Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆடி மாத வழிபாடுகள்..!

ஆடிவெள்ளியில் அம்மனை வணங்குவோம்!

பருவ மாற்றத்தால் ஏற்படும் நோய்க்கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலை மற்றும் எலுமிச்சைக்கு உள்ளது. எனவே ஆடி மாதம் முழுக்கவே வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உகந்தவளாக அம்மனுக்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. வீதிக்கு வீதி உள்ள சிறிய அளவிலான கோயில்களாகட்டும் சமயபுரம், இருக்கன்குடி முதலான அம்மன் ஆலயங்களாகட்டும்... ஆடி மாதம் முழுவதுமே விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக, ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், திருமணமாகாத பெண்கள் குத்துவிளக்கினை அலங்கரித்து, தீபத்தில் அம்மனை ஆவாஹனம் செய்து, லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை செய்து மனதாரப் பிரார்த்தனை செய்தால், நல்ல கணவனை அடையலாம். ஆடி வெள்ளிக்கிழமைகளில், கன்யா பூஜை, ராகுகால பூஜை, நாகதோஷ பூஜை செய்வதால், குடும்பம் சந்தோஷமாக அமையும். இல்லத்தில் என்றும் மகிழ்ச்சி தங்கும்!

பித்ருக்கள் ஆசீர்வதிக்கும் ஆடி அமாவாசை (26.7.14)


தட்சிணாயண புண்ய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசை என்று போற்றப்படுகிறது. ஆடியில், சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறான். சிவ அம்சமான சூரியனும், சக்தி அம்சமான சந்திரனும் ஒன்று சேருவதால், சந்திரன் ஆட்சி பலம் அடைகிறது. சிறப்பான இந்த ஆடி அமாவாசையில் பித்ருக்களான நம் முன்னோர்களுக்கு தில தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது. நதியில் நீராடுவதும் சமுத்திர ஸ்நானம் செய்வதும் புண்ணியம் தரும்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில், முன்னோர்களுக்கு ஆராதனை செய்யும் வகையில், தர்ப்பணம் செய்வது மிகுந்த பலனைத் தரும். குறிப்பாக, ஆடி அமாவாசை நாளில், முன்னோர்களை வணங்கியும் அவர்களுக்குத் தர்ப்பணம் செய்தும் வழிபட்டால், நம் பாவமெல்லாம் தொலைந்து, நம் சந்ததியினர் சிறந்து வாழ்வார்கள் என்பது ஐதீகம்!

ஆடிப்பூரத்தில் ஸ்ரீஆண்டாள் தரிசனம்! (30.7.14)


ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம். ஸ்ரீலட்சுமியின் மறு அவதாரமாக, ஸ்ரீஆண்டாள் ஆடிமாதத்தில் அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.

இந்த நாளில், சுமங்கலிப் பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்து உபசரித்தால், ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீரங்கமன்னார் ஆலயம், மன்னார்குடி ஸ்ரீராஜ கோபால ஸ்வாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் முதலான வைணவத் தலங்களில் ஆடிப்பூர விழா விமரிசையாக நடைபெறும். குறிப்பாக இந்த ஆலயங்களில், ஆடிப்பூர விழாவானது பத்து நாள் திருவிழாவாக அமர்க்களப்படும்.

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் மூன்று நாட்கள் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பார்கள்!

ஆடி சுவாதியில் கருட தரிசனம்! (4.8.14)


ஆடி மாதத்தில் வருகிற சுவாதி நட்சத்திர நன்னாள், பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வாரின் ஜென்ம நட்சத்திரம் என்பார்கள். எனவே வைணவத் தலங்களில், ஆடி சுவாதி நாளில், கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறும்.

அதேபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளை கொட்டு விழா பத்து நாள் விழாவாக கோலாகலமாக நடைபெறும். அந்த நாட்களில், அம்பாள் வீதியுலா வரும் அழகைத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்.
ஆடி சுவாதியில், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும் வீதி புறப்பாடு ஆகியவை நடைபெறும். இந்த நாளில், சிவனடியாருக்கு அருளிய சிவனார், நம்மையும் காத்தருள்வார். கருட பகவானை தரிசித்தால், தோஷங்கள் நீங்கும், மாங்கல்யம் பலம் பெருகும்!

- எஸ்.பாஸ்கரன், சென்னை