ராசிக்கு 10-ஆமிடத்துக்கு ராகு இடம் மாறுகிறார். இது சிறப்பாகும். கேது 4-ஆமிடத்துக்கு வருவது அனுகூலமானதாகாது. செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். எதிரிகளின் கரம் வலுக்குறையும். அயல்நாட்டுத் தொடர்புடன் வர்த்தகம் செய்பவர்கள் லாபம் கூடப் பெறலாம். தோல் பொருட்கள் லாபம் தரும். பயணத்தால் நலம் உண்டாகும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டு பயன் பெறுவிர்கள். திடீர்ப் பொருள்வரவு உண்டாகும்.

கேது 4-ல் உலவுவதால் சுகம் குறையும். தாயாராலும் தாய் வழி உறவினராலும் பிரச்னைகள் சூழும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. வாகன பராமரிப்புச் செலவுகள் கூடும். நாற்கால் பிராணிகளால் நஷ்டம் ஏற்படும். பண்ணை வைத்து நடத்துபவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. மார்பு, இதயம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல்நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும்.

மூத்த சகோதர, சகோதரிகளின் நலம் பாதிக்கும். மக்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மறதியால் அவதி உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். நண்பர்கள், உறவினர்களால் பிரச்னைகள் சூழும். நவம்பர் 2-ஆம் தேதி முதல் செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். 13-7-2015 முதல் சங்கடங்கள் விலகத் தொடங்கும். நல்லோர் நேசத்தால் நலம் உண்டாகும். தடையும், தாமதமுமான சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். பொருளாதாரச் சிக்கல் விலகும்.

வியாழக்கிழமைகளிலும் சங்கடஹர சதுர்த்தியிலும் விநாயகருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவதன் மூலம் நலம் உண்டாகும்.

மகரம்:

உங்கள் ராசிக்கு 9-ல் ராகு உலவுவது சிறப்பாகாது. 3-ல் உலவும் கேதுவால் நலம் உண்டாகும். தந்தையாலும், தந்தை வழி உறவினர்களாலும் சங்கடங்கள் சூழும். தொலைதூரத் தொடர்பால் அதிகம் அனுகூலமிராது. மதாபிமானம் சற்று குறையும். மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்களைப் பெறக் குறுக்கீடுகள் இருக்கும். வீண் விவகாரங்களில் ஈடுபடலாகாது. தெய்வ காரியங்களிலும் தர்ம காரியங்களிலும் ஈடுபடுவதன் மூலம் நலம் உண்டாகும்.

கேது 3-ல் குருவின் வீட்டில், குருவின் பார்வை பெற்று உலவுவதால் மன பலம் கூடும். எதிர்ப்புக்களை வெல்லும் சக்தி உண்டாகும். பிரச்னைகள் குறையும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். கடல் சார்ந்த தொழிலில் வளர்ச்சி காணலாம். புதியவர்களது தொடர்பு நலம் தரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். அதனால் நன்மையும் உண்டாகும்.
ஞான மார்க்கத்திலும் பக்திமார்க்கத்திலும் ஈடுபாடு கூடும். மனக்குழப்பம் விலகும். தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். ஜலப்பொருட்கள் லாபம் தரும்.

தாய் நலனில் கவனம் தேவைப்படும். சுகம் குறையும். தொழில் சம்பந்தமான பிரச்னைகள் தலைதூக்கும். சிலருக்கு தொழில் ரீதியாக இடமாற்றம் உண்டாகும். சொந்தத் தொழிலில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். வீண்வம்பு வேண்டாம். சனிபலம் கூடியிருப்பதால் திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைக்கவே செய்யும்.  13-7-2015 முதல் குரு 8-ஆமிடம் மாறுவதாலும், கேதுவுக்கு குரு பார்வை விலகுவதாலும் சகோதர நலம் பாதிக்கும். மக்களால் மன அமைதிக் குறைவு ஏற்படும்.

ராகுவுக்கும் துர்கை அம்மனுக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது. வைஷ்ணவியை வழிபடவும்.

கும்பம்:

உங்கள் ராசிக்கு 2-ஆமிடத்தில் கேதுவும் 8-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகாது. மனக்குழப்பம், குடும்பத்தில் சலசலப்பு, உடல் ஆரோக்கியம் பாதிப்பு, கண் உபாதை, பேச்சில் தடுமாற்றம், பொருளாதாரப் பிரச்னை ஆகியவை ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். ஜாமீன் கொடுப்பதும் கூடாது. குடும்பத்தில் அந்நியரின் தலையீட்டைத் தவிர்ப்பது நல்லது. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். எதையும் யோசித்துப் பேசவும். குறுக்கு வழிகளில் செல்ல வேண்டாம். புதியவர்களை நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது.

பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. பயண விடுதிகள், பயண ஏற்பாடு, மற்றும் பயணம் சம்பந்தமான தொழில்களில் ஈடுபாடு உள்ளவர்கள் விழிப்புடன் இருந்தால் சங்கடங்களுக்கும் பொருள் இழப்புக்கும் ஆளாகாமல் தப்பலாம். கெட்டவர்களின் சகவாசம் அடியோடு கூடாது. பெரியவர்களின் அறிவுரைகளை மதித்து ஏற்றுக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும். அன்றாடம் செய்து வரும் பணிகளில் கூட அதிக கவனம் தேவை. அவசரப்போக்கு அடியோடு கூடாது.

சகோதர நலம் பாதிக்கும். மனதில் ஏதேனும் பயம் குடிகொள்ளும். போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. தந்தையால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். தொலைதூரத் தொடர்பால் அனுகூலமிராது. பாட்டனாரால் அவதி உண்டாகும். துக்கம், துயரம் ஆகியவை ஏற்படும். 13-7-2015 முதல் குரு 7-ஆமிடம் மாறுவதால் பிரச்னைகள் படிப்படியாக குறையத் தொடங்கும். தடைப்பட்டிருந்த, தாமதமான சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். நல்லவர்கள் உங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவார்கள்.

விநாயகரையும், துர்கையையும் வழிபடவும். குருப் பிரீதி செய்யவும். நாகேஸ்வரரை வழிபடவும்.

மீனம்:

உங்கள் ஜன்ம ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகாது. சர்ப்ப தோஷமாகும் இது. மனத்தில் சலனம் ஏற்படும். அலைச்சல் கூடும். தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். திடீர்க் கோபம் வரும். ஜலம் சம்பந்தமான உபத்திரவங்கள் உண்டாகும். கேது குருவின் வீட்டில் இருப்பதாலும் தன் ராசியில் உள்ள கேதுவைத் தன் உச்ச ராசியிலிருந்து குரு பார்ப்பதாலும் ஜன்ம கேதுவின் கெடுபலன்கள் குறையும். ஆன்மிக, அறநிலைய, ஜோதிடப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.

ராகு 7-ல் இருப்பதால் பிறரது அதிருப்திக்கு ஆளாக நேரலாம். அணுகுமுறையை நல்ல விதத்தில் அமைத்துக் கொள்வது நல்லது. கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கூட்டாளிகளால் பிரச்னைகள் சூழும். பயணத்தால் அதிகம் அனுகூலமிராது. எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் குரு பலத்தால் சமாளித்து விடுவீர்கள். வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தாரிடம் சுமுகமாகப் பேசிப் பழகவும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் ஈடுபடவும். முகம், வாய், பல், சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். சிறு விபத்து, கண்டம் ஏற்பட்டு விலகும். 13-7-2015 முதல் குரு 6-ஆமிடம் மாறுவதாலும் கேதுவுக்கு குரு பார்வை விலகுவதாலும் உடல் நலம் பாதிக்கும். மதிப்பும் அந்தஸ்தும் குறையும். பிறரால் அவமதிக்கப்பட நேரலாம். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. நேர்வழியில் செல்வது அவசியமாகும். பெரியவர்களது அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.

ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்ளவும். ராகுவுக்காக துர்கையையும், கேதுவிக்காக விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும். காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் சர்ப்பக் கிரகங்களின் மூலம் விலையக்கூடிய கெடுபலன்கள் குறையும்.