Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்லாம் தருவாள் ஏழூரம்மன்! - ஆடி மாதம் அருள் தரிசனம்...

'ஏழு ஊர்களுக்கு ஏழு அம்மன்கள் எனும்படி சப்தகன்னியரும் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் விசேஷம் உண்டு எங்கள் ஏழூரம்மன் ஆலயத்துக்கு! சேரர் மற்றும் சோழ மன்னர்களால் திருப்பணிகள் கண்ட இந்த ஆலயம், ஒரு காலத்தில் ஏழு ஊர்களுக்கான வழிபாட்டுத் தலமாகத் திகழ்ந்தது. மீனவ மக்கள் தங்களின் குறைதீர வழிபட்டு கை தொழுதுநின்ற கோயிலும்கூட!’

- இப்படி, உள்ளூர் பக்தர்களின் சிலிர்ப் புக்கும் பெருமிதத்துக்கும் சொந்தமான ஏழூரம்மன் ஆலயம் அமைந்திருப்பது எங்கு தெரியுமா? ஒருகாலத்தில் தனித்தனி ஊர்களாகத் திகழ்ந்த பகுதிகள் எல்லாம் சென்னை மாநகரத்துடன் ஐக்கியமாகிவிட, சென்னை- நங்கநல்லூரில், எம்.ஜி.ஆர் சாலையில் அமைந்திருக்கிறது ஸ்ரீஏழூரம்மன் ஆலயம்.

சப்தகன்னியரே இங்கு பிரதான தெய்வமாக - அருள்மிகு ஏழூரம்மனாக அருள்பாலிக்கின்றனர். சாலையோரமாக அமைந்த கோயில் ஆதலால், இந்த வழியாகச் செல்லும் அனைவரும் தவறாமல் இந்த அம்மனை வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். சித்ரா பௌர்ணமி, புரட்டாசி நவராத்திரி விழா ஆகியன இங்கே சிறப்புற கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக ஆடி மாதம் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் அம்மனுக்கு விசேஷ அலங்கார- ஆராதனைகள் அமர்க்களப்படும். இந்தத் திருநாட் களில் வெவ்வேறு அலங்காரங்களில் அருள்கோலம் காட்டும் அம்மனைத் தரிசிக்கக் கண்கோடி வேண்டும்.

ஆடி மாதம் கடைசி ஞாயிறன்று அம்மனுக்குக் கூழ் சமர்ப்பித்து, பக்தர்களுக்கும் விநியோகம் செய்யப் படுகிறது. மேலும், ஆடி மாதத்தில் அன்னதானமும் இங்கே விசேஷம்! கோயில் அன்னதானத்துடன், அம்மனின் திருவருளால் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்களும், நேர்த்திக்கடன் பொருட்டு அன்னதானம் செய்து, அம்மனை வழிபடுகிறார்கள்.

இங்கு வந்து ஏழூரம்மனை வழிபட்டால்... வியாபார நஷ்டம், குடும்பப் பிரச்னைகள் முதலான அனைத்து குறைகளும் தீரும்; வாழ்வில் அடுத்தடுத்து ஏற்றம்தான் என நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். அதற்கு ஏற்ப, தன்னைத் தேடி வந்து வழிபடும் பக்தர்களை எந்தக் குறையுமின்றி வாழ வைக்கிறாள் ஸ்ரீஏழுரம்மன்.

தொடக்கத்தில் இங்கு உள்ள ஏழு கிராமங்களுக்கும் இதுவே கோயிலாக இருந்தது. இப்போது, இந்தப் பகுதியில் ஏராளமான கோயில்கள் வந்தாலும், ஏழூரம்ம னின் சிறப்பும் பக்தர்களின் வருகையும் இன்றளவும் குறையாமல் இருக்கிறது. வசதி வாய்ப்பின்மையால் பெரிய அளவில் கோயில் அமைக்காமல் இருந்த நிலை மாறி, தற்போது கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏழூரம்மனைத் தரிசியுங்கள். எல்லாம் தரும் வரப்பிரசாதி அவள்!

- சா.வடிவரசு
படங்கள்: க.கோ.ஆனந்த்