Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் கடலில் லட்சகணக்கான பக்தர்கள் புனித நீராடல்...

டி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கடலில் லட்சகணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

இந்துக்கள் மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில் விரதம் இருந்து தங்களது முன்னார்கள் நினைவாக வழிபாடு நடத்துவர். இவற்றில் ஆடி, தை, மாசி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் சிறப்பானதாகும். இந்த தினங்களில் நாடு முழுவதிலும் உள்ள குளங்கள், ஆறுகள், நதிகள், கடல்களில் புனித நீராடி, இறந்துபோன தங்கள் முன்னோர்கள் நினைவாக சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தி வழிபடுவர்.

ஆடி அமாவாசை தினமான இன்று நாடு முழுவதிலும் இருந்து ராமேஸ்வரம் வந்திருந்த லட்சகணக்கான பக்தர்கள் இன்று காலை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். இதன்பின், கடற்கரையில் அமர்ந்து தங்கள் குடும்பத்தின் நலனுக்காக சங்கல்ப பூஜையும், அதனை தொடர்ந்து இறந்து போன தங்கள் முன்னோர்கள் நினைவாக தர்பணம் செய்து வழிபாடு செய்தனர். அதன்பின், அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினர். அதனை தொடர்ந்து ஸ்ரீராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்து அமாவாசை விரதத்தை முடித்தனர்.

முன்னதாக இன்று காலை தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளிய அருள்மிகு ராமர், பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து அருள்மிகு பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கு வீதி உலா நடந்தது.

ஆடி அமாவாசை தினமான இன்று ஒரே நாளில் லட்சகணக்கான பக்தர்கள் திரண்டதால், கோயிலில் தீர்த்தமாடவும், சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கோயிலின் 4 ரத வீதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அமாவாசை தினத்தை முன்னிட்டு கோயில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அதனை தொடர்ந்து ஸ்படிகலிங்க பூஜையும் தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது.

இதன் பின் பக்தர்கள் தரிசனம் தொடர்ந்து நடந்து வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமம் இன்றி சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், மேலாளார் கஹாரின், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஷ்கார்கள் கமலநாதன், அண்ணாதுரை, ராதா உள்ளிட்ட திருக்கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

தீர்த்தமாட சென்ற பக்தர்களுக்கு அகில் இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்க உறுப்பினர்கள் அதன் தலைவர் அ.பாஸ்கரன் தலைமையில் தீர்தம் இறைத்து ஊற்றினர். ராமேஸ்வரம் வருகை தந்த பக்தர்களின் பாதுகாப்பிற்காக நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அமாவாசையை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேரூந்துகள் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டனர். குடிநீர் மற்றும் சுகாதார பணிகளை நகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டிருந்தனர்.


இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி