Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆடிக்கிருத்திகையில் வணங்கினால்... கடன் தொல்லை தீரும்!

யாமிருக்க பயமேன்!

சென்னை பாரிமுனை மற்றும் பூக்கடை பகுதிகள், வியாபாரத்துக்குப் பெயர் பெற்ற இடங்கள் மட்டுமல்ல; இங்கே, சின்னச் சின்னத் தெருக்களில்கூட, பிரமாண்டமான ஆலயங்களைப் பார்க்கலாம்! ஒவ்வொரு ஆலயமும் கொள்ளை அழகுடன் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. பூக்கடை ராசப்பச் செட்டித்தெருவில் உள்ள கந்தசுவாமி கோயிலும் அப்படியான ஆலயம்தான்!

வணிகர்களின் இஷ்டதெய்வமாகத் திகழும் முருகப்பெருமான், வாணிபம் நிறைந்த பகுதியில் கோயில் கொண்டிருப்பதில் ஆச்சரியம் இல்லைதான்!

இந்தப் பகுதி மக்கள் அனைவரும் தினமும் தங்கள் கடையைத் திறப்பதற்கு முன்பு, முருகக் கடவுளைத் தரிசித்துவிட்டு, 'இன்னிக்கி வியாபாரம் சிறப்பா இருக்கணும், முருகா’ என வணங்கிவிட்டுத்தான் கடையைத் திறக்கின்றனர்.

இது இன்று நேற்று என்றில்லை. சுமார் 400 வருடங்களுக்கு முன்பும் இந்தப் பகுதி வியாபாரத்தில் செழித்திருந்தது. இந்தப் பகுதியில் வாழ்ந்த வாணிபக்கார செட்டியார் ஒருவர், கந்தக்கடவுளின் மீது மாறாத பக்தி கொண்டிருந்தார். வார்த்தைக்கு வார்த்தை, முருகா முருகா என அழைத்தபடி, சஷ்டி கவசத்தைச் சொல்லிக்கொண்டே வியாபாரத்தில் ஈடுபடுவாராம்.

ஒருநாள்... செட்டியாரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், 'புற்றுக்குள் இருக்கிற என் விக்கிரகத்தை எடுத்து வந்து, இங்கே ஒரு கோயில் எழுப்பு. இந்தப் பகுதியை இன்னும் சுபிட்சத்துடன் வாழச் செய்கிறேன்’ என அருளி மறைந்தார்.

இதில் சிலிர்த்துப் போன அந்த வணிகர், தன் நண்பரையும் அழைத்துக்கொண்டு, கனவில் தெரிந்த இடம் எது, புற்று எங்கே இருக்கிறது என்று தேடிச்சென்றார். அப்படி அவர்கள் சென்றடைந்த இடம்... திருப்போரூர்.

அங்கே... முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் இடத்தைச் சுற்றிலும் தேடியபடி வந்தபோது, அங்கே ஓரிடத்தில் புற்றைக் கண்டனர். 'இதோ... இங்குதான் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கிறார். முருகா... முருகா...’ என அரற்றியபடி அந்தப் புற்றை இடிக்க... அங்கே, அழகிய முருகப்பெருமானின் விக்கிரகத் திருமேனி! அதைக் கண்டு சிலிர்த்தவர்கள், அங்கேயே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, முருகக்கடவுளை நமஸ்கரித்தனர்.

பிறகு விக்கிரகத்தை நெஞ்சில் அணைத்துக் கொண்டு, அங்கிருந்து நடந்தே தங்களின் ஊருக்கு வந்தனர். ஊரை நெருங்கும் வேளையில், சற்றே இளைப்பாறலாம் என்ற நோக்கத்தில், விக்கிரகத்தைக் கீழே வைத்துவிட்டு, சிறிதுநேரம் கழித்து விக்கிரகத் திருமேனியை எடுக்க முயன்றனர். ம்ஹூம்... அவர்களால் அசைக்கக் கூட முடியவில்லை!

பிறகு அந்தச் செட்டியார் நிதானமாக யோசித்தார். 'ஓ... கோயில் கட்டுவதற்கான இடத்தை முருகவேள் காட்டியருளிவிட்டார்’ என குதூகலித்தபடி சொல்ல... விஷயம் ஊர் முழுவதுக்கும் தெரிந்தது. அனைவரும் திரண்டு, 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என கோஷங்கள் எழுப்பினார்கள். பிறகு அந்த இடத்திலேயே சிறிய அளவில் கோயில் கட்டப்பட்டது.

அன்று முதல், ஸ்ரீகந்த ஸ்வாமி எனும் திருநாமத்துடன் பூக்கடைப் பகுதியைச் செழிக்கவும் சிறக்கவும் செய்து வருகிறார் கந்தக்கடவுள்! இன்றளவும் அந்தப் பகுதி மக்களையும் வணிகத்தையும் காத்தருள்கிறார் முருகப்பெருமான்!

அழகிய ஆலயம். இங்குள்ள மூலவர் பீடம் ஏதுமின்றி, மிகச் சிறிதாக, குழந்தை வடிவில் காட்சி தருகிறார். செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து, ஸ்ரீகந்தஸ்வாமியைக் கண்ணாரத் தரிசித்தால்... சகல பிரச்னைகளில் இருந்தும் விடுபடலாம் என்பது ஐதீகம்!

வருடத்தில்... ஐந்து பிரம்மோத்ஸவங்கள் பிரமாண்டமான முறையில் இங்கு நடைபெறுவதாகத் தெரிவிக்கின்றனர், பக்தர்கள். வைகாசியில் வசந்த உத்ஸவமும் ஆனி மாதத்தில் ஊஞ்சல் உத்ஸவமும் காண... தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் வணிகர்கள் வந்து தரிசிப்பார்களாம்!

ஆடிக்கிருத்திகை இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில், உச்சிக்கால பூஜையின்போது, மூலவருக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும். அந்த நாளில், முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகங்கள் செய்து, மனதாரப் பிரார்த்தனை செய்தால்... கடன் தொல்லை அகலும்; வீடு - மனை வாங்கும் யோகம் உண்டாகும் என்று பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள். அன்று மாலை, வெள்ளி ரதத்தில்  திருவீதியுலா வரும் கந்தனைக் காணக் கண் கோடி வேண்டும்!

இங்கு ஸ்ரீசொக்கநாதர், ஸ்ரீகுளக்கரை விநாயகர், ஸ்ரீநடராஜர் ஆகியோருக்கும் தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன. புரட்டாசி நவராத்திரியின் போது இங்கு நடைபெறும் திருவிளக்கு பூஜை பிரசித்தம்! சுமார் 2,000 பேர் கலந்துகொள்ளும் இந்த பூஜையிலும் விளக்கொளியிலும் தகதகவென மின்னும் ஆலயத்தைப் பார்க்கவே சிலிர்ப்பாக இருக்கும்!

ஆடிக்கிருத்திகை மற்றும் கந்தசஷ்டி நாளில் முருகனுக்கு அர்ச்சனை செய்து, வஸ்திரம் சார்த்தி வணங்கினால், வாழ்வில் எல்லா வளமும் பெறலாம் என்பது நம்பிக்கை. எனவே அந்த நாளில், ஆயிரக்கணக்கான அன்பர்கள், வஸ்திரத்துடன் வந்து அர்ச்சனை செய்வார்கள்! தைப்பூச நாளில், தேரோட்டம் சிறப்புற நடைபெறுகிறது. அன்றைய தினம், காவடி எடுத்தும் பால்குடம் ஏந்தியும் ஏராளமான பக்தர்கள் வந்து, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

பூக்கடை கந்தஸ்வாமியைத் தரிசியுங்கள்; கவலைகள் பறந்தோடும்; நம் வாழ்வையே மலரச் செய்வான் முருகப்பெருமான்!

          - சா.வடிவரசு
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்