Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இமயத்தைக் கண்டேன்...!

கேதார்நாத், பத்ரிநாத் புனித பயணம் குறித்த அனுபவங்களை சிலிர்ப்புடன் விவரிக்கிறார் மயிலாடுதுறை வாசகி புவனா....

கேதார்நாத். அந்த அருமையான புண்ணிய தலத்துக்குச் சென்றது நாங்கள் செய்த பாக்கியம். பனி படர்ந்த மலை பின்னே இருக்க, வெள்ளை வெளேரென்று நிறைந்த அழகிய கோயிலைப் பார்த்ததுமே சிலிர்த்துப் போனோம். உள்ளே, சுயம்பு மூர்த்தமாய் இருந்தபடி, மொத்த உலகையும் கட்டிக் காத்து அருளும் தெய்வத்தைக் கண்டதுமே, ஒருகணம் நம் அத்தனைக் கர்வமும் ஆணவமும் பொடிப் பொடியாகிறது.

இவருக்கு நாமே நம் கையால் அபிஷேகம் செய்யலாம். பூக்களை அள்ளியெடுத்துச் சூடலாம். அவ்வளவு ஏன்... அவரை அப்படியே கட்டிக் கொண்டு, அழக் கூடச் செய்யலாம். அவரின் சந்நிதிக்கு அருகில், சுமார் ஒருமணி நேரம் என்னையே மறந்து உட்கார்ந்திருந்தேன்.

பிறகு, மெள்ள மீண்டு வந்தேன். அப்போது மனசு தக்கையாகி இருந்தது. வெளியே வரும்போது, இமயமலையின் தூய்மையான வெண்மை நிறம் கண்களில் பட்டது. மனசின் உள்ளேயும் அப்படியொரு வெண்மை படர்ந்திருந்ததை உணரமுடிந்தது. அதுமட்டுமா? அந்த வெண்மை, உலகின் எல்லா அணுக்களிலும் நிரம்பியிருப்பதையும் புரிந்து உணர்ந்து, தெளிந்தேன்.

அங்கே சட்டென்று இன்னொரு வெளிச்சப் பூக்கள்.... ஆமாம், கோயில் பிராகாரத்தில், அப்பர், சுந்தரரின் பாடல்களை அட்சரம் பிசகாமல் தமிழில் கல்வெட்டுகளாகப் பொறித்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் நினைவு வர... உடம்பே தூக்கிப் போட்டது எனக்கு!

அடுத்த நாள், பத்ரிநாத். அங்கிருந்து மிக நீண்ட பயணம் அது. வழி நெடுக, நமக்கு வழி சொல்லிக் கொண்டே வந்தன நதிகள். இதில் ஆச்சரியம்... ஆங்காங்கே நதிகள் சங்கமிக்கும் இடங்களைப் பார்த்துக் கொண்டே பயணிக்கலாம். குறுகலான மலைப்பாதை. கொஞ்சம் கொஞ்சமாக உயரம் ஏறிக் கொண்டே செல்ல, சுற்றிலும் மலைகள், மலைகள், மலைகள்தான்! ஆனால், இங்கே வெண்மை இல்லை. வேறு நிறம். பச்சைப் பசேலென பசுமை நிறைந்திருந்தன.

மாலை 6 மணி. கிடுகிடுக்கும் குளிர் எட்டிப் பார்க்கும் வேளையில், கோயிலை எட்டிப் பார்த்தோம். கோயில் வாசலில் வெந்நீர் ஊற்று. குளித்துவிட்டு, கோயிலுக்குள் சென்றோம். அங்கே பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தல். மணக்க மணக்க, ஸ்ரீலக்ஷ்மித் தாயாருடன் ஆனந்தமாய் வாழ்கிறார் ஸ்ரீபத்ரி நாராயணன். அவர்களை அமர்ந்த திருக்கோலத்தில் பார்த்ததும், அவர்களை மணமக்களாக நினைத்து, கற்பனை செய்து பார்த்தேன். இன்னும் குதூகலமானேன்.

மறுநாள், வியாசர் மகாபாரதம் எழுதிய இடம், பஞ்ச பாண்டவர்கள் தவம் புரிந்த இடம், அங்கு மட்டுமே பாய்ந்தோடிய  சரஸ்வதி நதி (இப்போது இல்லை), நிறைய குளிர், வியாசர் குகை, ஸ்வெட்டர் பின்னும் மனிதர்கள், இந்தியாவின் கடைசி டீக்கடை ( ஆமாம்...கொஞ்சம் தாண்டினால் மலை. மலையின் அடுத்தப் பக்கத்தில் சீனா) என ஒரு ரவுண்டு அடித்து விட்டு, நிறைய இடங்களில் கண்களாலும் காமிராவாலும் க்ளிக்கி விட்டு, கிளம்பினோம்.

மாலையில் ரிஷிகேஷ். அன்பு, அமைதி, ஆனந்தம் என மனம் நிறைந்திருக்க, கங்கையில் ஒரு குளியல். ஆரத்தியும் முடித்துவிட்டு, ஹரித்வார் திரும்பினோம். அதாவது ஆரம்பித்த இடத்துக்கே வந்தோம். கங்காதேவியின் காலடியில் விழுந்தோம்.

என் மொத்த வாழ்க்கைக்கும் இந்த ஒரு அனுபவம்போதும். இனி விளையாட்டாக வாழ்ந்து, கடந்துவிட என்னால் முடியும். என்னை வழிநடத்திய இயற்கைக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி.

- க.வி.புவனா